×

படிங்க… படிங்க…. என கல்விக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் ஆட்சி; போடியில் தயாராகும் புதிய நூலக கட்டிடம் ரூ.1 கோடியில் கட்டுமானப் பணி தீவிரம்

 

போடி: போடியில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி அரசு ஒதுக்கியுள்ள நிலையில், பூமி பூஜை போடப்பட்டு கட்டுமானப் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள், வாசகர்கள், மாணவ, மாணவியர், போட்டித் தேர்வுக்கு தயாராவோர் திராவிட மாடல் அரசைப் பாராட்டியுள்ளனர். தேனி மாவட்டம், போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன; 1.10 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள 15வது வார்டில் நகர் காவல்நிலையம் பின்புறம், மீன்கடை தெருவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நூலகம் இயங்கி வந்தது. நகரில் உள்ள மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், தங்களது பொது அறிவை வளர்க்கவும், போட்டித் தேர்வுக்கு தயாராகவும், நூலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

தினசரி மாணவ, மாணவியர் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை படித்து பொது அறிவை வளர்த்தனர். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை தேடும் இளைஞர்கள், நூலகத்தில் படித்து போட்டி தேர்வுக்கு குறிப்பெடுத்து சென்றனர். மேலும், பொதுமக்கள், மாணவ, மாணவியர் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து, தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி இல்லத்திற்கு கொண்டு சென்று படித்துவிட்டு, பாதுகாப்பாக திருப்பி வந்து ஒப்படைத்து வந்தனர்.

புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
இந்த நிலையில் 50 ஆண்டு பழமை வாய்ந்த நூலகத்தில் கட்டிடங்களில் கீறல் விழுந்தும், மேற்கூரை சேதமடைந்தும் காணப்படுகிறது. மழை காலங்களில் மேற்கூரையில் இருந்து மழைநீர் உள்ளே இறங்குகிறது. இதனால், விலை மதிப்பற்ற அறிவுப் பொக்கிஷங்களான புத்தகங்கள் நனைந்து சேதமடைகின்றன. மேலும், மழை காலங்களில் வாசகர்கள் அமர்ந்து படிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வாசகர்களும், பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக நமது நாளிதழிலும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நூலகத்துறை சார்பில் நூலக கட்டிடத்தின் நிலை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நூலக கட்டிடத்தை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதனடிப்படையில், நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு திராவிட மாடல் அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியது.

நூலகத்திற்கு தற்காலிக இடம்
இதனிடையே, நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும்பணிக்கு சுமார் 6 மாத காலம் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை நூலகத்தை வேறு இடத்துக்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டது. தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்பியுமான தங்கதமிழ்ச்செல்வன், இது குறித்து நகராட்சியில் பரிசீலனை செய்தார். போடி சுப்புராஜ் நகர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கும் சோனை முத்து பூங்கா எதிர்புறம் நகராட்சி புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

அந்த சுற்றுலா மாளிகையில் தற்காலிகமாக நூலகத்தை மாற்றலாம் என நகராட்சி தெரிவித்த ஆலோசனையின் பேரில், தங்கதமிழ்ச்செல்வன் எம்பி சுற்றுலா மாளிகையை ஆய்வு செய்து அங்கு நூலகம் செயல்படலாம் என அறிவுறுத்தினார். இதையடுத்து நூலகம் அங்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் வாசகர்கள், மாணவ, மாணவியர், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் என்று கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புதிய நூலக கட்டிடத்திற்கு பூமி பூஜை
இந்நிலையில், புதிய நூலக கட்டிடப் பணிக்கு நேற்று முன்தினம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தங்கதமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இதில், நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், போடி நகரச்செயலாளர் புருஷோத்தமன், நூலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து நூலக கட்டிடப்பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags : Dravidian ,Bodi ,
× RELATED மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் கலெக்டர் ஆய்வு