×

ம்யூல் அக்கவுன்ட் ஸ்கேம்!

நன்றி குங்குமம் தோழி

டிஜிட்டல் யுகம்: ஒரு புலனாய்வு பார்வை!

எச்சரிக்கை..!

இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலும் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு ஆன்லைன் பயன்படுத்துகிறோம். அதிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மக்களிடையே வாடிக்கையாகிவிட்டன. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை நாம் அனுபவித்திருந்தாலும், அதன் ஆபத்தான சில சாத்தியங்களை மர்ம நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மிகப்பெரிய பண மோசடியான ‘ம்யூல் அக்கவுன்ட் ஸ்கேம்’ இன்று நடக்கக்கூடிய அனைத்து மோசடிகளுக்கும் அடிப்படையாக உள்ளது. கடந்த பத்து வருடங்களாக யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில் சைபர் மோசடி செய்பவர்களின் ஓர் ஆயுதமாக உருவெடுத்துள்ளது இந்த ம்யூல் அக்கவுன்ட். உலகெங்கிலும் மக்களை அச்சுறுத்தி வரும் இந்த மோசடி குறித்து இத்தொடரில் காண்போம்…

சைபர் மோசடிக்காரர்கள் திருடுகின்ற, மோசடி செய்யப்பட்ட பணத்தை போட்டு வைப்பதற்காக பயன்படுத்தும் வங்கி கணக்குதான் ம்யூல் அக்கவுன்ட். இந்த அக்கவுன்டை பயன்படுத்திய பிறகு பணத்தை எடுத்து வேறு வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்வார்கள். மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் அந்த அக்கவுன்ட் பொது மக்களுடையதாக கூட இருக்கலாம். மோசடியில் ஈடுபடும் நபர், வேறு ஒருவரை ஏமாற்றி பணம் பறித்து ஒரு ம்யூல் அக்கவுன்டில் போடச் சொல்வார்.

அது இரண்டு விதமாக இருக்கும். ஒன்று, மோசடி செய்யும் நபர் ஒரு பொதுவான நபருடன் கூட்டாக சேர்ந்தும் செய்யலாம். அதாவது, நாம் மோசடி செய்யும் பணத்தை, ‘உன் அக்கவுன்டில் போட்டு வைத்திரு, நான் கேட்கும் போது சொல்லும் பேங்க் அக்கவுன்டிற்கு மாற்றிக்கொடு’ என்பதுதான் டீல். மற்றொரு விதம், மோசடி செய்த பணத்தை தெரியாத யாரோ ஒருவரின் அக்கவுன்டிற்கு போட்டுவிட்டு, ‘தவறுதலாக பணம் உங்க அக்கவுன்டிற்கு வந்துவிட்டது. நான் ஒரு அக்கவுன்ட் சொல்கிறேன். அதற்கு பணத்தை மாற்றிவிடுங்கள்’ என்பது.

எல்லாவிதமான மோசடிகளுக்கும் இது அடிப்படையான விஷயமாக இருக்கிறது. உதாரணமாக டிஜிட்டல் அரெஸ்ட் ஸ்கேம், சிம் கார்டு ஸ்வாப் என எந்த விதத்தில் மோசடி செய்யப்பட்ட பணமாக இருந்தாலும் அதனை ம்யூல் அக்கவுன்டிற்கே பரிமாற்றம் செய்கின்றனர். இதில் சம்பந்தமே இல்லாத பாதிக்கப்பட்ட நபர் மோசடி குறித்து அறிந்ததும், காவல் துறையில் புகார் அளிக்கும் போது, இவர் பணம் பரிமாற்றம் செய்த அந்த அக்கவுன்ட் விவரங்களை கொடுப்பார். உடனே அந்த பேங்க் அக்கவுன்ட் முடக்கப்படும்.

மோசடி செய்யப்பட்ட பணத்தை கைப்பற்ற முயன்றால், பணம் அந்த அக்கவுன்டில் இருக்காது. ஏனெனில் அதற்கு முன்பாகவே மோசடி செய்யப்பட்ட நபரால் பணம் வேறொரு அக்கவுன்டிற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும் அல்லது பணத்தை எடுத்து செலவு செய்துவிடுவார்கள். தற்செயலாக அக்கவுன்டை தேர்ந்தெடுத்து அதை ம்யூல் அக்கவுன்டாக பயன்படுத்தும் இந்த மோசடியில் ஒரு லட்சத்திற்கு குறைவான பணத்தையே டார்கெட் செய்வார்கள். ஆனால், ஒரே நாளில் 10 முதல் 20 நபர்களை டார்கெட் செய்வார்கள் என்பதால் பல லட்சங்களை மோசடி செய்கின்றனர்.

இந்த மோசடி எவ்வாறு நடக்கிறது என்றால், முதலில் மோசடி கும்பல் சமூக வலைத்தளங்கள் மூலம் வேலைக்கு ஆட்களை சேர்ப்பது போன்று போலி விளம்பரங்களை வெளியிடுவார்கள். அவர்களிடம் வங்கி விவரங்கள், ஏடிஎம் கார்டு, இன்டர்நெட் பேங்க்கிங், ஓடிபி ஆக்ஸஸ் போன்ற அனைத்து விவரங்களையும் வாங்கிக் கொண்டு, மோசடி செய்வதற்கு அவற்றை பயன்படுத்திக்கொள்வார்கள்.

இதில் பலருக்கும் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதே தெரியாது. இது போல பொதுமக்கள் பலரின் விவரங்களும் லீக்டு கிரெட்டென்ஷியல்ஸ் என்று வெளியாகலாம். அதிலிருந்தும் சில தரவுகளை எடுத்துக்கொள்வார்கள். மட்டுமின்றி, நம் முக்கியமான ஆவணங்களை கடைகளில் ஜெராக்ஸ் எடுக்கும் போது, அவர்கள் கூடுதல் நகல் எடுத்து வைத்திருக்கலாம், டிஜிட்டல் என்றால் தரவுகளை நீக்காமல் வைத்திருக்கலாம். ஒரு சில கடைகளிலும் ஆதார் கார்டு, பான் கார்டு புதுப்பிக்கும் இடங்களிலும் இவ்வாறு நடக்கலாம். இப்படித்தான் நம் விவரங்கள் தரவுகளாக வெளியாகி, தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றன.

2020ம் ஆண்டிலிருந்துதான் இந்த ம்யூல் அக்கவுன்ட் ஸ்கேம் தொடர்ந்து நடக்கிறது. இது போன்ற மோசடிகள் பெரிதாக வெளியில் தெரிவதில்லை. போலீசில் புகார் அளித்தாலும் பணத்தை மீட்டுத் தரவில்லை என்பார்கள். ஆனால், பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்க முயன்றாலும், அதற்குள்ளாக வேறு அக்கவுன்டிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். அந்த அக்கவுன்டை முடக்கினாலும் குறுகிய கால இடைவெளியில் வேறொரு அக்கவுன்டிற்கு மாற்றப்படும். இவ்வாறு தொடர்ந்து மோசடிக்காரன் பணத்தை மாற்றம் செய்து கொண்டேயிருப்பதால் கண்டுபிடித்து பணத்தை மீட்பது சவாலான விஷயமாக இருக்கிறது.

ஒரு மாநிலத்திற்குள்ளாகவே இது நடக்கும் என்று சொல்லமுடியாது. உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு நபர் மோசடி செய்யப்பட்டால் அவரின் பணத்தை மஹாராஷ்டிராவில் இருக்கும் பேங்க் அக்கவுன்டிற்கு மாற்றப்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்து, அது மஹாராஷ்டிரா போலீஸுக்கு தகவல் சொல்லி, தமிழ்நாட்டு வங்கி கிளை, அந்த மாநிலத்தின் வங்கியின் கிளையை அணுகி அக்கவுன்டை முடக்குவதற்குள் மோசடி செய்பவர் அடுத்தடுத்த அக்கவுன்டிற்கு பணத்தை மாற்றிக்கொண்டேயிருப்பார்.

மோசடி செய்யப்பட்ட பணத்தை கூட்டாளியின் அக்கவுன்டிற்கு போட்டுவிட்டு, அவரிடம் வேறொரு குறிப்பிட்ட அக்கவுன்ட் விவரங்களை கொடுத்து அங்கு பணத்தை அனுப்ப வைத்து, அந்த அக்கவுன்டிலிருந்து பேங்க் மூலம் வெவ்வேறு அக்கவுன்டிற்கு பணம் பிரித்து அனுப்பப்படும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஒரு பிரபலமான வங்கியின் கிளை மேலாளர் இது போன்று மோசடி செய்பவர்களுக்கு உதவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 175 கோடி ரூபாய் பணம் ம்யூல் அக்கவுன்டுகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

சமூக வலைத்தளங்களில் இன்ப்ளூயன்சர்கள் பலரும் ட்ரேடிங் ஆப் குறித்து விளம்பரங்கள் செய்கின்றனர். ‘இந்த ஆப்பை டவுன்லோடு செய்து இந்த நேரத்தில் பணத்தை இன்வெஸ்ட் பண்ணுங்க, வித்ட்ரா செய்யுங்க’ என்று சொல்வார்கள். துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள் என்று சொல்வதை நம்பும் மக்கள் தொடர்ந்து பணத்தை இன்வெஸ்ட் செய்து பின்னர் மோசடி செய்யப்பட்டு நிற்பார்கள். இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மோசடி செய்து பெறப்படும் பணம் அத்தனையும் ம்யூல் அக்கவுன்டிற்கே செல்கிறது.

தென்னிந்தியாவில் ஏமாறுகிறவர்களின் அக்கவுன்ட் வட இந்தியாவிலும், அங்கு ஏமாறுகிறவர்களின் அக்கவுன்ட் தென்னிந்தியாவில் இருக்கும். மாற்றப்படும் வங்கி கணக்குகள் எவ்வளவு தூரமாக இருக்கிறதோ அவ்வளவும் மோசடிக்காரர்களுக்கு லாபம். இது போன்ற மோசடி வழக்குகளுக்கு தீர்வு காண்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு தெரியாமல் பணம் அனுப்பிவிட்டால், பணத்தை ரிட்டன் செய்யும் பாலிசியும் வங்கியில் உண்டு. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். மோசடி செய்தவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். அப்படியே பிடித்துவிட்டாலும் அவனிடம் பணம் இருக்காது. மோசடி குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனை வழங்குவார்கள்.

மக்கள் இது போன்ற மோசடிகளின்போது துரிதமாக செயல்பட வேண்டும். உங்க வங்கி கணக்கிற்கு தேவையில்லாத அதிக பணம் க்ரெடிட் ஆகியிருந்தால், அடுத்த சில தினங்களில் ‘பணம் என்னுடையது தவறுதலாக வந்துவிட்டது’ என்று யாரேனும் போன் செய்து சொன்னார்கள் எனில், ‘அருகில் உள்ள வங்கி கிளைக்கு வாங்க பணத்தை எடுத்து தருகிறேன் அல்லது போலீஸ் ஸ்டேஷன் வாங்க நேரிடையாக பணத்தை கையில் தருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, உடனடியாக போலீஸிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டு சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும்.

வங்கியில் சைபர் புகார் சான்றினை முதலில் கேட்பார்கள். நேர விரையமாக்கினால் உங்களுக்கு எதிராக புகார் அளித்து மோசடிக்காரன் உங்க அக்கவுன்டை ப்ரீஸ் செய்துவிடலாம். எனவே, விரைவாக செயல்படுங்கள்.

வங்கிகளும் பாதுகாப்பு அமைப்பை உறுதியாக்க வேண்டும். டெபாசிட் பணத்தை லிமிட் செய்ய வேண்டும். KYC வெரிஃபிகேஷன் என்று சந்தேகத்திற்குரிய யாரேனும் கால் செய்தால் எதையும் பகிரக்கூடாது. அங்கீகரிக்கப்படாத செயலிகளை பயன்படுத்தக் கூடாது. ஒரு நபர் இரண்டு வங்கி கணக்கிற்கு மேல் வைத்துக் கொள்ளாதீர்கள். பயன்படுத்தாத அக்கவுன்டுகளை மூடிவிடுங்கள். போலீசில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில், ‘ஒம்புட்ஸ்மேன் ஸ்கீம்’ எனும் அமைப்பில் ஒரு புகாரை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் சென்றுவிடும்.

(புலனாய்வு தொடரும்…)

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Tags : Kungumam Dozhi ,
× RELATED கேலி பேசியவர்களுக்கு என் வளர்ச்சிதான் பதில்!