டெஹ்ரான்: இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஆலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. கத்தாரில் எல்பிஜி ஆலை தீப்பற்றி எரிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நீடித்து வரும் போரில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நாசிர்ஜாதே, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி ஷம்கானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது செவ்வாயன்று விடிய விடிய நடத்திய தாக்குதலில் ஈரானின் 3வது உயர்மட்ட அதிகாரியான உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டார். இந்த தொடர் இழப்புகள் ஈரானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் ஈரான் வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது.
இதனிடையே ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மற்றும் அதன் கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. ஈரானில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் சமார் 80சதவீதம் இயற்கை எரிவாயுவில் இருந்து வருவதால் இந்த தாக்குதல் அந்த நாட்டின் மின் விநியோகத்திற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், கத்தார், துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி உள்ளது.
கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய ஏவுகணை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கத்தாரை சேர்ந்த அவசரகால மீட்புக் குழுவினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ராஸ் லஃபான் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையங்களில் ஒன்று என்பதால், இந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதல், கடுமையான சேதத்தை விளைவித்துள்ளதாக கத்தார் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கில், கத்தாரையும் அதன் அண்டை நாடுகளையும் ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருவது கண்டிக்கத்தக்கது’ என கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கத்தாரில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களை வெளியேறுமாறு கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் குவைத்தின் மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குலின் காரணமாக தீப்பற்றி எரிந்து வருகின்றது. இது அருகில் உள்ள மின அப்துல்லா சுத்திகரிப்பு நிலையத்திலும் பரவியுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் தாக்குதல் காரணமாக தீப்பற்றி எரிந்துகொண்டு இருக்கின்றது. கத்தார் கடற்கரைக்கு அருகே மற்றொரு கப்பல் சேதமடைந்தது. இது ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கத்தால் கப்பல்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஆபத்தை காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அபுதாபியில் உள்ள அதிகாரிகள் ஹப்ஷான் எரிவாயு நிலையம் மற்றும் பாப் எரிவாயு வயலில் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த இடங்களின் மீது ஈரான் நடத்திய இரவுநேர தாக்குதல்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடலில் உள்ள யான்பு துறைமுக நகரில் உள்ள சாம்ரெப் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நேற்று டிரோன் தாக்கியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. சேதமதிப்பீடுகள் நடந்து வருகின்றது. கத்தார் இயற்கை எரிவாயு நிலையங்கள், குவைத்தின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதன் காரணமாக சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் நேற்று கடுமையாக உயர்ந்தன.
11 நீர்மூழ்கி கப்பல் அழிப்பு: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,‘‘ஈரானிடம் ஒரு காலத்தில் 11 நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்தன. ஆனால் இப்போது அவை அழிந்துவிட்டன” என்றார்.
ஈரானில் 3 பேருக்கு மரண தண்டனை
ஈரானில் ஜனவரி மாதம் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தின் போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த மூன்று பேருக்கும் ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் ஈரான் நீதித்துறை அச்சுறுத்தி வருகின்றது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு கூடுதல் இந்திய போர்க்கப்பல்கள்
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் அங்கு எரிபொருள் ஏற்றி நிற்கும் இந்திய கப்பல்கள் சிக்கி இருக்கின்றன. இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்து எரிசக்தி வழித்தடங்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா கூடுதல் போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்பி வைத்துள்ளது. 6க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
போருக்கு வலுக்கும் கண்டனம்
- கத்தார் ராஸ் லபான் எரிவாயு நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அரபு லீக் பொதுச்செயலாளர் அகமது அபுல் கெய்ட் கண்டித்துள்ளார்.
- செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரே, ஈரானின் சவுத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது ஈரானே நடத்திய தாக்குதலை புரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரிய அதிபர் கிறிஸ்டின் ஸ்டாக்கர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற மிரட்டலுக்கு உள்ளாக்க ஐரோப்பாவும் ஆஸ்திரியாவும் அனுமதிக்காது என்றார்.
- ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய அலட்சியமான பதிலடித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மோதல்கள் மேலும் தீவிரமடைவதை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.
- சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், ‘‘சர்வதேச உறவுகளின் படைபலத்தை பயன்படுத்துவதை நாங்கள் எதிர்த்து வருகிறோம். ஈரானின் தேசிய தலைவர்களை கொல்வதும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சம்பந்தப்பட்ட அனைவரும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி பிராந்தி மோதல் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் மீது ஈரான் அதிருப்தி
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் தளத்தில்,‘‘ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க போரைக் கண்டித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தெஹ்ரானில் எரிப்பொருள் சேமிப்பு கிடங்குகளை இஸ்ரேல் தகர்த்து மில்லியன் கணக்கான மக்களை நச்சுக்கு ஆளாக்கியபோதும் அவர் இஸ்ரேலை கண்டிக்கவில்லை. இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அவருக்கு கவலை ஏற்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் மக்கள் முடக்கம்
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதிகள் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கள் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களல் 900க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 10லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ரமலான் மாத நிறைவை குறிக்கும் ஈத் அல் பித்ருக்கான ஏற்பாடுகள் முடங்கியுள்ளது. புத்தாடைகள், இறைச்சி மற்றும் இனிப்பு பலகாரங்களை வாங்கி மகிழ்ச்சியோடு இருக்கும் பொதுமக்கள் போர் காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
