திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, `பட்டு நெய்தலுக்கு’ பெயர் பெற்ற நகரமாகும். இவ்வூரை பட்டு நகரம் என்றே அழைக்கிறார்கள். ஆரணி பட்டுச் சேலைக்கு, `புவிசார் குறியீடு’ (GI Tag) வழங்கப்பட்டதுடன், தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது. அதே போல், பல நூற்பாலைகள், கைத்தறி நெசவுத் தொழில்கள் மற்றும் உழவர்தொழில் சார்ந்த பல சிறு, குறுந்தொழில்கள் ஆகியவைகளும் சிறப்பு. மேலும், ஆரணியில் விளையக்கூடிய பொன்னி நெல்வகை அரிசிக்கு தனி சிறப்பிடம் உண்டு. ஆம்! அதன் சுவைக்கும் நறுமணத்திற்கும் ஈடுஇணை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆரணியில், “புத்திரகாமேட்டீசுவரர் கோயில்’’, “கைலாசநாதர் கோயில்’’, “எந்திர சனீசுவரன் கோயில்’’, “பச்சையம்மன் கோயில்’’, “பெரியநாயகி அம்மன் கோயில்’’, “வேம்புலியம்மன் கோயில்’’, “சந்திரசேகரசுவாமி கோயில்’’ஆகிய முக்கிய கோயில்கள் பிரசித்தி பெற்றவையாகும்.
ஆரணியை அடுத்த “சத்ய விஜய நகரம்’’ என்னும் ஒரு சிற்றூர், பல சிறப்புகளை பெற்றிருக்கிறது. முக்கியமாக, இங்கு மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “வீர ஆஞ்சநேயர்’’, உத்ராதி மடத்தின் வழிவந்த “ஸ்ரீ சத்ய விஜய தீர்த்தர்’’ என்னும் மகானின் மூலபிருந்தாவனம், பீடி சந்நியாசியான (எந்த மடத்தின் மடாதிபதியும் இல்லை) “ஸ்ரீ ரங்க ஒடையர்’’ என்னும் மகானின் மூலபிருந்தாவனம் மற்றும் அப்போதைய ஆரணி சமஸ்தானத்தை (Arni Jagir) ஆட்சி செய்த “ராவ் சாஹேப்” (Rao Saheb) கட்டிய அரண்மனை என சத்ய விஜய நகரமே பல பெருமைகளை பெற்றிருக்கிறது.இத்தகைய பெருமைகள், நம் மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும், சத்ய விஜய நகரத்தில் வாழும் மக்களுக்கே தெரியுமா? என்றால் வாய்ப்புகள் குறைவுதான். அனுமனின் பெருமையையும், மகான்கள், ராஜா மற்றும் ஊர் பெருமைகளையும் பல மெனக்கெடல்களை மேற்கொண்டு வாசகர்களுக்காக பிரத்தேகமாக இந்த தொகுப்பில் தருகிறோம். சத்ய விஜய நகரம் பற்றி ஒவ்வொன்றாக அறிந்துக் கொள்வோம் வாருங்கள்!
எஞ்சியுள்ள அரண்மனை
முதலில் அரண்மனை பற்றியும், ராஜாவை பற்றியும், பின்னர் மகான்கள் பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம். சத்ய விஜய நகரத்துக்கே மிக முக்கிய சின்னமாக விளங்குகிறது, மன்னர் கட்டிய அரண்மனை. இதனை இவ்வூர் மக்கள் “ராஜா பேலஸ்’’ என்றே அழைக்கிறார்கள். இந்த ராஜா பேலஸ், ஆரணி நகரத்தில் உள்ள ஒரு பழமையான அரண்மனை ஆகும். இது ஆரணி சமஸ்தான அரசர்களின் ஆட்சி செய்த காலத்தை நினைவுப்படுத்தும், முக்கியமான வரலாற்றுச் சின்னமாக இன்றளவும் பார்க்கப்படுகிறது. சுமார் 17-18ஆம் நூற்றாண்டுகளில் ராஜா பேலஸ் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த காலத்தில், ஆரணி பகுதியை ஆட்சி செய்த சமஸ்தான அரசர்கள், தங்களது நிர்வாக இடத்தின் மையமாகவும், தங்கும் இடமாகவும் இந்த அரண்மனையை பயன்படுத்தியிருகிறார்கள். அரண்மனை முழுவதிலும் பாரம்பரிய தென்னிந்திய கட்டிடக் கலையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பெரிய முகப்புக் கோபுரம் போன்ற நுழைவாயில், நடுவில் பெரிய மண்டபம், அரசர் அமரும் தர்பார் இடம், உள்ள க முற்றங்கள் (Courtyards), மரத்தால் செய்யப்பட்ட பழமையான கதவுகள் என ஒரு காலத்தில், அரண்மனை மிக அழகு தோற்றத்துடன் காட்சியளித்துள்ளது. ஆனால், தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது.இப்போது இந்த ராஜா பேலஸில், சில பகுதிகள் மட்டுமே மீதமிருக்கின்றன. சில பகுதிகள் காலப் போக்கில் சேதமடைந்துவிட்டன. இருப்பினும் ஆரணியின் பழைய அரச மரபை நினைவூட்டும் ஒரு முக்கிய இடமாகத்தான் இன்றுவரை உள்ளது. இதனை பராமரித்தால் நன்றாக இருக்கும். இந்த ராஜா பேலஸ் அமைந்துள்ள பகுதியின் அருகில்தான் உத்ராதி மடத்தின் வழிவந்த மடாதிபதி `ஸ்ரீ சத்ய விஜய தீர்த்தரின்’ மூலபிருந்தாவனம் அமைந்துள்ளது.
நோயை குணமாக்கிய மகான்
ஸ்ரீ சத்ய விஜய தீர்த்தர், உத்ராதி மடத்தின் 22வது மடாதிபதியாவார். சுமார், 1726-ஆம் ஆண்டு முதல் 1737-ஆம் ஆண்டு வரை உத்ராதி மடத்தின் மடாதிபதியாக இருந்திருக்கிறார். மிக முக்கியமான பீடாதிபதிகளில் ஒருவராக, உத்ராதி மடத்தினரால் பார்க்கப்படுகிறது. முன்னொரு காலத்தில், ஆரணி ஜாகிர்தாருக்கு தீராத நோய் ஒன்று தாக்கியது. (ஜாகிர் (Jagir) என்பது வரலாற்று ரீதியாக முகலாயர் காலத்தில் படைத்தலைவர்களுக்கு வழங்கப்பட்ட நிலப்பகுதியைக் குறிக்கும். இவரின் பெயர் முழுமையாக தெரியவில்லை) எங்கெங்கோ சென்று ஜாகிர்தார் வைத்தியம் செய்து கொண்டார். இருப்பிணும் குணமாகவில்லை. ஒரு நாள், அரண்மனை வழியாக சத்ய விஜய தீர்த்தர் செல்கிறார். நோயின் தாக்கத்தினால், வலிதாங்க முடியாமல் ஜாகிர்தார், அரண்மனையின் உள்ளே கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.
இதனை அறிந்த சத்ய விஜய தீர்த்தர், அரண்மனைக்கு உள்ளே சென்று ஜாகிர்தாரிடம் விசாரித்தார். தனக்கு தீராத நோய் இருப்பதாகவும் அதனால், தான் அவதிப்படுவதாகவும் சத்ய விஜய தீர்த்தரிடத்தில், ஜாகிர்தார் தெரிவித்தார். ஜாகிர்தாருக்காக, பகவான் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியிடம் பிரார்த்தித்தார், ஸ்ரீ சத்ய விஜய தீர்த்தர். மெல்லமெல்ல நோயின் பிடியில் இருந்து நீங்கி, இயல்பு நிலைக்கு, ஜாகிர்தார் மீண்டு வந்தார். சுவாமிகளின் அருளால்தான் தனக்கு நோய் நீங்கியது என்று ஜாகிர்தார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, ஒரு சிறிய கிராமத்தையே சத்ய விஜய தீர்த்தர்க்கு இலவசமாக கிரையம் செய்து வைத்தார். தற்போது, அந்த கிராமம் “சத்ய விஜய நகரம்’’ என்னும் அவரின் பெயரிலேயே ஆரணியில் திகழ்கிறது.
ஸ்ரீ சத்ய விஜய தீர்த்தர், சுமார் 11 ஆண்டு காலம் பீடாதிபதியாக இருக்கும் போது, பல சீடர்களை உருவாக்கி, துவைத தத்துவத்தை தென்னிந்தியாவில் நிலைநாட்டினார். அதில், கண்டெடுத்த ஒரு முத்துதான் “ஸ்ரீ சத்யப்பிரிய தீர்த்தர்’’. தனக்கு பின், இவர்தான் ஆசிரமத்தை கவனிப்பார் என்று கட்டளையிட்டார், சத்ய விஜய தீர்த்தர். அதன் பிறகு, 1737-ஆம் ஆண்டு, மார்கழி சுக்லபட்சம் (வளர்பிறை) ஏகாதசி அன்று ஸ்ரீ சத்ய விஜய தீர்த்தர் பிருந்தாவனமானார். இன்றும் அவரது பிருந்தாவனம், மிக எளிமையாக காட்சியளிக்கிறது. ஆனால், பிருந்தாவனம் இருக்கும் இடம் மிகுந்த `நேர்மறை அதிர்வுகள்’ (Positive Vibrations) நிறைந்ததாக இருந்தது. இங்கு மட்டுமா.. சத்ய விஜய நகரமே நேர்மறை அதிர்வுகளாகத்தான் இருக்கின்றன. அதனை நாம் நன்கு உணர முடிகிறது.
நிறைவேற்றும் மகான்கள்
ஸ்ரீ சத்ய விஜய தீர்த்தர் பிருந்தாவனம் அருகில், ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனமும், ஸ்ரீ சத்ய வீர தீர்த்தரின் மூலபிருந்தாவனம், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், மற்றும் பிரசன்ன ஆஞ்சநேயர் ஸ்வாமி (இவர் வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமன் இல்லை) ஆகியோர் ஒரே சந்நதியில் அருள்கிறார்கள். அதே போல், சத்ய விஜய தீர்த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் அழகான விக்ரகமும் உள்ளது. மேலும், பிடி சந்நியாசியான ஸ்ரீ ரங்க ஒடையர் என்னும் மகானின் மூலபிருந்தாவனம், தனி சந்நதியில் உள்ளது. இவரது பிருந்தாவனத்தின் மேல் பகுதியில் ஒரு பக்த அனுமனையும் காணமுடிகிறது. இந்த மடம் அமைந்துள்ள பகுதி, மிகவும் அமைதியான ஆன்மிக சூழல் கொண்டதாக இருப்பதால், பல பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
குறிப்பாக, கல்வியில் சிறந்து விளங்கவும், மன அமைதி பெறவும் பக்தர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். பலரின் விருப்பங்களையும் இங்குள்ள மகான்கள் நிறைவேற்றி தருவதாக உள்ளூர் பக்தர்கள் கூறுகின்றனர். அது மட்டுமா.. கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் மாணாக்கள், மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெற விரும்புவோர் இம்மடத்தில் உள்ள மகான்களை தரிசிப்பதன் மூலமாக நிறைவேறும்.மத்வ சம்பிரதாய முறைப்படி, இந்த மடத்தில், தினமும் நிர்மால்ய அபிஷேகம், நிவேதனம் ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி தினத்தன்று, சத்ய விஜய தீர்த்தரின் ஆராதனை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. (அன்றைய தினம் ஏகாதசி என்பதால், மறுநாள் கொண்டாடப்படுகிறது). அந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ சத்ய விஜய தீர்த்தரை தரிசித்துவிட்டு செல்வார்கள்.
சாந்தசொரூபி
ஸ்ரீ சத்ய விஜய தீர்த்தரின் மடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி’’ கோயில் உள்ளது. சத்ய விஜய நகரின் தொடக்க பகுதியில் அதாவது எல்லை பகுதியில் இந்த அனுமன் இருப்பதால், வீர ஆஞ்சநேய ஸ்வாமியை இவ்வூரின் மக்கள் காவல் தெய்வமாக வணங்குகிறார்கள். ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பீம்சேனர், ஸ்ரீ மத்வாச்சாரியார் ஆகியோரின் உருவ சிலைகள், கோயிலின் மேலே தத்ரூபமாக காட்சியளிக்கின்றன. கோயிலின் உள்ளே சென்றதும் இடதுபுறத்தில், பழமையான கிணறு ஒன்று காணப்படுகிறது. ஒரு காலத்தில், கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்துதான் அனுமனுக்கு அபிஷேகங்கள் செய்து வந்தார்கள். தற்போது, கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது.
கிணற்றை கடந்து இன்னும் சற்று உள்ளே சென்றதும், இடதுபுறத்தில், சிறிய விநாயகர் சந்நதி உள்ளது. அவரை சேவித்துவிட்டு, அனுமனின் சந்நதி உள்ளே சென்றதும், வலதுபுறத்தில், மூலவரான வீர ஆஞ்சநேயர் எப்படி காட்சியளிப்பாரோ.. அதே போல், தங்க நிறத்தால் ஆன மாதிரி ஒன்றை வடிவமைத்து, கோயில் நிர்வாகம் காட்சிப் படுத்தியுள்ளார்கள். மிக அழகாக உள்ளது. அதனை ரசித்துவிட்டு மூலவரை சேவிக்க சென்றால், மூலவராக கருவறையில் இருக்கும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி, மிக உயரமாக கம்பீர தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ஆனால், அனுமனின் முகத்தை பார்த்தால், சாந்தஸ்வரூபியாக இருப்பது நன்கு தெரியும். அழகிய முகவடிவம்!
இந்த ஆஞ்சநேயர் ஆலயம், பக்தர்களால் மிகவும் பக்தியுடன் வழிபட்டு வரும் பழமையான திருத்தலம். அக்காலத்தில், வேத விற்பன்னர்கள் பலரும் இங்கு வசித்திருக்கிறார். அந்த சமயத்தில், சில வேத விற்பன்னர்கள், தினமும் ஆஞ்சநேயருக்கும், சத்ய விஜய தீர்த்தருக்கும் பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
பயணிகளை காக்கும் அனுமன்
சாலை மார்க்கமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், வீர ஆஞ்சநேயரை காக்கும் தெய்வமாக கருதினர். இதனால், தங்களின் பயணம் பாதுகாப்பாக அமைய வழிபாடு செய்யும் பழக்கம், இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், முன்பு சத்ய விஜய நகரம் பழைய கிராமப் பாதையில் அமைந்திருந்தது. தற்போது, காலப் போக்கில் அந்த கிராமப் பாதை, பெரிய சாலையாக மாற்றப்பட்டுவிட்டது. அதனால்தான், இப்போது ஆலயம் ரோட்டுக்கு மிகவும் அருகில் இருப்பது போல தோன்றுகிறது.
சனிதோஷம் குறைய,
பயமும் தடைகளும் நீங்க,
வேலை மற்றும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்க,
வழக்குகள் மற்றும் குடும்பப் பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைக்க ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால், நிச்சயம் தீர்வுகள் எட்டப்படுகின்றன என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில், அதிக பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும், அன்றைய தினத்தில் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.இக்கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. அன்றைய தினத்தில் வேத பாராயணத்தோடு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யபட்டிருக்கும்.
