முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும்

தர்மபுரி, பிப்.17: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத பழைய அரசாணைபடி, வயது வரம்பை உயர்த்த வேண்டும் என வேலையில்லாத முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க தேர்வர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என, தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாரணை வெளியிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் 45வயதிற்கு மேல் கடந்த முதுகலை படித்த பல லட்சக்கணக்கான பட்டதாரிகள் முதுகலை பட்டதாரி ஆசிரியர், தேர்வை எழுத முடியாமல் உள்ளனர். மேலும் வயது வரம்பை மீண்டும் பழைய நடைமுறைப்படி 57வயதாக செயல்படுத்த வேண்டும் என்ற மனக்குறையுடன் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.

இது குறித்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 45வயதுக்கு மேற்பட்ட வேலையில்லா முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு பணியில் என்றாவது சேர்ந்துவிடலாம் என்ற கனவோடு, முதுகலை படித்து முடித்த வேலையில்லாத ஆசிரியர்கள் சுமார் 5லட்சம் பேர் வரை உள்ளனர். ஒவ்வொரு தேர்விற்கும் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து தேர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி தமிழக அரசு, முதுகலை பட்டதாரி தேர்வை எழுத 45வயது என வரம்பு நிர்ணயித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் 10ஆயிரம் பேரும், தமிழகம் முழுவதும், சுமார் 5லட்சம் பேரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளோம். எங்களை நம்பியுள்ள எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை எழுதுவதற்கு, வயது வரம்பை பழையபடி 57ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மனுவை அனுப்பியுள்ளோம். எங்களது கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்யாவிட்டால், எங்களது சான்றிதழ்கள், ரேஷன்கார்டுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் தயாராக உள்ளோம்.இவ்வாறு கூறினர்.

Related Stories:

>