×

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வையாளர்கள் ஆய்வு

ஈரோடு,மார்ச்20: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், ஈரோடு கிழக்கு,ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி,பெருந்துறை,பவானி,அந்தியூர் ஆகிய 6 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையமாக ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியும், கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையமாக கோபி கலை அறிவியல் கல்லூரியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குப்பதிவு நாளான வரும் ஏப்ரல் 23ம் தேதி, வாக்குப்பதிவு நிறைவு செய்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்புடன் எடுத்து வந்து, வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமி தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்களான மினிஸ்தி, பார்தி தீக்‌ஷித், செலவீன பார்வையாளரான ஹலட்கர் ராஜேஷ் நம்தேவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில், தொகுதி வாரியாக வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்படும் அறைகள், அங்குள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 4ம் தேதி வரை மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை, வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான அர்பித் ஜெயின், உதவி கலெக்டர் (பயிற்சி) காஞ்சன் செளத்ரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மகேஸ்வரி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Erode ,Erode East ,Erode West ,Modakkurichi ,Perundurai ,Bhavani ,Andhiyur ,
× RELATED இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை