×

இலக்கை அடைவது எப்படி?

ஆன்மிகம் என்பது அற்புதமான விஷயம். பெரும்பாலும் நாம் ஆன்மிகம் உள்ளீடாக இருக்கக்கூடிய சமயங்களைப் பற்றித் (religion) தான் பேசுகிறோம். விமர்சித்துக் கொண்டிருக்கிறோம். கேள்விகளை எழுப்பி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால், ஆன்மிகம் என்பது விவாதத்துக்குரியதோ கேள்வி கேட்பதற்கு உரியதோ அல்ல. அது உணர்வதற்கானது. புரிந்து கொள்வதற்கானது.ஆன்மிகத்தை அறிந்து கொள்வதா? புரிந்து கொள்வதா? என்கிற கேள்வி எழுப்பினால், ஆன்றோர்களும் அருளாளர்களும் புரிந்து கொள்வதற்கே தங்கள் வாழ்நாளை பயன்படுத்தி இருக்கின்றார்கள். புரிந்து கொண்டபிறகு மற்றவர்கள் அறிவதற்காகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் புரிந்துகொண்ட நிலையை நாம் அடையாத வரைக்கும், அவர்கள் என்னதான் விதம்விதமாக, விரிவாகச் சொன்னாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.திருமங்கையாழ்வார், தம்முடைய அனுபவத்தை, பெரிய திருமொழி முதல் பதிகத்தில் பாடுகின்றார்.

அதிலே ஒரு பாசுரம்.
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை;
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை;
பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்;
செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி,
நல் துணை ஆகப் பற்றினேன்
அடியேன்
நாராயணா என்னும் நாமம்
இந்தப் பாடலில் அவர் தான் புரிந்து, உணர்ந்து கொண்ட தன்னுடைய அனுபவத்தைத்தான் சொல்லுகின்றார்.

‘‘நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம்’’ என்கிற வார்த்தை மிக முக்கியமானது. காரணம், இந்த உணர்வைப் பெற முடியாதவர்கள் இருப்பார்கள். பெறாததால், இந்த உணர்வை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.அதனால்தான் தன்னுடைய அனுபவத்தை மட்டும் பாடி, இதைப்போல ஒரு அனுபவம் உங்களுக்கும் கிடைக்கலாம். அதன் மூலம் நீங்களும் உய்வு பெறலாம் என்பதைச் சொல்லுகின்றார்.
வள்ளலாரின் ஒரு அற்புதமான பாடல்.
“வான்கலந்த மாணிக்கவாசக!
நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”
வள்ளலாருக்கு திருவாசகத்தைப் படிக்கும் பொழுது என்ன அனுபவம் கிடைத்ததோ, அதைப் போன்றதொரு இனிமையான அனுபவம் மதுரகவி ஆழ்வாருக்கு திருவாய்மொழியைப் படித்த போது கிடைத்தது.

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே.
இங்கே அனுபவங்கள் மாறுகின்றன. உணர்வுகள் மாறுகின்றன. புரிதல்கள் மாறுகின்றன. ஆனால், அவரவர்கள் உணர்வும் புரிதலும் ஒரு புள்ளியில் ஒன்று கூடுகின்றன. அந்த புள்ளி தான் ஆன்மிகம் என்பது.நீங்கள் உன்னுடைய அனுபவம் பொய்; என்னுடைய அனுபவம் மட்டும் மெய்யென்று சொல்ல முடியாது.தங்கள் தங்கள் அனுபவத்தைச் சொன்ன அருளாளர்களின் பாடல்களையும் ஆன்மிக உணர்வுகளையும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால், பல நேரங்களில் குழுக்களாகப் பிரிந்து, இந்த அனுபவம் தான் சரி; இந்த அனுபவம் தவறு என்று, நிர்ணயம் செய்து விடுகின்றோம்.

திருமங்கையாழ்வார் நான் கண்டுகொண்டேன் நாராயணா என்று சொல்லிய வழியில், அதே நாராயண நாமத்தை, அதே உணர்வில், அடைந்த அருளாளர்கள் இருக்கின்றார்கள். அந்த அனுபவத்தை அவர்கள் சொல்லுகின்ற பொழுது, ‘‘திருமங்கை ஆழ்வார் அனுபவம் மிகச் சரியானது அதே அனுபவத்தை நாங்களும் பெற்றோம்’’ என்று சொல்லி இருக்கின்றார்கள், அதுவும் உண்மை.இதைப் போலவே, மாணிக்கவாசகரின் திருவாசகத்தை வள்ளலார் மட்டும் சொல்லவில்லை. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகாதார் என்று அனுபவித்த சான்றோர்களும் இருக்கிறார்கள். இரண்டையும் அனுபவித்து இரண்டும் சரிதான் என்று சொல்லக்கூடிய ஒரு சிலரும் இருக்கிறார்கள். ஆனால், இதில் கவனிக்க வேண்டியது, மணிவாசகரின் திருவாசகத்தைப் படித்தவர்கள் வள்ளலாரின் அதேஉணர்வைப் பெறாத, அதே அனுபவத்தில் கரையாத, அனுபவத்தின் சுவையை உணராத நிலையில், வள்ளலாரின் பாடலை உபசாரமாக மேற்கோள் காட்டித்தான் சொல்ல முடியுமே தவிர, அந்த அனுபவத்தை நிஜமாகவே பெற்றேன் என்று சொல்ல முடியாது. அப்படி உபசாரமாகச் சொல்லுகின்ற பொழுது, அங்கே ஆன்மிகம் (SPIRITUAL REALISATION) மறைந்து, சமயம் (RELIGIOUS FAITH) தோன்றி விடுகிறது.

இந்த உணர்வு (RELIGIOUS FAITH) தவறு கிடையாது. காரணம் ஆன்மிகத்தை உணர்வதற்கு ஏதாவது ஒரு சமய நம்பிக்கை துணை செய்யத்தான் செய்கிறது. ஆனால், பல நேரங்களில், இது ஒருவருக்கு சுயமான ஆன்மிக அனுபவத்தைக் கொடுக்காமலேயே, சமய நம்பிக்கையோடு வாழ்க்கையை முடித்து விடுகிறது. ஆன்மிகத்தைப் புரிந்து கொள்வதற்கான முதல் படியாகிய ஆன்மிகத்தை அறிதல் என்கிற நிலையில் ஒருவனை கொண்டுபோய் நிறுத்துகிறது.இதை இன்னும் புரிந்து கொள்வதற்கு ஒரு எளிய உதாரணம் சொல்லுகின்றேன்.மாடிக்குப் போகவேண்டும். அதுதான் இலக்கு. நாம் கீழே இருக்கிறோம். பக்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அந்த மரத்தின் ஒரு கிளை மாடிக்குச் செல்கிறது. மேலே மாடியில் இருந்து ஒரு கயிற்றேணி தொங்குகிறது. இன்னும் ஒரு பக்கத்தில் ஒரு மர ஏணி சாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு பக்கம் போனால் சில படிகள் இருக்கின்றன.ஒருவர் அந்த மரத்தின் மீது ஏறி கிளைகளின் வழியே மாடியை அடைந்து விடலாம் என்று நினைக்கிறார். ஆனால், பாதி மரத்திலேயே அங்கேயுள்ள சுவையான பழங்களை உண்டு உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் ஒருவர் அந்த நூல் ஏணியில் ஏறி சந்தோஷமாக நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு அப்படி நிற்பதே சந்தோஷமாக இருக்கிறது.இன்னும் ஒருவர் சாய்த்து வைக்கப்பட்டிருந்த மர ஏணியின் படியில் நின்றுகொண்டு, மரத்தில் ஏறி இருப்பவரை பார்த்து, ‘‘நீ ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மரத்தின் மீது ஏறிக் கொண்டிருக்கிறாய். இறங்கி வா. இந்த ஏணியில் ஏறு. எளிதாக மாடிக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்’’ என்கிறார்.மரத்தில் உட்கார்ந்து இருப்பவர் ‘‘நான் சுகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நீ அந்தப் படியில் நின்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். இறங்கி வந்து என்னோடு மரத்தில் ஏறு’’ என்கிறார்.கயிற்று ஏணியில் தொங்கிக் கொண்டு இருக்கிறவர், ‘‘நீங்கள் இங்கே வந்து இதில் ஏறிப் பாருங்கள் எவ்வளவு சுகமாக ஊஞ்சல்போல் ஆடிக் கொண்டிருக்கிறது’’ என்கிறார்.அதற்குள் பின்னாடி இருந்து ஒருவர் கத்துகிறார்.

‘‘இங்கே படி இருக்கிறது. இதை விட்டுவிட்டு தடுமாறிக் கொண் டிருக்கிறீர்களே. எல்லோருமே இங்கே வாருங்கள்’’ என்கிறார்.மாடி (upstair) என்கிற மெய்யறிவை (ஆன்மிகத்தை) எட்டுவதுதான் நோக்கம். அதற்கு இத்தனை வழிகள் இருக்கின்றன.ஆனால் வழிகளில் (ways) பெற்ற சில அனுபவத்திலேயே மாடியை அடையாமல் இருக்கிறார்கள்.இந்த வழிகள்தான் சமயங்கள். சமயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான அமைப்பில் இருக்கின்றன. ஆனால் அடைய வேண்டியது இலக்கு, வழிகள் அல்ல. இலக்கு அடையாமலேயே வழிகளின் ருசிகளில், இளைப்பாறிக் கொண்டிருந்தால், உண்மையான ஆன்மிகத்தை எப்படி அடைவது?

 

Tags :
× RELATED இந்த வார விசேஷங்கள்