×

தியாகராஜ சுவாமிகளின் ஞானப் பரம்பரை

தியாகராஜ ஸ்வாமிகள்!

கர்நாடக சங்கீதத்தின் எல்லை களைத் தொட்டவர்; ஆழங்கண்டவர்! நீளம், அகலம், உயரம் என எந்த விதத்திலும் ஈடு செய்ய முடியாத ராம பக்தி கொண்டவர். தெய்வங்களிடம் மட்டும் அல்லாது மனிதர்களிடமும் எந்த விதமான உயர்வு தாழ்வும் பார்க்காதவர்; கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர் – ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள்!

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தியாகராஜரின் வாழ்க்கை வரலாறு மிகவும் விரிவானது. முடிந்தவரை சுருக்கமாகப் பார்க்கலாம்.

தியாகராஜரின் கொள்ளுப் பாட்டனார் பஞ்சநதப் பிரம்மம் என்பவர். அவருக்கு சதாசிவ பிரம்மம், சதானந்த பிரம்மம், சச்சிதானந்த பிரம்மம், பால பிரம்மம், கிரிராஜ பிரம்மம் என ஐந்து புத்திரர்கள் இருந்தார்கள். இவர்களில் முதல் இருவரும் இளம் வயதிலேயே யோகிகளாகி திருவண்ணா மலைக்கு அருகிலுள்ள சதானந்தக் கோனை எனும் குகைக்குள் சென்றவர்கள் திரும்பவே இல்லை. இந்த ஐவரில் கடைக்குட்டியாக இருந்த கிரிராஜப் பிரம்மம் கவிதையும் இசை பாடல்களும் இயற்றுபவராக இருந்ததால், கிரிராஜ கவி என அழைக்கப்பட்டார்.

சஹாஜி மகாராஜா (1684-1710) ஆண்ட காலத்தில் சமஸ்தான வித்வானாக இருந்தார். இப்படிப்பட்ட கிரிராஜ கவிக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் ராமப் பிரம்மம் என்பவர் புகழ்பெற்ற புலவராக இருந்தார். அவர் மனைவி சீதம்மா. இந்த ராமப் பிரம்மம் – சீதம்மா தம்பதிகளின் மூன்று புதல்வர்களில் ஒருவர்தான் தியாகராஜ சுவாமிகள்.

பஞ்சாபகேசன், ராமநாதன், தியாக ராஜன் எனும் அந்த மூவரில் ராமநாதன் என்பவர் சிறுவயதிலேயே காலமாகி விட்டார். பஞ்சாபகேசன் ஜல்பேசன் என அழைக்கப்பட்டார். (இனி தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கலாம்) ராமப் பிரம்மம் திருவாரூரில் வாழ்ந்து வந்த காலம்! இரு புத்திரர்கள் அவருக்கு இருந்தார்கள். ஒருநாள்… ராம பிரம்மத் தின் கனவில் திருவாரூரில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமானான தியாகராஜப் பெருமான் எழுந்தருளி, ‘‘சங்கீத சாஸ்திரத்தில் மிகவும் திறமைசாலியான ஒருவன், உனக்குக் குழந்தையாகப் பிறப்பான்” என்று அருளி மறைந்தார். அதன்படியே சர்வஜித் வருஷம் – சித்திரை மாதம் 25ஆம் நாள் – பூச நட்சத்திரம் – கடக லக்னம் – திங்கட்கிழமை (மே மாதம் நான்காம் நாள் 1767). திருவாரூர் தியாகராஜரின் அருளாசியால் அவதரித்த அந்தக் குழந்தைக்கு தியாகராஜன் என்றே பெயரிட்டார்கள் பெற்றோர்கள்.

ராம பிரம்மம்-சீதம்மா என்று பார்த்தோம் அல்லவா? அவர்களில் ராமப்பிரம்மத்தின் முன்னோர்களைப் பற்றியும் அவர்களது ஞானத்தைப் பற்றியும் ஏற்கனவே பார்த்தோம். சீதம்மாவும் (தியாகராஜரின் தாயார்) ஞானப் பரம் பரையில் வந்தவர் தான். அவரது தந்தை வீணை காளஹஸ்தி ஐயர்; அரண்மனையில் சமஸ்தான வித்வானாக இருந்தார். அவருக்கு மகளாக பிறந்து சங்கீதத்தில் பெரும் திறமைசாலியாக விளங்கினார் சீதம்மா.புரந்தரதாசர் கீர்த்தனைகள் பலவும் அவருக்குப் பாடமாக இருந்தன. இப்படிப்பட்ட சீதம்மாவிற்குப் பெற்றோர்கள் இட்ட பெயர் சாந்தம்மா. இப்பெயர் ராமப்பிரம்மத்தைத் திரு மணம் செய்து கொண்ட பிறகு, அவருடைய பெயருக்கு ஏற்றாற் போல் சீதம்மா என மாற்றப்பட்டது.

தஞ்சை மன்னர் ராமப் பிரம்மத்தின் அறிவுத்திறனையும் தூய்மையான பக்தியையும் நன்கு உணர்ந்தவர். அதன் காரணமாக ராமநவமி உற்சவத்தின்போது ராம பிரம்மத்தைத் தன் சபையில் ராமாயணத்தைப் படித்து விரிவுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார். அப்போதெல்லாம் தன் தகப்பனாருடன் சென்று, தியாகராஜர் ராமாயண ஸ்லோகங்களைப் படிப்பார். அவருடைய தந்தை பொருள் கூறுவார். இதன் காரணமாகத் தியாகராஜருக்கு சிறுவயதில் இருந்தே ராமாயணத்தின் பொருளும் நயமும் நன்றாகப் பழகி விட்டன.

மன்னர் ராமபிரம்மத்திற்குத் தஞ்சை ஜில்லா பசுபதி கோவிலில் சிறிதளவு நிலமும், திருவையாறு எனும் திருத்தலத்தில் ஒரு வீடும் சாசனம் செய்து கொடுத்தார். தமது பிள்ளைகளுக்காக ராமபிரம்மம் விட்டுச் சென்ற சொத்து இந்த நிலமும் வீடும் தான். ராம பிரம்மம் தன் குடும்பத்தைத் திருவாரூரில் இருந்து திருவையாறு எனும் திருத்தலத்திற்கு மாற்றிக் கொண்டார். சிறுவயதிலிருந்தே தியாகராஜரின் தெய்வ பக்தியைக் கண்ட ராம பிரம்மம் தாம் பூஜைசெய்து வந்த ராம பட்டாபிஷேக விக்கிரகங்களைத் தியாகராஜரிடம் காட்டி, ‘‘தியாகராஜா! இந்த ராம பட்டாபிஷேக விக்கிரகங்களை இனி நீயே பூஜை செய்!” என்றார்.

தந்தை சொல்லி விட்டாரே என்பதற்காகத் தியாகராஜர், உடனே பூஜையில் ஈடுபடவில்லை. தந்தை பூஜை செய்யும்போது, கூடவே இருந்து சுற்றுப்புற செயல்களை எல்லாம் பொறுப்போடு செய்யத் தொடங்கினார். வெளியில் சென்று நந்தவனங்களில் இருந்து பூக்களைப் பறித்து பூக்குடலையில் கொண்டு வந்து வைப்பது; தெய்வ விக்கிரகங்களில் இருக்கும் பழைய பூக்களை எடுப்பது; அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் கொண்டு வந்து வைப்பது என எல்லா விதங்களிலும் பூஜைக்கு உண்டான காரியங்களை கவனித்து வந்தார்.

வாடிப்போன மலர்களையும் மலர் மாலைகளையும் எடுக்கும்போது, ‘‘ஆகா! தெய்வங்களுக்கு வாடக் கூடிய மலர்களையா அணிவித்துப் பார்ப்பது? வாடாத மலர்களாலான பாமாலைகளை அல்லவா சூட்ட வேண்டும்?” என்று நினைப்பார்.அந்த நினைப்பைத் தெய்வம் செயல்படுத்தியது. ஆம்! ஒருநாள் தியாகராஜர் பூப்பறிக்கச் செல்லும்போது வழியில் சொண்டி வீணை வேங்கட ரமணதாசர் என்பவர் தம் மாணவர்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கேட்டார். அவ்வளவுதான்! தம்மை அறியாமல் அங்கேயே நின்று விட்டார் தியாகராஜர். அங்கே பாடப்படும் பஜனை பாடல்களும் கீர்த்தனைகளும் அவர் மனத்தைக் கவர்ந்தன. நாளாக நாளாக இப்பழக்கம் தொடர்ந்தது. ஒருநாள் அவ்வாறு பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது மெய்மறந்து நீண்ட நேரம் நின்று விட்டார், தியாகராஜர். நேரம் போனதே தெரியவில்லை.

பூஜை செய்யக் காலதாமதம் ஆனதால், ராமபிரம்மம் பிள்ளையைத் தேடி வந்தார். வந்தவர் தியாகராஜரின் நிலையை பார்த்தார்; புரிந்து கொண்டார்; தியாகராஜரை, வேங்கடரமண தாசரிடமே சங்கீதம் கற்க ஏற்பாடு செய்தார். எந்த வேங்கடரமண தாசரின் சங்கீதத்தில் தியாகராஜர் தம்மை மறந்திருந்தாரோ, அவரிடமே மாணவராக இருந்து சங்கீதம் கற்கத் தொடங்கினார். வேங்கடரமண தாசர் சாதாரணமானவர் அல்ல; சங்கீதத்தில் மகா நிபுணர்; சங்கீத வித்வான்களை மிகவும் ஆதரித்தவர்; அரசரிடம் சொல்லி நாள்தோறும் ஒவ்வொரு வித்வானாக அரண்மனை சபாமண்டபத்தில் பாடும்படி ஏற்பாடுகள் செய்து சன்மானங்கள் கொடுக்கச் செய்தார். அதன் மூலம் 360 வித்வான்கள் பெரும் பயன் அடைந்தார்கள். அந்த ஒவ்வொரு வித்வானும் ஒவ்வொரு ராகத்திலும் சங்கீதப் பாணியிலும் ஒளி விட்டுப் பிரகாசித்தார்கள். தோடி சீதாராமய்யா, அடாணா அப்பையா, சங்கராபரணம் நரசையா முதலியவர்கள் மிகவும் பிரபலமாக ஆனார்கள்.

அப்படிப்பட்ட வேங்கட ரமணதாசரிடம் தியாகராஜர் மிகவும் பக்தியோடு பொறுப்போடு சங்கீதம் கற்றார்; குருவின் அன்பிற்குப் பாத்திரமானார். அப்போதே அவருக்குப் பாடல்கள் இயற்றும் ஆர்வம் உண்டானது. அவ்வப்பொழுது ஏதாவது எழுதி சங்கீதத்தில் பெரியவர்களிடம் காண்பிப்பார். சிறுசிறு துதிகளாக அமைந்த அவைகளைக்கண்டு பெரும்பெரும் வித்வான்களும் பாராட்டினார்கள். அவருடைய பாடல்களில் நமோ நமோ ராகவாய – என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலை தியாகராஜர் தன்வீட்டுச் சுவற்றில் எழுதி வைத்திருந்தார். மகன் எழுதிய பாடலைக் கண்ட ராமப்பிரம்மம் அதை அப்படியே பதிவெடுத்து சங்கீத நிபுணர்களிடம் காட்டினார்.

அவர்களும் பார்த்துவிட்டு வியந்து மனதார ஆசி கூறினார்கள்.இவ்வாறு சங்கீதத்தில் மிகவும் ஆர்வமாக இருந்த தியாகராஜர் ஒரு வருடத்திலேயே சங்கீதத்தில் பெரும் திறமை பெற்றார். அதைக்கண்டு குருநாதரே வியந்தார்; ‘‘அப்பா! தியாகராஜா! நான் உன்னை மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன். நீ சங்கீதத்தில் பெரும் திறமைசாலியாக ஆகிவிட்டாய். நீ என் சீடனாக அமைந்தது எனக்கு மிகவும் பெருமை” என்று ஆசி கூறினார்.இவ்வாறு தியாகராஜர் சங்கீதத்தில் மகாமேதாவியாக விளங்கிய அந்தக் காலத்தில் ஒரு பிரச்னை பரவி இருந்தது. அதைப் பார்த்தார் தியாகராஜர்.

அது என்னவெனில்… பாகவதர்கள் எல்லாம் ஒன்றுகூடி மக்கள் மத்தியில் பாடல்கள் பாடி நாம சங்கீர்த்தனம் செய்து, மக்களிடையே பக்தியைப் பரப்பிக் கொண்டு வந்தார்கள். அதேசமயம் சங்கீதத்தில் திறமை பெற்றிருந்த சங்கீத வித்வான்கள், தங்கள் சங்கீதத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார்கள். பிரச்னை எங்கு தோன்றியது என்றால், சங்கீத வித்வான்களைப் பொறுத்த வரையில், ‘‘பாகவதர்களிடம் சங்கீதத் திறமையில்லை. ஆகவே, அவர்கள் செய்வது தவறு!” என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதேசமயம் பாகவதர்களோ, ‘‘சங்கீதம் என்பதை விட பக்தி மயமாகப் பகவானுடைய நாமங்களைச் சொல்வதுதான் உயர்ந்தது. அதுதான் முக்தி கொடுக்கும்” என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘பளிச்’சென்று சொல்லப் போனால், இவர்கள் சொல்வதை அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை; அவர்கள் சொல்வதை இவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. மக்களிடையே நல்லதைச் சொல்லிப் பரப்புவதற்காக இருக்க வேண்டிய இந்த இரு குழுக்கள் இடையே ஒற்றுமை – சமாதானம் என்பது இல்லாமல் போனது.

இதன் காரணமாக மக்களும் இரண்டு பிரிவாக இருந்தார்கள். அந்த நேரத்தில்தான் தியாகராஜர், ‘‘பக்தியில்லாத சங்கீதத்தால் பலனில்லை. அதேசமயம் சுருதி சுத்தமாக பாடக்கூடிய சங்கீதம் பகவானிடமே கொண்டு சேர்க்கும்” என்று சொல்லி அந்த இரு பிரிவினர்களுக்கிடையே, தானே அனுபவப் பூர்வமாகக் கொண்டு வந்து ஒற்றுமையை உண்டாக்கினார். இந்தக் காலத்தில் அவர் வயது 14. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வேங்கடரமணதாசர் மேலும் வியந்தார்.

‘‘இந்தத் தியாகராஜன் எவ்வளவு பக்குவமாக இருக்கிறான்! சங்கீதத்தில் மட்டும்தான் திறமை என்று நினைத்தோம். ஆனால் இவனோ, சங்கீதத்தில் மட்டுமல்ல; அந்த சங்கீதத்தின் மூலமாக சமாதானத்தையும் ஒற்றுமையையும் விதைக்கிறானே!” என்று ஆச்சரியப்பட்டார். அதேசமயம் தியாகராஜர், சங்கீத மகாமேதாவிகளாக இருந்த புரந்தரதாசர் – ராமதாசர் – தாளப்பாக்கம் சின்னையா ஆகியோரின் கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டும், ராம விக்ரக ஆராதனைகளைச் செய்து கொண்டும் வாழ் நாளைக் கழித்து வந்தார். வயது 18 ஆனது.

தியாகராஜரின் அருங் குணங்களைக் கண்ட தகப்பனார் ராம பிரம்மம் மனம் மகிழ்ந்தார்; தான் வாழ்ந்திருக்கும் காலத் திலேயே தியாகராஜருக்குத் திருமணம் செய்துவிட எண்ணினார்; பார்வதி என்ற பெண்மணியை தியாகராஜருக்குத் திரு மணம் செய்து வைத்தார்.சில நாட்கள் கழிந்தன. ராமபிரம்மம் உடல் நலம் இன்றிப் படுத்த படுக்கையானார். அவருடைய நிலையைக் கண்ட அவர் மனைவி சீதம்மா, ‘‘அவர் இறந்தால், அவருடன் நானும் தீக்குளி த்து விடுவேன்.

அவரைப் பிரிந்து என்னால் வாழ முடியாது” என்றார். அதைக் கேட்ட ராமபிரம்மம்’ ‘‘அம்மா! நமது தியாகராஜன் எவ்வளவு அருங் குணங்கள் படைத்து சகல வித்தை களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான் தெரியுமா? அவன் அடையும் புகழை நீ அருகிலிருந்து பார்க்க வேண்டாமா? அதற்காகத்தானே தானே, இந்தப் புத்திர பாக்கியத்தைத் தியாகேசன் அருளால் பெற்றாய்! ஆதலால் நீ வாழ வேண்டும்!” என்று மனைவிக்குக் கட்டளையிட்டார்; சில நாட்களிலேயே இறைவனுடைய திருவடிகளை அடைந்தார். ராமபிரம்மம் பூவுலக வாழ்வைத் துறந்தபோது தியாகராஜருக்கு வயது 20. அப்போதுதான் தியாகராஜருக்கு விசேஷமான ஒன்று நடந்தது.
(தொடரும்)

பி.என். பரசுராமன்

Tags : Thyagaraja Swami ,Rama ,
× RELATED ஜாலியாகச் சுற்றுபவரா? வேலை செய்பவரா?