×

மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பக்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் சென்னை வருகை: முதற்கட்டமாக முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் நோயாளிகள் அனுப்பி வைப்பு

சென்னை: இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் நாடுகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி போர் தொடங்கியதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகளின் வான்வழிப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் இல்லாத காரணத்தால் பக்ரைன் நாட்டில் உள்ள தமிழர்கள் ஏராளமானோர் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். இந்நிலையில், பக்ரைனில் தவித்துக் கொண்டிருந்தவர்களில் முதியோர், நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து, அவர்களை தனி சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கு பக்ரைன் நாட்டில் உள்ள தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.

ஆனால் பக்ரைன் நாட்டிலிருந்து சென்னைக்கு விமான சேவையை நடத்தி வரும் கல்ப் ஏர்வேஸ் விமான நிறுவனம் தற்போதைய சூழ்நிலையில் பக்ரைனிலிருந்து விமான சேவை நடத்த முடியாது என்று கூறியது. இதையடுத்து, பக்ரைன் அருகே உள்ள சவுதி அரேபியா நாட்டின் தமாம் நகரில் இருந்து சிறப்பு விமானத்தை இயக்குவதற்கு கல்ப் ஏர்வேஸ் விமான நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, பக்ரைன் தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்கள், அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். 192 பேர் பக்ரைனிலிருந்து சொகுசு பேருந்துகளின் மூலம் சாலை வழியாக தமாம் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்து, கல்ப் ஏர்வேஸ் சிறப்பு விமானம் மூலம் 192 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஒரு சிலர் விமான டிக்கெட்டிற்கு பணம் இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு பக்ரைன் தமிழ்ச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன் விமான டிக்கெட்டுகள் எடுத்து, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, நேற்று காலை சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

அதில் வந்த 192 பேரும் குடியுரிமை, சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடித்து வெளியில் வந்தனர். அவர்களை தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்கள் வரவேற்று, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். பக்ரைன் நாட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 192 தமிழர்கள் முதல் கட்டமாக சென்னை திரும்பி உள்ளனர். அடுத்தகட்டமாக வரும் 21ம் தேதி இரவு, பக்ரைனில் புறப்பட்டு, 22ம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையம் வந்து சேர்வார்கள் என பக்ரைன் தமிழ் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags : Indians ,Bahrain ,Middle East ,Chennai ,Israel ,America ,Iran ,Middle Eastern ,United Arab Emirates ,Gulf ,
× RELATED தமிழ்நாடு-புதுச்சேரி...