உளுந்தூர்பேட்டை, மார்ச் 20: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகில் நேற்று வணிக வரித்துறை மற்றும் சுங்கத்துறை படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி டெம்போ மூலம் திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியை சேர்ந்த அசோக் என்பவர் திருப்பூரில் இருந்து சென்னைக்கு டி.ஷர்ட் எடுத்துச் சென்றார். செங்குறிச்சி சுங்கச்சாவடியில் நடத்திய அதிரடி சோதனையில் மினி டெம்போவில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 15 பாக்ஸில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் அணியக்கூட்டிய 2417 டி. ஷர்ட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் மற்றும் தேர்தல் உதவி அலுவலர் பாலசுப்ரமணியனிடம் ஒப்படைத்தனர்.
