×

வீட்டின் மீது மரம் விழுந்து விவசாயி பலி

தர்மபுரி, மார்ச் 20: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்த நிலையில், வீட்டின் மீது தென்னை மரம் விழுந்ததில் விவசாயி பலியானார். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. குறிப்பாக பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக பாப்பிரெட்டிப்பட்டியில் 53 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): தர்மபுரி-5, பாலக்கோடு- 40, மாரண்டஅள்ளி- 7, ஒகேனக்கல்- 2, அரூர்- 42.4, பாப்பிரெட்டிப்பட்டி- 53, மொரப்பூர்- 5, நல்லம்பள்ளி- 3 என மொத்தம் 166.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மாவட்டம் முழுவதும் சராசரியாக 18.5 மிமீ ஆகும். பலத்த காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பாலக்கோடு அருகே குத்தாலஅள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி நஞ்சப்பன்(75). இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 11 மணிக்கு வீசிய பலத்த காற்றுக்கு, வீட்டின் அருகில் இருந்த தென்னை மரம் வேரோடு சாய்ந்து, கூரையின் மீது விழுந்தது. இதில் வீடு இடிந்து விழுந்ததில் நஞ்சப்பன் பலியானார். இதுபற்றி தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விரைந்து வந்து, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Palacode ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...