கோபி, மார்ச் 18: கோபியில் அடுத்தடுத்து வாகன சோதனையில் 2,65,250 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோபி அருகே அரசூரில் நேற்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அக்கரை கொடிவேரியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வாழைக்காய் விற்பனை செய்த பணம் ரூ.54,750 உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
