*கோவை வாலிபர் கைது
திருவனந்தபுரம் : வர்க்கலாவில் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து லித்வேனியா நாட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா சர்வதேச சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள கடற்கரை அழகை ரசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
வர்க்கலாவை சுற்றிலும் ஏராளமான சொகுசு சுற்றுலா விடுதிகள் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் லித்வேனியா நாட்டைச் சேர்ந்த 26 வயதான ஒரு இளம்பெண் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் இவர் வர்க்கலாவில் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு இரவில் விடுதிக்கு திரும்பினார். தூங்கும்போது இரவில் இவர் அறைக்கதவை பூட்டவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை 4 மணியளவில் இவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அறைக்குள் புகுந்த ஒரு வாலிபர் அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூக்குரலிட்டார். இதனால் பயந்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அப்பகுதியினர் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து வர்க்கலா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் கோவையை சேர்ந்த ஆண்ட்ரூ (26) என தெரியவந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் தனியாக வர்க்கலாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். விசாரணைக்குப் பின் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
