வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வலேரோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சப்தத்துடன் சுத்திகரிப்பு நிலையம் தீப்பிடித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டபோது பூமி அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்த்தர் துறைமுகத்தில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரிட்ட பயங்கர வெடி விபத்தில், கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்தன. தீ விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கரும்புகை மூட்டமாக காணப்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் அவசரகால மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, டெக்சாஸ் வளைகுடா கடற்கரைக்கு அருகிலும், டெக்சாஸ் லூசியானா எல்லையிலும் அமைந்திருக்கிறது. இந்த வலேரோ சுத்திகரிப்பு நிலையம், தினசரி 4,35,000 பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருளாக மாற்றும் திறன் கொண்டது. இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்து பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும், அங்கு பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
