×

உடலின் கவனமே ஆரோக்கியத்தின் வழிகாட்டி!

நன்றி குங்குமம் தோழி

நம்முடைய உடல் ஒரு மேஜிக் கலைக்கூடம் என்றுதான் சொல்ல வேண்டும். உடலில் பிரச்னைகள் ஏற்படும் போது, சில அறிகுறிகள் மூலம் நமக்கு வெளிப்படுத்தும். ஆனால், அந்த அறிகுறிக்கான காரணம் என்னவென்று புரியாமல் நாம் அதனை கவனத்தில் கொள்வதில்லை. விளைவு பிரச்னை ெபரிதான பிறகுதான் அதற்கான முக்கியத்துவத்தினை கொடுக்கிறோம். அப்படி இல்லாமல், நம்முடைய உடலிலுள்ள பிரச்னைகள் என்ன என்பதை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை ஆரம்பகட்டத்திலேயே மேற்கொண்டால் வளமான வாழ்க்கையை வாழ முடியும். அப்படிப்பட்ட ஆய்வினை சென்னையில் உள்ள ‘நியுபர்க்’ நோய் கண்டறிதல் மையம் செய்து வருகிறது. இந்த ைமயத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவரான காவ்யா வேலு, மையத்தில் செய்யப்படும் ஜீனோமிக்ஸ் ஆய்வு குறித்து பகிர்ந்தார்.

‘‘நான் இந்த நிறுவனத்தில் தலைவராக மட்டுமில்லாமல் விற்பனை, மார்க்கெட்டிங் என அனைத்து துறையிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நான் இந்த நிறுவனத்துடன் இணைந்தேன். அதற்கு முன்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றேன். அங்கு படிப்பு முடித்துவிட்டு சில வருடங்கள் வேலை பார்த்து வந்தேன். என் அப்பா இந்த நிறுவனத்தை இங்கு நிறுவியதும் அவருக்கு துணையாக நானும் இதில் இணைந்து செயல்பட ஆரம்பித்தேன்.

‘நியுபர்க்’ அடிப்படையில் நோய் கண்டறிதல் மையம். அதில் ஒரு பகுதிதான் நல்வாழ்வு (Wellness). பொதுவாக நம்முடைய உடலில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தான் அதற்கான சிகிச்சையினை நாம் மேற்கொள்வோம். உதாரணத்திற்கு ஜுரம் வந்தால், உடனடியாக டாக்டரை அணுகி மருந்துகளை உட்கொள்வோம். ஆனால், நல்வாழ்வு அப்படி இல்லை. நோய் வரும் முன் அல்லது நோயின் தன்மை முதல் கட்டமாக இருக்கும் போதே அதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை மேற்கொள்வது. குறிப்பாக பெண்கள், இன்று தங்களின் ஆரோக்கியத்தின் மேல் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தங்களின் உடலின் செயல்பாட்டினை புரிந்துகொள்ளவும் விரும்புகிறார்கள்.

இன்று பலரும் மருத்துவத்தை பயத்தோடு பார்க்காமல், ஒரு புரிதலோடு அணுகுகிறார்கள். ஒரு ஆய்வு மேற்கொள்ளும் போது பதட்டமாக இருக்கலாம். ஆனால், ஆய்விற்கு பிறகு நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று தெரியும் போது கிடைக்கும் நிம்மதிக்கு விலை மதிப்பே கிடையாது. ஆய்வு மூலம் நம்முடைய உடலில் என்ன நடக்கிறது என்று முன்பே தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் ேநாயின் தாக்கத்தினை ஆரம்பநிலையில் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள வசதியாக இருக்கும். தற்போது மருத்துவ துறையும் வளர்ந்து வருவதால், நோய்க்கான சிகிச்சை முறைகளும் பல உள்ளன. பலர் ‘உடல் ஆரோக்கியத்திற்கு யோகா செல்லுங்கள், உடற்பயிற்சியினை மேற்கொள்ளுங்கள்’ என்று கூறுவார்கள். அது அவசியம்தான். அதே சமயம் நம்முடைய உடலின் செயல்பாட்டினையும் வெல்னெஸ் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.

சில சமயம் வயிற்று வலி ஏற்படும், முடி உதிர்தல் பிரச்னை இருக்கும். உடல் எடை திடீரென்று அதிகரிக்கும்… இவை சாதாரண பிரச்னை என்று நினைத்து நாம் கடந்துவிடுகிறோம். ஆனால், இவை எல்லாம் நம் உடலில் ஏற்படக்கூடிய பாதிப்பிற்கான அறிகுறிகள். அதனை சாதாரணமாக நினைக்காமல் அதற்கான ஆய்வு செய்வதன் மூலம் உடலில் உள்ள குறைபாட்டினை நீக்க முடியும். ெபாதுவாக உடலில் ஏற்படும் பிரச்னைகளை இரண்டாக பிரிக்கலாம். ஜுரம், சளி போன்ற உபாதைகள் ஏற்பட்டு அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வது.

இரண்டாவதில் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும், நம்முடைய உடல் எவ்வாறு செயல்படுகிறது என்று ஒரு வயதிற்கு மேல் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக பெண்களின் உடலில் பலதரப்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அதனால் சிலருக்கு எலும்பு வலுவிழக்கும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இவற்றை தனிப்பட்ட பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும். சிலர் இதுபற்றி எதுவுமே ஆராயாமல் அவர்களாகவே விட்டமின் மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட விட்டமின் சத்து சீராக இருக்கும் போது அதிகப்படியாக மேலும் சத்துக்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதற்கான வழிகாட்டல்தான் ஜீனோமிக்ஸ்’’ என்றவர் அந்த ஆய்வு குறித்து விவரித்தார்.

ஜீனோமிக்ஸ் (Genomics), ஒருவரின் ஒட்டுமொத்த மரபணு தொகுப்பை ஆராயக்கூடிய நவீன அறிவியல் துறை. மரபணுக்களின் கட்டமைப்பு, செயல்பாடு, பரிணாம வளர்ச்சி மற்றும் அவற்றின் தொடர்புகளை பற்றி இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவருக்கு புற்றுநோய், இதயம் சார்ந்த நோய்கள், நீரிழிவு ேபான்ற குறிப்பிட்ட நோயின் காரணிகளைக் கண்டறியவும், தனிப்பட்ட நபருக்கு ஏற்ற மருந்துகளை தீர்மானிக்கவும் உதவுகிறது.

சொல்லப்போனால் ஒருவரின் உடலை 360 டிகிரி பரிணாமத்தில் துல்லியமாக ஆய்வு செய்திட உதவும். மனிதருடைய உடலின் அமைப்புகள் 99.9% அனைவருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். அதில் 0.1% மட்டுமே ஒருவரை மற்றவரிடம் இருந்து மாறுதல் படுத்தி காண்பிக்கும். அந்த மாற்றம் என்ன என்பதை இதன் மூலம் நாம் கண்டறியலாம்.

புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், உங்களின் உடல் உடற்பயிற்சி செய்யும் போது அதன் விளைவு எவ்வாறு இருக்கும், சருமம் எந்த வயதில் வயதான தோற்றத்தை பெறும், ஹார்மோன் மாற்றங்கள், நீரிழிவு ேநாயின் தாக்கம் எப்போது ஏற்படும், எலும்பு சார்ந்த பிரச்னைகள், எந்த உணவு உங்களின் உடம்பிற்கு ஏற்றது, எந்த மருந்துகள் அலர்ஜியினை ஏற்படுத்தும் என உங்க உடலில் உள்ள அனைத்து செயல்பாட்டினையும் விரிவாக தெரிந்துகொள்ளலாம். இது ஒரு தனிப்பட்ட ஆய்வு என்பதால் இதனை மேற்கொள்ளும் போது உங்களின் உடல் பற்றிய முழுமையான புரிதல் ஏற்படும். ரத்தம் அல்லது ஸ்வாப் பரிசோதனை மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இதில் இரண்டு வகை உள்ளது. வெல்னெஸ் ஜீனோமிக்ஸ் அல்லது நியூட்ரோஜீனோமிக்ஸ். இதில் உங்களின் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் கடைபிடிக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இரண்டாவது பார்மாகோ ஜீனோமிக்ஸ், உங்கள் உடலுக்கு எந்த மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை கொடுக்காது என்பதை கண்டறிய உதவும். இதன் மூலம் நாம் ஏதாவது சிகிச்சை மேற்கொள்ளும் போது மருத்துவருக்கு இந்த தகவல்கள் உதவியாக இருக்கும். நம் உடலுக்கு சேராத உணவுகள் மற்றும் மருந்துகளை தவிர்த்து சிகிச்சை அளிக்க எளிதாக இருக்கும்.

நாற்பதினை கடந்துவிட்டால் வருஷத்திற்கு இரண்டு முறை மாஸ்டர் செக்கப் செய்வது அவசியம். அவ்வாறு செய்யும் போது நம்முடைய உடலில் என்ன பாதிப்பு உள்ளது என்று கண்டறிந்து முறையான சிகிச்சை பெறலாம். அதன் பிறகு மீண்டும் ஆறு மாதம் கழித்து மற்றுமொரு மாஸ்டர் செக்கப் செய்யும் போது சிகிச்சை எடுத்ததற்கான பலன் கிடைத்துள்ளதா என்று தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப நம்முடைய சிகிச்சை முறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் நம்முடைய உடலைப் பற்றி புரிந்துகொள்வது இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியம். உடலின் அடிப்படை தேவைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் நோயின் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். மேலும், நம்முடைய மையத்தில் பல துறையை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் தொடர்பில் இருப்பதால், பிரச்னைக்கான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்… உங்களின் உடலின் மேல் கவனம் செலுத்துங்கள். அதுவே சந்தோஷமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகாட்டி’’ என்றார் காவ்யா வேலு.

தொகுப்பு: ஷன்மதி

Tags :
× RELATED எனக்கு 95 ஆயிரம் மாணவர்கள்!