×

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்; 9 போலீசாரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் அதிரடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (59). வியாபாரி. இவரது மகன் பென்னிக்ஸ் (31). தந்தை, மகன் இருவரும் ஊர் பஜாரில் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2020 ஜூன் 19ம் தேதி, கொரோனா ஊரடங்கு சமயத்தில் இரவில் நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக, சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

அன்று இரவு போலீசார் விசாரணையில் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் மறுநாள் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு 5 மணி நேர இடைவெளியில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சியினர், சாத்தான்குளம் பகுதியில் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையம் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையில் திருப்தி இல்லாததால் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில் 2020 ஜூன் 29ம் தேதி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஜூலை 7ம் தேதி சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. இதையடுத்து சிபிஐ போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அப்போதைய சாத்தான்குளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன், ரகுகணேஷ். சிறப்பு எஸ்.ஐ பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், சாமத்துரை, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து மற்றும் பால்துரை ஆகிய 10 பேரை கைது செய்து, அனைவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணையின்போது பால்துரை இறந்தார். இதனால் மற்ற 9 பேர் மீதான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 21.12.2020 முதல் மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணை பின்னர், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 18.2.2021 முதல் இங்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 6 ஆண்டாக இங்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் பெண் போலீஸ்காரர்கள் பியூலா, ரேவதி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோரின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்பட்டது.

100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் முதல் கட்டமாக 2,027 பக்கங்கள், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 6 மாத காலம் அவகாசம் கோரி, ஐகோர்ட் கிளையில் மாவட்ட நீதிமன்றம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஜெயராஜ் குடும்பத்தினர் இந்த வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை 3 மாத காலம் அவகாசம் தந்து வழக்கை முடிக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை நவ.26ல் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கைதானவர்கள் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றம், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை சென்றனர். ஆனால், அனைத்தும் தள்ளுபடியாகின. இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இதுவரை 4 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். தற்போது இந்த வழக்கை இறுதியாக விசாரித்த நீதிபதி ஜி.முத்துக்குமரன், அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் குறுக்கு விசாரணை என அனைத்தும் கடந்த 16ம் தேதி முடிந்த நிலையில் இன்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கப்படும் என்றார். இதன்படி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வாசித்தார்.

உயிரிழந்த ஜெயராஜ்க்கு இருதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. ஆனால், கம்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் கூறியுள்ளனர். சாத்தான்குளத்தில் போலீசார் கம்பு, கம்பியால் தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளனர். உடல்நலக் குறைவு காரணமாக ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழக்கவில்லை; ஆய்வாளர் ஸ்ரீதர் சொன்னதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். கைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டபடி தாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வருகிறது.

நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர்; இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்கும் பேசிக்கொண்டுள்ளனர் என சிபிஐ குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது. காயமடைந்த தந்தை, மகன் அணிந்திருந்த ஆடைகள் வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை; ரத்தக்கறை படிந்த ஆடையை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போட போலீசார் கூறியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையே தடய அறிவியல் ஆய்வும் உறுதி செய்துள்ளது. தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மீதான வழக்கு பொய் வழக்கு என்பது விசாரணையில் தெரியவந்தது.

சிபிஐ தரப்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நீதிமன்றம் உறுதி செய்கிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள். ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ், காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயில் முத்து, தாமஸ் ஆகியோரும் குற்றவாளிகள். குற்றவாளிகள் 9 பேருக்கும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 30ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும். குற்றவாளிகள் 9 பேரின் ஊதிய விவரம், சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Sathankulam ,Madurai ,Jayaraj ,Sathankulam, Thoothukudi district ,Pennix ,
× RELATED அரசியல் பரபரப்புக்கு இடையே திமுக,...