×

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதிதிருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான். இவருடைய சந்நதியில் காட்சி தரும் ராமபிரான் பிற தலங்களில் பார்ப்பதுபோல நிமிர்ந்து காணப்படுவதில்லை. தன் தலையைச் சற்றே சாய்த்தபடி அழகுக் கோலம் காட்டுகிறார்.

எதற்காக இந்த சாய்ந்தத் திருக்கோலம்?

சீதையைக் கவர்ந்து சென்றவன் ராவணன்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியாகிவிட்டது. அனுமனும் இலங்கைக்குச் சென்று அங்கே சீதை சிறைபட்டிருக்கும் உண்மையை உறுதிப்படுத்தியாகிவிட்டது. தன் தவறை ராவணன் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சீதையைத் திருப்பி அனுப்பும் உத்தேசம் இல்லாதவனாகவே அவன் இருந்தான். போர் ஒன்றுதான் அவனை அடிபணியவைக்கும் ஒரே வழி. அந்த சமயத்தில்தான் ராமனுக்கு ஒரு தகவல் வந்தது. அதாவது ராவணனின் தம்பியும், அவனுக்கு நேர் எதிரான குணமும் கொண்ட விபீஷணன் ராமனிடம் சரணடைய விருப்பம் தெரிவித்திருந்தான்.

அசுர மன்னனான ராவணனின் தம்பி எப்படி நற்குணம் கொண்டவனாக இருக்க முடியும்? அவனுடைய சரணாகதியை ஏற்கக்கூடாது என்பது லட்சுமணனின் வாதம். ஆனால் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை,’ என்றபடி, நல்லவனாவதும், தீயவனாவதும் பிறப்பில் இல்லை, வளர்வதில் இருக்கிறது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்தவன் ராமன். அதனால் அவன் விபீஷணனை தன்னோடு ஒருவனாக ஏற்க விரும்பினான்.

அவனுடைய இந்த விருப்பம் நியாயமானது என்றும், அதில் எந்தத் தயக்கமும் வேண்டாம் என்றும் அனுமன் அபிப்ராயப்பட்டான். விபீஷணன் பூரண குணத்தவன், நாகரிகம் தெரிந்தவன். அதர்மத்துக்கு அஞ்சுபவன். அண்ணனே ஆனாலும், அநீதியைத் தட்டிக் கேட்பவன் என்றெல்லாம் அனுமனுக்கு விபீஷணனைப் பற்றித் தெரிந்திருந்தது.

அதனாலேயே, ராமனிடம் அவனைப் பற்றிய நல்லெண்ணத்தை வளர்க்கும் வகையில் அவனுடைய தூய குணங்களை விவரித்தான். அப்படி அனுமன் விளக்கும்போதுதான், அதைத் தலைசாய்த்து ராமன் கேட்டான். நல்ல விஷயங்களை நல்லவன் ஒருவன் சொல்லும்போது அதற்கு உரிய மதிப்பு கொடுக்கும் வகையில், தலை சாய்த்து கேட்கும் பண்பு மிகுந்தவன் ராமன். அதனால்தான் அப்படி ஒரு திருக்கோலம் காட்டுகிறான் இத்தலத்தில். இந்த பாவம், இந்த சம்பவத்தைதான் விளக்குகிறது என்று, பெரிய திருமலைநம்பி என்ற மகான், தன் சீடனான ராமானுஜருக்கு எடுத்துரைத்திருக்கிறார்.

பிரபுசங்கர்

Tags : Tirupathi ,Kaliyuga ,Seventh Mountain ,Tirupathi Tirupathirumala ,Ramapran ,
× RELATED மகானின் பெயரில் ஒரு கிராமம்!