- அறுபத்து மூன்று
- கபாலிஸ்வரர் சன்னதி
- மயிலாப்பூர்
- அறுபத்து மூன்று திருவிழ
- அருள்மிகு கபாலிஸ்வரர் கோயில்
- சென்னை, சென்னை
- உத்திரா நாள்
- பங்கூனி
அறுபத்து மூவர் – 30-3-2026
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும். இது பங்குனி மாதம் உத்திர நாளைக் கடை நாளாகக் கொண்டு ஆலயத்தில் நடத்தப்படும் பெருந்திருவிழாவின் போது எட்டாம் நாள் மாலையில் நடத்தப்படுகிறது. மாலையில் விநாயகர் முன்செல்ல, பெரிய வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரரும் விமானத்தில் பின்னால் கற்பகவல்லியும் பவனிவர, சிங்கார வேலவரான முருகனும், சண்டீசரும் தொடர்ந்து வர, விழா நடைபெறுகிறது.
அடியவர்கள் அவரைப் பார்த்த வண்ணமே வீதிகளில் எழுந்தருளுகின்றனர். கேடயம் என்னும் சப்பரங்களில் ஒன்றிற்கு நால்வர் வீதம் 18 சப்பரங்களில் அவர்கள் பவனி வருகின்றனர். இச்சப்பரங்களுடன் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனித்தனியாகப் பெரும் பல்லக்குகளில் உடன் வருகின்றனர்.இத்தலத்து அடியவரான சிவநேசரும் அவரது மகளும் பாம்பு தீண்டி மாண்டு திருஞானசம்பந்தரால் உயிர்ப்பிக்கப்பட்டவளுமான அங்கம்பூம்பாவையாரும் தனித்தனியே ஸ்ரீவிமானங்களில் பவனி வருகின்றனர்.
இவர்களுடன் முண்டகக் கண்ணி அம்மன், கோலவிழியம்மன், வாசுகி உடனாய திருவள்ளுவர், திரௌபதி அம்மன் எனப் பல்வேறு தெய்வங்களும் பவனி வருகின்றனர். சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து திருமுருகன் இவ்விழாவுக்கு எழுந்தருளி வீதி வலம் காண்கிறான். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் விழாவாக இது அமைகிறது. விழாவில் தண்ணீர்ப் பந்தல் என்னும் பெயரில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் மக்கள் நன்மைக்காக நீர், மோர், பானகம், ஐஸ்கிரீம், பிரிஞ்சி சாதம், புளி சாதம், பொங்கல் முதலான உணவுப் பொருட்கள் பிஸ்கட், சாக்லெட், மிட்டாய்கள் போன்ற திண்பண்டங்களை அவரவர் சக்திக்கேற்ப வழங்குகின்றனர். குதூகலமான விழாவாக இது அமைகிறது.
இவ்விழா நாளில் காலையில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி, எலும்பும் சாம்பலுமாக எஞ்சியிருந்த பூம்பாவையை உயிர்ப்பிக்கும் ஐதீக விழா நடத்தப்படுகிறது. அங்கம் பூம்பாவை திருவுருவத்தை விமானத்தில் வைத்து அலங்கரித்துத் திருக்குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள வைத்து திரையிட்டு வைத்திருப்பர். சிவநேசன் செட்டியர் திருஞான சம்பந்தரை எதிர்கொண்டழைக்கும் நிகழ்ச்சியும் சம்பந்தர் அவ்விடம் வந்து மட்டிட்ட புன்னை எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
ஓதுவார் அந்தப் பதிகத்தை முழுவதுமாகப் பாடுவார். அத்துடன் பெரிய புராணத்தில் இந்நிகழ்ச்சி தொடர்பாக உள்ள செய்யும்களும் ஓதப்படும். பாடல்கள் முடிந்ததும், திரையை விலக்கி அங்கம் பூம்பாவைக்கு தீபாராதனை செய்யப்படும். அப்போது அங்கு மண் சட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நாட்டுச் சர்க்கரையை எடுத்து மக்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர். பின்னர், அங்கம்பூம்பாவை, சிவநேசர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் வடக்கு மாட வீதியாக வலம் வந்து திருக்கோபுர வாயிலில் நிற்பர்.
பிற்பகல் இவர்களுக்குக் கபாலீஸ்வரர் காட்சி கொடுக்கும் விழா நடைபெறும். அதைத் தொடர்ந்தே அறுபத்துமூவர் விழா கொண்டாடப்படுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகள் எந்த தத்துவ அம்சத்தினை உணர்த்துகின்றன என்பதை ஓரிரு வரிகளில் அறிந்து கொள்வோமா!
திருநீலகண்ட நாயனார்
– காமத்தை அனுபவிக்காமல், அடக்காமல் அதனை உற்று கவனித்து கடப்பதை கற்றுத் தருகிறார்.
– மண்பாண்டம் நிலம் என்பதின் குறியீடு.
இயற்பகை நாயனார்
– தானம் தந்துவிட்டு நகர்ந்து விடாமல் அவர்கள் அதனை அடைய துணையாக நிற்றல் என்பதை கற்றுத்தருபவர்.- மனைவி என்பவள் நிலம் என்பதன் குறியீடு்.
இளையான்குடிமாற நாயனார்
– தன்னுள் இருக்கும் இறையை உணர தன்னையே அழிக்கத் துணியும் மனவுறுதியை கற்றுத்தருபவர்.
– விதைநெல் நிலம் என்பதன் குறியீடு.
மெய்ப்பொருள் நாயனார்
– பகைவன் ஆனபோதும் கருணையை கைவிடாதே என கற்றுத்தருபவர்.
– மாசற்ற மனம் என்பது வெளியின் குறியீடு.
விறல்மிண்ட நாயனார்
– நிலை உயரும் போது பணிவு வேண்டும் என வலியுறுத்துபவர்.
– கடிந்து கொள்ளல் என்பது காற்றின் குறியீடு.
அமர்நீதி நாயனார்
– அடுத்தவர்களின் அந்தரங்கம் உயரியது, பொக்கிஷம். அதற்கு ஈடாக ஏதுமில்லை என்பதை வலியுறுத்துபவர்.
– அந்தரங்கம் என்பது மனம். வெளியின் குறியீடு.
எறிபத்த நாயனார்
– இறைக்கு உ(ய)ரியவைகளை மிருக குணம் கொண்டு அடைய / அழிக்க நினைத்தால் தண்டிக்கப்படுவீர் எனும் உண்மையை உணர்த்துபவர்.
– மலர் என்பது காற்றின் குறியீடு.
ஏனாதிநாத நாயனார்
– சத்சங்கத்துடன் முரண்பட்டாலும் சத்சங்கமே நிரந்தரம். அதற்காக தன்னையே இழக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுபவர்.
– திருநீறு என்பது நெருப்பின் மிச்சம். நெருப்பு சகலத்தையும் சுத்தப்படுத்தும். சத்சங்கமும் அவ்விதமே. நெருப்பின் குறியீடு திருநீறு.
கண்ணப்ப நாயனார்
– வெளியோடு தொடர்புகொள்ள புலன்களின் கட்டுப்பாடும் புலன்களின் மீது ஆட்சியும் தேவை என்பதை உணர்த்துகிறார்.
– கண்களின் பார்வை என்பது வெளியோடு உடல் கொள்ளும் தொடர்பு.
குங்கிலியக்கலய நாயனார்
– பிறர்க்கு பயனுள்ள முறையில் வாழ்வதை வாழ்வின் இறுதிவரை தொடரவேண்டும் என வலியுறுத்துபவர்.
– குங்கிலியம் என்பது காற்றில் கலக்கும் மணம். இருப்பு என்பது மணம் போல் தன்னைச் சூழ்ந்தவரை இனிதாக்க வேண்டும்.
மானக்கஞ்சாற நாயனார்
– உறவுகளின் மீதும், அழகின் மீதும், நாளை மீதும் நாம் கொள்ளும் பற்று நிலையற்றது என உணர்த்துபவர்.
– சிகையின் இழப்பு என்பது குறியீடு. நிலையாமை போல் நகர்ந்துகொண்டே இருப்பது நீரின் தன்மை.
அரிவாட்டாய நாயனார்
– இழப்பின் வலி மிகக் கொடிது. சகலத்தையும் முழு கவனத்தோடு கையாளுதல் வேண்டும் எனச் சொல்பவர். உணவைத் தரும் பூமியே கடவுள் என்பதை
உணர்த்துபவர்.
– நிலம் என்பது நேரிடையாகவே இதில் காட்டப்பட்டுள்ளது.
ஆனாய நாயனார்
– ஒலியே ஆதியில் உண்டானது, மொழி என்பது ஒலியின் நீட்சி.
– புல்லாங்குழல் ஓசை என்பது காற்றின் குறியீடு.
மூர்த்தி நாயனார்
– மெய்வருத்தம் பாராமல் பிறர்க்கென உழைப்பவர்களின் அடையாளம் இவர்.
– சந்தனக்கட்டை என்பது காற்றில் கலக்கும் சுகந்தத்தின் குறியீடு.
முருக நாயனார்
– மந்திர ஜெபத்தின் வலிமையை வலியுறுத்துபவர்.
– பஞ்சாட்சரம் என்பது ஐம்பூதங்களின் ஒருங்கிணைப்பு.
உருத்திரபசுபதி நாயனார்
– சாதனை செய்வதே ஆன்மிக வளர்ச்சியின் ஆரம்பம் என்பதே பாடம்.
– நீர், காற்று (ருத்ரம்) என்ற இரண்டு பூதங்களின் இணைப்பு.
திருநாளைப்போவார் நாயனார்
– தாபம் என்பதன் உச்சம் தன்னையே எரித்தபோதும் அதனை அடையும் ஆவலோடு இருத்தலைக் காட்டுபவர்.
– நெருப்பு இதிலும் நேரிடையாகவே காட்டப்பட்டுள்ளது.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
– அர்ப்பணிப்பு, செய்தொழில் நேர்த்தி, காலம் தவறாமை, சுயபரிசோதனை செய்து கொள்ளல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவர்.
– மனஉறுதி, பாறை. இவை நிலத்தின் சாயல்கள்.
சண்டேஸ்வர நாயனார்
– பாரபட்சமின்றி நடுநிலையில் நின்று அதர்மத்தை கண்டிக்கும் துணிவே பாடம்.
– மண்ணில் சிவலிங்கம் என்பது நிலத்தின் குறியீடு.
திருநாவுக்கரசர்
– சேவை என்பதன் உயர்வைக் காட்டுபவர். சேவை மனதை மெல்ல செப்பனிடும் செயல். உழவாரம் என்பது இறை இருக்கும் இடத்தை செப்பனிடும் பணி.
– உழவாரம் என்பது நிலத்தின் குறியீடு.
குலச்சிறையார் நாயனார்
– அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு தொண்டு செய்தல் வேண்டும் என வலியுறுத்துபவர்.
– தனிமனித தர்மம் சமயம் சார்ந்தது. அதன் அடிப்படைகளைக் காத்தல் என்பது நல்ல விதைகள் முளைக்க நிலத்தை பண்படுத்துதல் போன்றது.
பெருமிழலைக் குறும்ப நாயனார்
– யோகத்தின் உயர்நிலைகளை அடையலாம் என்பதை உணர்த்துபவர். சத்சங்கம் நம்மை உயர்த்தும் என்பவர்.
– சுந்தரமூர்த்தி நாயனார் உடன் வெளி (கைலாயம்) அடைந்தவர்.
காரைக்கால் அம்மையார்
– இல்லறத்து கடமைகளை சற்றே விலகி நின்று செய்து, அசாத்திய மன உறுதியோடு இருப்பின் பெண்களும் இறையை அடையலாம் என்பதின் அடையாளம் இவர்.
– தலையால் நடந்து கயிலையை அடைந்தார் என்பது சகஸ்ராரம் மலர்ந்து வெளியில் கலந்தவர் என்பதையே குறிக்கும் அப்பூதியடிகள்
– தொண்டோ, சேவையோ எதுவாயினும் தன்னை முன்னிலைப்படுத்த செய்யாமல் பிறர் பெயர் ஓங்குவதற்கு புரியும் உயர்குணம் காட்டுபவர்.
– உணவு என்பது ஐம்பூதங்களின் தொகுப்பு. உணவு உபசரிப்பு என்பது தானத்தில் உயர்ந்தது.
திருநீலநக்க நாயனார்
– மனம் போடும் பின்னலை கவனித்து உறவுகளில், உணர்வுகளில் சிக்காது இருக்க வலியுறுத்துபவர்.
– அசையாத மன உறுதியே சிவலிங்கம்.
நமிநந்தியடிகள்
– பிறர்க்கு வெளிச்சமாக இருத்தலே வாழ்வு என்று காட்டியவர்.
– தண்ணீரில் விளக்கு என்பது மணிபூரகத்தின் சக்தி வெளிப்பாடு.
திருஞானசம்பந்தர்
– ஞானத்திற்கு வயது தடையில்லை, பணிவே உயர்வு, பயணம் செய்யச் செய்ய விசாலமாகும் மனம் என்று உணர்த்தும் வாழ்வு.
– திருமணம் என்பது சிவசக்தி கலப்பு, பெருவெளியில் கரைந்து, காணாமல் போதல்.
ஏயர்கோன் கலிக்காமர் நாயனார்
– பிறரது நம்பிக்கையை தகர்ப்பின் நமது அடித்தளம் ஆட்டம் காணும் என்ற வினைக்கான எதிர்வினையை விளக்கும் வாழ்வு.
– சூலை நோய் வருதலும் நீங்குதலும், ஐம்பூதங்களால் ஆன உடலின் நிலையாமையின் வெளிப்பாடு.
திருமூல நாயனார்
– உடல் என்பது மெய் தங்கும் பொய் மட்டுமல்ல. ‘திரு’ தங்கும் இடம் என உணர்த்தியவர். வாக்கியங்கள் வெளிப்படுத்தும் தன்மை காட்டியவர்.
– பிறர் உயிர்களுக்காக இரங்கி இறங்குதல் என்பது, வெளியில் இருந்து மழையானது பூமிக்கு கருணையோடு இறங்குதல்.
தண்டியடிகள்
– சேவை செய்ய உடல் ஊனம் தடையல்ல. சேவையுள்ளத்தின் தேவைகள் தானே நிறைவேறும் என்று நம்பிக்கை தருபவர்.
– குளம் தூர்வாருதல் தன்னை அகழ்தல். நீரின் உருவம் பாத்திரத்தின் உருவமாயிருத்தல்.
மூர்க்க நாயனார்
– தனக்கு தெரிந்த செயலை சிறப்புறச் செய்தல், அதன் பலனை இறைக்கு தத்தம் செய்தல்.
– சூதாடுதல் மனதை ஒருங்கிணைக்கும் செயல். மனம் ஒருங்கிணைத்தல் என்பது சுவாசத்தை சீராக்கல்.
சோமாசிமாற நாயனார்
– அருவத்தை உருவம் கொண்டு அறியும் முயற்சியே யாகம் என்று வலியுறுத்துபவர்.
– புறநெருப்பினால் அகத்தீயை வளர்ப்பதே யாகம்.
சாக்கிய நாயனார்
– எப்படி செய்கிறோம் என்பதை விட என்ன மனநிலையில் செய்கிறோம் என்பதே முக்கியம் என்பவர்.
– தன்னையே தனக்கே நிவேதனம் செய்யும் தன்மையே சிவலிங்கம் மீது கல் எறிந்த தன்மை.
சிறப்புலி நாயனார்
– பூஜை என்பது மனம் ஒருங்கிணைய செய்யப்படும் சடங்கு என்று காட்டியவர்.
– ஐம்பூதங்கள் மூலம் ஐம்பூதங்களை உணர தலைப்படலே பூஜை.
சிறுத்தொண்ட நாயனார்
– உறவோ, உறவற்றோரோ எவராயினும் உடலும், உயிரும், உணர்வும் ஒன்றே எனக் காட்டியவர்.
– உடலை அரிந்து உணவு என்பது விலகல் தன்மையின் உச்சம் வெளியில் இருந்து பார்க்கும் பார்வை.
சேரமான் பெருமான் நாயனார்
– உடலின் உச்சபட்ச பயன்பாட்டை உலகிற்கு காட்டியவர்.
– வெளி நோக்கிய பயணமே கைலாய பயணம்.
கணநாதர்
– பூஜை தரும் வலிமையையும், பக்தி மார்க்கத்தின் மூலமும் இறையை அடைய இயலும் என்பதையும் காட்டியவர்.
– பூஜை என்பது காலத்தின் அடிப்படை, காலம் பூமி சுழற்சியின் மூலம் கணக்கிடப் படுவது. நிலத்தில் இருந்து வெளி நோக்கிய பயணமே பூஜை.
கூற்றுவ நாயனார்
– தனக்கு வாய்த்ததை கொண்டாட தெரியவேண்டும். வாழ்வின் சத்தியம் எதுவென்ற புரிதல் அவசியம் என உணர்த்துபவர்.
– முடி சூடல் என்பது ஈசனை உச்சத்தில், வெளியில் நிறுத்திய நிலை.
புகழ்சோழ நாயனார்
– தவறு தன்னுடையது என உணர்ந்தபின் தலைவணங்க தயங்காத தன்மையை உணர்த்துபவர்.
– மன்னர் என்பவர் நிலத்தின் மீது ஆளுமை உள்ளவர்.
நரசிங்கமுனைய நாயனார்
– உத்தமர்களை வளர்ப்பது ஒரு வரம். அத்தகைய வரத்தை பெற்றவர்.
– வளர்ச்சிக்கு துணை நிற்பது நிலத்தில் நிகழும் பயிர் வளர்ச்சி போன்றது.
அதிபத்த நாயனார்
– இயற்கையும், இறைவனும் ஒன்றே எனும் உணர்வைக்கொண்டு அர்ப்பணிப்போடு இருந்தவர்.
– கடலில் (நீரில்) இறை எனும் சக்தியை உணர்ந்து அங்கேயே கலந்தவர்.
கலிக்கம்ப நாயனார்
– சகலருக்கும் உரிய மரியாதை தர வேண்டும் என உணர்த்துபவர்.
– உணவு உபசரிப்பு என்பது ஐம்பூதங்களின் தொகுப்பு.
கலய நாயனார்
– பிறர்க்கு வெளிச்சம் தர தன்னையே வருத்திக்கொண்டவர்.
– விளக்கு என்பது நெருப்பு எனும் ஐம்பூதங்களில் ஒன்று.
சத்தி நாயனார்
– சொல்லாலும் எவரையும் துன்புறுத்தலாகாது என உணர்த்துபவர்.
– சொல் என்பது ஒலி வடிவம். ஒலியின் அடிப்படை காற்று.
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
– சத்தியத்தை, நித்தியத்தைத் தேடி பயணிக்கவேண்டும் என்று காட்டியவர்.
– ஆட்சி அதிகாரத்தை விடுவது என்பது நிலத்தின் மீதான பற்றை விடல்.
கணம்புல்ல நாயனார்
– பிறர்க்கு வெளிச்சம் தர தன்னை வருத்திக்கொண்டவர்.
– விளக்கு என்பது நெருப்பு எனும் ஐம்பூதங்களில் ஒன்று.
காரி நாயனார்
– இலக்கியத்தின் மூலம் இலக்கினை காட்டியவர்.
– ஐம்பூதங்களின் தன்மையை அறிய உதவுவதே இலக்கியம்.
நின்றசீர் நெடுமாறனார்
– தவறை நேர் செய்யும் குணத்தை உணர்த்தியவர்.
– நோய் நீங்குதல் என்பது உடலின் ஐம்பூதங்களையும் சமநிலையோடு வைத்தல்.
வாயிலார் நாயனார்
– மனதின் வலிமையை உணர்த்தியவர்.
– மனம் என்பது வெளியின் தன்மை.
முனையடுவார் நாயனார்
– செய்யும் செயலின் முனைப்போடு இருத்தலை வலியுறுத்துபவர்.
– உணவு தருதல் என்பது ஐம்பூதங்களின் தொகுப்பு.
கழற்சிங்க நாயனார்
– அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்றவர்.
– மலரின் மணம் என்பது காற்றின் அடையாளம்.
இடங்கழியாண்டார்
– சேமிப்பு என்பது தானம் தருவதற்கே என்றவர்.
– நெல் என்பது நிலத்தின் விளைச்சல்.
செருத்துணை நாயனார்
– தண்டனைகளே தவறுகளை குறைக்கும் என்றவர்.
– மணம் என்பது காற்றின் குறியீடு.
புகழ்த்துணை நாயனார்
– வறுமையிலும் தானம் தரும் பண்பைச் சொல்பவர்.
– பஞ்சம் என்பது ஐம்பூதங்களில் நிகழும் மாறுபாடு.
கோட்புலி நாயனார்
– நன்மையைத் தொடர தடையாக எது இருப்பினும் தகர்க்க கற்றுத் தருபவர்.
– நெல் என்பது நிலத்தின் விளைச்சல்.
பூசலார் நாயனார்
– மனதின் வலிமையால் இறையை இருத்தியவர்.
– மனம் என்பது வெளியுடனான தொடர்பு.
மங்கையர்க்கரசியார்
– தர்மத்தை நிலைநாட்ட அதிகாரத்தை பயன்படுத்தியவர்.
– அதிகாரம் நிலத்தின் அடையாளம்.
நேச நாயனார்
– நாமஜெபத்தின் வலிமை காட்டியவர்.
– நாமத்தின் வலிமை என்பது காற்றின் தன்மை.
கோச்செங்கட் சோழ நாயனார்
– நல்ல விஷயங்கள் ஒருமுறை கைக்கொண்டால் பலபிறவிகள் தொடரும் என உணர்த்தியவர்.
– சிலந்திவலை வெளியில் மனம் போடும் பின்னல்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
– இசையால் இறையை அடைந்தவர்.
– இசை என்பது காற்றின் அடிப்படை.
சடைய நாயனார் / இசைஞானியார்
– உயர்ந்த விஷயங்கள் பூமிக்கு கிடைக்க தவம் தேவை. அத்தகைய தபஸ்விகளே இந்த பெற்றோர்கள். இவர்கள் பெற்ற வரம் சுந்தரமூர்த்தி நாயனார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
– இறையை தோழனாக கொண்டவர்.
இத்தகைய பார்வையோடு நாயன்மார்களின் கதையை அணுகவேண்டும் என்பது என் எண்ணம். இது தாண்டி பல பார்வைகளும், தத்துவச் செறிவுகளும் இதில் உண்டு என்பதே என் எண்ணம். காலம் கடந்து நிற்கும் இதில் சத்தியமே அடிப்படை.
சரஸ்வதி சுவாமிநாதன்
