×

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

 

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வருகிற 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல்களை நடத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பினை உறுதி செய்வதற்காக, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 136 பொதுப்பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் மற்றும் 151 செலவின பார்வையாளர்களையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. குடிமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல்கள் தொடர்பான புகார்களை நேரடியாக பதிவு செய்யவும் அல்லது விதிமீறல்களை புகார் அளிக்கவும் ஏதுவாக, மத்திய பார்வையாளர்களின் தொடர்பு விவரங்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பகிரப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணையவழி வேட்புமனு தாக்கல், வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான நேர ஒதுக்கீடுகளை முன்பதிவு செய்தல், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்ட அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் போன்ற தேர்தல் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு வசதியளிக்கும் ஒரு விரிவான டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது.

விண்ணப்பதாரர்கள் http://suvidha.ecl.gov.in/ என்ற இணையதளத்தை அணுகி இணையவழி செயல்முறையை நிறைவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை எடுத்து, தேவையான ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் இதுவரை 2,443 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 737 விண்ணப்பங்கள் காலக்கெடுவுக்குள் தீர்க்கப்பட்டன. மீதமுள்ளவை செயலாக்கத்தில் உள்ளன. 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்களின் ஒரு பகுதியாக, ஜனநாயக செயல்முறையில் பங்கேற்பதற்காக, தகுதிவாய்ந்த ஒவ்வொரு குடிமகனின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வது இன்றியமையாததாகும். எனவே, தகுதிவாய்ந்த அனைத்து குடிமக்களும் https://electoralsearch.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், பெயரை சேர்ப்பதற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 26.3.2026 ஆகும். குடிமக்கள் தங்கள் பெயரை சேர்க்க கோரும் விண்ணப்பங்களை படிவம்-6ஐ பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் எளிதாக பதிவு செய்துகொள்ளும் வகையில் https://www.voters.eci.gov.in/ என்ற இணையவழி வசதியையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இத்தேவைக்காக, Google Play Store-ல் உள்ள ‘ECINet’ என்ற கைப்பேசி செயலியையும் பயன் படுத்திக்கொள்ளலாம். மேலும், குடிமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக ‘வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் தொலைபேசி வழித் தொடர்பு’ வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பெயரை பதிவு செய்துகொள்வது, கடைசி நேரத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்க உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Chennai ,Archana Patnaik ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! நெசவாளர்களுக்கு ‘சொந்த வீடு’