×

மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கான நடவடிக்கை: சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம் தலைமையில் நேற்று சென்னை ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 12,505 மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 21 வகையான மாற்றுத்திறனாளிகளின் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில், மாற்றுத்திறனாளிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் செல்வதற்கு ஏதுவான உள் மற்றும் வெளியேறும் வழிகள், சாய்வுதளம் மற்றும் கைப்பிடிகள், வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பிரத்யேக வாகன நிறுத்துமிடம், சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற நடைபாதை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தல், வாக்காளர் உதவி மையம், முதலுதவி பெட்டி, ஆம்புலன்ஸ் சேவைகள் ஏற்படுத்துதல், குடிநீர், கழிவறை, வாக்குச்சாவடி நுழைவாயிலில் எளிதில் அணுகக் கூடிய வழிகாட்டுதல்கள் மற்றும் அடையாளப் பலகைகள் உள்ளிட்ட தேவையான வசதிகள் அமைத்திட வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூஷ்ணாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் சரவணக் குமார் (வடசென்னை மாவட்டம்), சீனிவாசன் (தென்சென்னை மாவட்டம்), மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சுமிதா சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Chennai Ribbon ,Additional ,District Election Officer ,Karpagam ,
× RELATED மருத்துவ காரணத்துக்காக ரூ.50,000க்கு மேல்...