×

தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி நூதன முறையில் மனு

*சங்கு ஊதிக்கொண்டு வந்ததால் பரபரப்பு

சேலம் : சேலத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, இறுதி ஊர்வலம் நடத்தி நூதன முறையில் மனு அளிக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் சமையல் மற்றும் வர்த்தக சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் பல ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், விலையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலத்தில் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி நூதன முறையில் மனு அளிக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்தவர் பார்த்திபன். சமூக ஆர்வலரான இவர், நேற்று சமையல் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்ததுடன், அதில் ஒரு ரூபாய் நாணயத்தை இறந்தவர்களுக்கு ஒட்டுவது போன்று ஒட்டி, ஊர்வலமாக எடுத்து வந்தார். அப்போது உடன் வந்தவர்கள் ஒரு பானையை எடுத்துக்கொண்டு, சங்கு ஊதியவாறு ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

நுழைவுவாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு காரணமாக வீட்டு சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் அனைத்து வகை உணவகங்கள், தேநீர் கடை, சிறுகுறு உணவகங்களில் விலை உயர்ந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஈரானிலிருந்து எரிவாயு கொள்முதல் செய்வதற்கு பதிலாக, ரஷ்யாவில் இருந்து கொள்முதல் செய்து கொண்டு வந்தால் தட்டுப்பாடு இருக்காது. எனவே மத்திய அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Salem ,Tamil Nadu ,
× RELATED கடைசி நேரத்தில் ரத்து செய்தால்...