×

டிஜிட்டல் யுகம்: ஒரு புலனாய்வு பார்வை!

நன்றி குங்குமம் தோழி

மார்பிங் ஸ்கேம், எச்சரிக்கை..!

உலகின் இன்றைய சூழலில் இணையத்தை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இணையத்தின் பயன்பாடு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கும் பட்சத்தில் அதைப்பொருத்தே தாக்கங்களும் விளைவுகளும் அமைகின்றன. தற்போது அதிகரித்து வரும் தரவு திருட்டு, நிதி மோசடி, சைபர் மிரட்டல், ஆள்மாறாட்டம், ஹேக்கிங் போன்ற சைபர் குற்றங்கள் நாம் கவனிக்க வேண்டியவை. கணினி, இணையம், அல்லது டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்களால் செய்யப்படும் மோசடி சம்பவங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் பாதிப்புகளிலிருந்து மீள்வது குறித்தும் இனி வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவேற்றுவது மக்களிடையே வழக்கமாகிவிட்டது. அவ்வாறு வெளியிடப்படும் தரவுகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. அவ்வாறு பதிவேற்றம் செய்யப் படும் புகைப்படங்கள், காணொளிகளை மறுபகிர்வு, தரவிறக்கம் செய்ய முடியும். அதனை அடையாளம் தெரியாத நபர்கள் ஆபாசமாக போலியான சித்தரிப்புகளை உருவாக்கி 18+ வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இதனால் பல பெண்களும் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தொடக்கத்தில் ஃபோட்டோ ஷாப் மூலம் புகைப்படங்களை போலியாக சித்தரித்தனர். நாளடைவில் ஒரு நபரை பழிவாங்கும் எண்ணத்திலும், போதையில் செய்யக்கூடிய செயலாகவும், தொழிலாகவும் மாறியது. கொரோனா காலக்கட்டத்தில் இவை அனைத்தும் மோசடிகளாக உருவெடுத்தன. சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் மற்றும் காதல் உறவுகளுக்கான செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு விளம்பரப்படுத்தியும் மோசடியில் ஈடுபட்டனர். அதில் உடன் பேசுபவர் உண்மையானவரா மோசடி செய்பவரா என்பதே தெரியாது. அவர்கள் நெருக்கமாக பேசி நாம் அவர்களுடன் பகிர்ந்த தகவல்களை வெளியிடுவதாக மிரட்டி, பணம் பறிப்பார்கள்.

லாக்டவுன் சமயத்தில் லோன் ஆப்கள் பலராலும் பயன்படுத்தப்பட்டன. அதில் பெரும்பாலும் போலியான செயலிகள். அதில் கேட்கப்படும் கேமரா, புகைப்படங்கள், மைக்ரோஃபோன் போன்றவற்றுக்கான அனுமதி அளித்துவிடுவதால், நம் தரவுகளை திருடி தவறாக பயன்படுத்துவது மட்டுமின்றி மிரட்டி பணம் பறிக்கவும் செய்வார்கள். தரவுகளை போலியாக சித்தரிக்க AI அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சமீபமாக எக்ஸ் தளத்தில் இணைக்கப்பட்டிருந்த க்ரோக் AI தடை செய்யப்பட்டது.

காரணம், இத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் பொதுவான ஒரு போஸ்டில் தேவைகளை சொல்லி புகைப்படத்தை மாற்றியமைக்கும்படி கமெண்ட் செய்தால் செயலியில் இணைக்கப்பட்டிருக்கும் க்ராக் AI அதை அப்படியே மாற்றிக்கொடுத்துவிடும். இதை பலரும் ஆபாசமாக சித்தரிக்க ஆரம்பித்தனர். இதேபோல சில டெலிகிராம் பாட்களும் உள்ளன. AI பயன்பாட்டிற்கு பின் பலரும் தேவைக்கேற்ப ப்ராம்ட்களை கொடுத்து போலி சித்தரிப்புகளில் ஈடுபடுகின்றனர். தொடக்கத்தில் AIகளுக்கு எந்த பாலிசிகளும் இல்லை. இதை செய்யலாம், செய்யக்கூடாது என்பது தெரியாமல் கேட்பதை கொடுத்துவிடும். க்ரோக், சாட் ஜிபிடி, ஜெமினி போன்றவற்றில் தொடக்கத்தில் இந்தப் பிரச்னைகள் இருந்தன. சமீபமாக இவை திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுபோல நமக்குத் தெரியாத பல AIக்கள் உள்ளன. அவை மார்பிங் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு ஆணும் பெண்ணும் காதல் உறவில் இருக்கும் போது எடுக்கப்படும் அந்தரங்க காணொளிகளை விளையாட்டாக நண்பர்கள் வட்டத்திற்கு பகிர்கின்றனர். மொபைலில் உள்ள சில செயலிகள் அல்லது மால்வேர் இருந்தால் மொபைலிலிருந்து தானாகவே அவை பகிரப்படும். சமயங்களில் மொபைல் சர்வீஸ் செய்ய கடைகளில் கொடுக்கும்போதும் ஒரு சிலர் அதிலுள்ள தரவுகளை திருடி வெளியிடுகின்றனர். இது போன்ற ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை DropMMS போன்ற வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இவை மிகவும் பிரைவசி என்பதால், யார் அப்லோடு செய்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. போலியாக சித்தரிக்கப்படும் காணொளிகளில் சம்பந்தப்பட்ட நபரின் குரலையும் போலியாக உருவாக்குகிறார்கள்.

சமீபமாக பிரபலமான நடிகைகளின் போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் இப்படித்தான் வெளிவந்தன. சில சமயம் பகிரப்படும் தரவுகள் நீக்கப்படாமல் இணையத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்கலாம். பொதுவாக இணையம் மூன்று அடுக்குகள் கொண்டது. சர்ஃபேஸ் வெப், டீப் வெப், டார்க் வெப். கூகுளில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் சர்ஃபேஸ் வெப். அதற்கு கீழாக இருக்கக்கூடிய டீப் வெப் கடவுச்சொல் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

அதற்கும் ஆழமாக இருக்கக்கூடிய டார்க் வெப். இது முற்றிலும் ரகசியமானது. இணையத்தில் பரவப்படும் தரவுகள் இந்த டார்க் வெப்பில் இருந்தால் எளிதாக அவற்றை நீக்க முடியாது. டெலிகிராம், எக்ஸ் தளங்களில் ஆபாச தரவுகளை பதிவேற்றம் செய்யவே பிரைவசியாக நிறைய சேனல்களை உருவாக்குகிறார்கள். சமூகவலைத்தள கணக்குகளை நீக்கினாலும் புகைப்படங்களும், காணொளிகளும் அவர்களின் மொபைல்களில் இருப்பதால், மறுபடியும் புது கணக்குகளை உருவாக்கி பதிவிட முடியும்.

இணையத்தில் தங்களது ஆபாச புகைப்படங்களோ, சித்தரிக்கப்பட்ட காணொளிகளோ இருப்பதை கண்டறிந்தால், பெண்கள் முதலில் சைபர் கிரைம் தளத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளிக்க வேண்டும். புகாரின் பேரில் அந்த புகைப்படம் எந்தெந்த தளங்களில் இருக்கிறதோ அதன் லிங்க்குகளை சேகரித்து, அவற்றை நீக்குவதற்கான வேலைகள் நடைபெறும். இந்த தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், இதற்கு முன்பாக யார்வேண்டுமானாலும் ஸ்க்ரீன்ஷாட் அல்லது பதிவிறக்கம் செய்தும் வைத்திருக்கலாம்.

ஒரு பக்கம் தரவுகளை நீக்கம் செய்யும் வேலையும் மற்றொரு பக்கம் இவற்றை பதிவேற்றம் செய்பவர்களை கண்டறியும் தேடலும் இருக்கும். யாரேனும் கண்டுபிடிக்கப்பட்டால், ஒருவரின் அனுமதியின்றி புகைப்படங்கள், காணொளிகளை மார்பிங் செய்ததற்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததற்கும், அவரின் தனி உரிமையை தவறாக பயன்படுத்தியதற்கும் வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்கப்படும். ஆனால், சில பெண்கள் விஷயம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக தவறு செய்த நபரை கண்டித்துவிட்டு வழக்கை வாபஸ் செய்து விடுகின்றனர்.

சிலர் மட்டுமே தைரியமாக வழக்குப் பதிவு செய்கின்றனர். சில சமயங்களில் உடன் இருப்பவர்களே குற்றவாளிகளாக அறியப்படுகின்றனர். 2023ல் ஒரு பெண் இணையத்தில் பரவிவரும் தனது தவறான தரவுகளை நீக்குமாறு அணுகினார். அப்பெண்ணுடன் முன்னாள் காதலன் உதவுவது போல் உடன் வந்திருந்தான். இறுதியில் அந்தப் பெண்ணின் தரவுகளை வெளியிட்டதே அவன் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

தரவுகளை நீக்குவதில் பல சவால்கள் உள்ளன. முன்பு குறிப்பிட்டதுபோல சர்ஃபேஸ் வெப்பான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தரவுகளை ரிப்போர்ட் செய்தாலே குறிப்பிட்ட நாட்களில் நீக்கிவிடுவார்கள். இதுவே டீப் வெப் மற்றும் டார்க் வெப்களில் உள்ள தரவுகளை நீக்குவது சவால் நிறைந்தது. டார்க் வெப்பில் உள்ள வலைத்தளங்கள் பெயரில்லாத, அறியப்படாத நிலையில் இருக்கும். நாம் தரவுகளை நீக்கம் செய்ய தொடங்கும்போதே மர்ம நபரால் வலைத்தளத்தின் URL மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். சவால்களுக்கிடையே, என்னிடம் வந்த புகார்களின் அடிப்படையில் இணையத்தில் பரவி வந்த 1068 ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோ தரவுகளை நீக்கம் செய்துள்ளேன்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, போஸ்ட்கள் பதிவிடாமல் இருப்பவர்களுக்கும் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டல்கள் வருகின்றன.
இல்லையெனில் ஏதாவது தவறான போஸ்ட்டில் தேவையின்றி அவர்களை டேக் செய்தும் பிரச்னை செய்வார்கள். ஏதேனும் மொபைல் எண்கள் கிடைத்தால், அதை 18+ தளங்களில் பதிவிடுவார்கள். இது போன்ற சம்பவங்கள் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் நடக்கிறது. சிலர் வீடுகளின் படுக்கை அறைகளில் கூட சிசிடிவி கேமராக்கள் வைத்துள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஹேக்கர்ஸ்கள் தரவுகளை திருடி வெளியிடுகின்றனர்.

தங்களது புகைப்படம் அல்லது காணொளி வெளியாகியுள்ளதை அறியும் பெண்கள், முதலில் அவர்களின் புகைப்படங்கள் எங்கெல்லாம் உள்ளன என்பதை தேடலாம். அவற்றின் லிங்க்குகளை சேகரித்த பின்னர், உடனடியாக சைபர் செல் மூலம் கம்பளைண்ட் செய்ய வேண்டும். மீண்டும் இது போன்ற பிரச்னை தீவிரமாக உள்ளதெனில் காவல்துறையில் தெரிவித்து, ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்.

நம் தரவுகளை தேடுகின்ற வலைத்தளமும் நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதை கவனிக்க வேண்டும். அது போலியாக இருந்தால், அவர்களே கூட தரவுகளை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. stopncii.org, Tineye.com, pimeyes.com போன்ற வலைத்தளங்களில் முயற்சி செய்யலாம். ஒரு பெண்ணுடைய செய்திகள் வெளிவரும் போது, அதனை அதிகமாக பரப்புகின்றனர். இது சம்பந்தப்பட்ட நபரை பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் விஷயம் வெளிவராமல் பாதுகாத்து, வழக்கு பதிவு செய்யவும் தயங்குகின்றனர். இன்று நம் நடைமுறை வாழ்க்கையை விடவும் இணையத்தள வாழ்க்கை பல மடங்கு வேகமாக நகர்கிறது. இந்நிலையில் நம் தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நமது பொறுப்பு.

(புலனாய்வு தொடரும்…)

Tags : Kungumam Dozhi ,
× RELATED வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது பயன்படுத்திக் கொள்ளுங்கள்!