- GST சாலை
- சிங்கப்பெருமாளிகோயில்
- செங்கல்பட்டு
- சென்னை
- திருகோணமல்பூர்
- சிங்கப்பெருமால்கோயில்
- திருச்சி-சென்னை
- ஜிஎஸ்டி சாலை சந்தை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருச்சி-சென்னை ஜிஎஸ்டி சாலை மார்க்கத்தில், சிங்கப்பெருமாள்கோயில் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை திரும்பிய தனியார் ஆம்னி பேருந்து, அதற்கு முன்னால் ஒரு கார் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஆகிய 3 வாகனங்களும் பச்சை சிக்னல் விழுவதற்காக காத்திருந்தன. அப்போது திருச்சி-சென்னை செல்லும் ஜிஎஸ்டி சாலையில் மதுராந்தகம் பகுதியில் இருந்து சென்னையை நோக்கி அதிக கல்பாரத்துடன் வந்த டிப்பர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்ட வேகத்தில் வந்தது.
இந்நிலையில், சிங்கப்பெருமாள்கோயில் ஜிஎஸ்டி சாலையில் சிக்னலுக்காக காத்திருந்த ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் டிப்பர் லாரி வேகமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில், முன்னால் நின்ற காரின்மீது ஆம்னி பேருந்து மோதியது. இதைத் தொடர்ந்து, அந்த கார் முன்னே நின்றிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பேருந்தின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. டிப்பர் லாரி மோதலில் அடுத்தடுத்து ஆம்னி பேருந்து, கார் மற்றும் ஒரு பேருந்து ஆகிய 3 வாகனங்களும் விபத்தில் சிக்கின. இதில் ஆம்னி பேருந்து மற்றும் காரின் முன் மற்றும் பின்பக்க பகுதிகள் பலத்த சேதமடைந்தன.
இவ்விபத்தில் கார் மற்றும் ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் என மொத்தம் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், இந்த 2 வாகனங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறி கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, வாகன இடிபாடுகளை அகற்றி படுகாயம் அடைந்த டிரைவர்கள் உள்பட பயணிகள் அனைவரையும் உயிருடன் மீட்டனர். அவர்களை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். சிங்கபெருமாள்கோயில் ஜிஎஸ்டி சாலை சிக்னலில் விபத்தில் சிக்கிய 3 வாகனங்களையும் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்குமேல் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு நிலவியது.
