மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடலைக் கேட்டு இருப்பீர்கள்.மனைவி அமைவது மட்டுமல்ல, பெற்றோர்கள் அமைவதும் பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் அமைவதும், கணவனுக்கு மனைவி அமைவதும், மனைவிக்கு கணவன் அமைவதும், உறவுகள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.இறைவன் ஏன் எல்லோருக்கும் சமமான வரத்தைக் கொடுக் கவில்லை என்கிற கேள்வி அடுத்து எழும் உண்மையில் அவரவர்கள் பெற்றது அவரவர்கள் செய்த வினையின் படி என்பார்கள். நல்ல பலனோ கெட்ட பலனோ நிர்ணயிப்பது நம்முடைய வினைகள்தான்.இன்றைய நிலைக்கு காரணம் நேற்றைய வினைதான்.நேற்று என்ன செய்தோமோ அதனுடைய விளைவை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
நேற்று என்பதை பூர்வம் என்று சொல்வார்கள்.ஜாதகத்தில் அதை நிர்ணயிப்பது ஐந்தாம் இடம்.அதனால் 5ம் இடத்தை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்வார்கள்.காலச்சக்கரத்தின் ஐந்தாவது ராசி சிம்ம ராசி தான் பூர்வ புண்ணிய ஸ்தானம். அந்த அமைப்பைப் பொறுத்துத்தான் ஒருவன் நல்லவற்றையோ கெட்டவற்றையோ அனுபவிக்கும்படி நேர்கிறது.இந்த பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன். ஆன்மாவானது தன்னுடைய கர்ம வினையை அனுபவிப்பதற்காக ஒரு உடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதற்காக அந்த ஆன்மா முதலில் புகுந்து கொள்வது தந்தையிடத்தில். பிறகு தாயிடத்தில்.இதைச் சுட்டிக்காட்டுவது பூர்வ புண்ணிய ஸ்தானம். இதற்காக இதன் அதிபதியாக சூரியனை வைத்தார்கள்.
ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்கள் முக்கியமானவை. திரிகோண ஸ்தானங்கள் வலுவாக அமைந்துவிட்டால் அந்த ஜாதகன் எத்தனைச் சிரமங்கள் இருந்தாலும் பிழைத்து விடுவான். இரண்டாவது திரிகோண ஸ்தானம் தான் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லப்படும் ஐந்தாம் பாவம்.“அவன் என்னப்பா,கொடுத்து வைத்தவன். அதிர்ஷ்டக்காரன்” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.அந்த அதிர்ஷ்டத்தையும் ஆனந்தத்தையும் ஒருவருக்கு அள்ளி அள்ளித் தருவது ஐந்தாம் பாவம்தான். ஒருவனுடைய எண்ணமும் சிந்தனையும் தான் அவன் வாழ்வை உயர்த்தும் அல்லது தாழ்த்தும் சிந்தனையின் அமைப்பை நிர்ணயம் செய்து கொடுப்பதும் ஐந்தாம் பாவம் தான். ஐந்தாம் பாவம் கெட்டுவிட்டால் சிந்தனை கெட்டுவிட்டது என்று பொருள்.
நல்லது கெட்டது இரண்டும் கலந்ததுதான் ஒரு பாவத்தின் தன்மை என்பதை மறந்து விடக்கூடாது.ஒரு பாவத்தின் பலத்தையும்பலவீனத்தையும் கணக்கிட்டு பலவீனமான விஷயங்களைத் தவிர்த்து, பலமுள்ள விஷயங்களை முழு முயற்சியோடு செய்யும்பொழுது அந்த பாவத்தினுடைய நற்பலன்கள் ஒரு ஜாதகருக்கு அதிகமாக கிடைக்கும். உதாரணமாக ஆறாம் பாவம் என்பது ஒருவருடைய நோயைக் குறிப்பது ஐந்தாம் பாவம் என்பது அந்த நோயிலிருந்து விடுபடுவதைக் குறிப்பது. நோயான ஆறாம் பாவத்தின் விரய பாவமாகவிளங்குகிறது ஐந்தாம் பாவம். ஐந்தாம் பாவம் வலுவாக இருப்பவர்கள் அவ்வளவு எளிதில் நோய்வாய்ப் படுவதில்லை. ஆரோக்கியமாகவே இருப்பார்கள். எதைச் சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகும். எந்த மழையில் நனைந்தாலும் பெரிய அளவில் உடல் நலக்குறைவு ஏற்படாது. அதைப்போலவே ஆறாம் பாவம் என்பது ஒருவனுடைய பகையைக் குறிப்பது. ஐந்தாம் பாவம் அந்தப் பகையின் விரயத்தைக் குறிப்பது.
பகை இல்லாமல் ஒருவன் ஜாலியாக எந்த விமர்சனங்களுக்கும் ஆட்படாமல் எல்லோரையும் நட்பு பாராட்டி வாழும் வாழ்க்கையை அவருடையஐந்தாம் பாவத்தின் வலிமை நிர்ணயித்துக் கொடுக்கிறது. ஆறாம் பாவத்தை ருணபாவம் என்பார்கள். ருணம் என்பது கடனைக் குறிப்பது. ஒருவன் கடன் வாங்காமல் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் அவனுடைய பூர்வீகச் சொத்து நல்ல முறையில் இருக்கும். பெற்றோர்கள் சொத்து சேர்த்து வைத்திருப்பார்கள். அவன் எந்த வேலையும் செய்யாமல் கால் மேல் கால் போட்டு எந்தக் கஷ்டமும் இல்லாமல் இருப்பான். அதற்கு பூர்வ புண்ணியஸ்தானம் பலமாக இருக்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக இருந்தால் கடன் இல்லாத வாழ்க்கையை வாழும் வாய்ப்பு உண்டு.
இவைகள் எல்லாம் அதிர்ஷ்டம் என்றும் நல்லது என்றும் ஒருவகையில் நினைப்பீர்கள்.ஆனால், இன்னொரு கோணத்தில் நினைத்துப் பாருங்கள். ஆறாம் பாவம் என்பது ஒருவருடைய வேலையைக் குறிப்பது. ஐந்தாம் பாவம் என்பது அந்த வேலை இழந்துவிடுவதைக் குறிப்பது.ஒருவன் எந்த இடத்திலும் நிரந்தரமாக பணி புரியாமல் அடிக்கடி வேலையை மாற்றுவதோ அல்லது வேலையில்லாமல் திண்டாடுவதோ ஐந்தாம் பாவம் குறிப்பிடும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. வேலை இருந்தாலும் அது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். வேலை இல்லாவிட்டால் சுகமாக இருக்கும்.எனவே, ஐந்தாம் பாவம் வலுவடைந்தவர்கள் பெற்றோர்கள் வைத்துவிட்ட சொத்தைக் கரைத்துக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு இருப்பார்களே தவிர, ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய மாட்டார்கள் என்பது ஐந்தாம் பாவத்தில் உள்ள பலவீனம்.
இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரைகுறை முயற்சியும், இஷ்டமில்லாமல் செய்யும் முயற்சி தோல்வி அடைவதும் ஐந்தாம்பாவத்தைப் பொறுத்தது.பெரிய தொழிலதிபர்கள் நிறைய கடன் வைத்திருப்பார்கள். எனவே, அவர்களுக்கு ஆறாம் பாவம் பலமாகவும் இருக்கும்.ஆறாம் பாவம் பலமடைந்ததால் தான் அவர்கள் கடனோடு தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். வெறும் 5 ஆம் பாவம் மட்டும் பலமாக இருந்தால் கடன் வாங்கமாட்டார்கள். அப்படியானால் பெரிய அளவில் அவர்களுடைய தொழிலும் வளராது. அது மட்டும் இல்லை. பெரிய தொழில் வளர்ந்து பெரிய அளவில் லாபம் சம்பாதித்து என்ன செய்யப் போகிறோம் என்கிற சிந்தனைதான் மேலே எழும்.
ஆறாம் பாவம் கடுமையாக வேலை செய்வதைக் குறிப்பது கடுமையாக வேலை செய்யாதவன் எப்படி முன்னேறமுடியும்? ஒரு வகையில் முன்னேற்றத்திற்குத் தடையாக ஐந்தாம் பாவம் அமைந்து விடுவதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதைச் சொல்வதற்கு காரணம் எது நமக்கு சாதகம் என்று நினைக்கிறோமோ, அதுவே சில நேரங்களில் பாதகமாகவும் அமைந்துவிடும். ஆயினும் ஒருவன் மனநிம்மதியாக வாழ்வதற்கும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் ஜாதகனின் ஐந்தாம் பாவம் கட்டாயம் வலு வடைந்து இருக்க வேண்டும். இரட்டைப்படை பாவங்களான 2,4,6,10 முதலிய பாவங்களும் சிறப்பாக இருந்தால் தான் அதிர்ஷ்டத்தோடுகடுமையான முயற் சியும் இணைந்து வெற்றியைத் தரும். பத்தாம் பாவம் என்பது ஒருவன் செய்யும் தொழிலின் மூலமாகவும் சேவையின் மூலமாகவும்கிடைக்கும் அங்கீகாரத்தைக் குறிப்பது. ஐந்தாம் பாவமும்பத்தாம் பாவமும் ஒருவனுக்கு வலிமை பெற்றிருந்தால் அவனுடைய பூர்வ புண்ணியம் சிறப்பான உழைப்பை, நல்ல வேலையை. தொழிலை வளர்ச்சி அடையச்செய்து, பெருமையும் புகழும் அடைய வைக்கும். இன்னும் சில ரகசியங்கள் ஐந்தாம் பாவத்தில் கொட்டிக் கிடக் கின்றன அடுத்தடுத்துப் பார்ப்போம்.
