×

ராயன் நூல் விலை உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மனு

ஈரோடு, பிப்.16:  ரயான் நூல் விலையை கட்டுப்படுத்தி ஈரோடு விசைத்தறியாளர்கள் உற்பத்தி நிறுத்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொது தொழிலாளர் சங்க (ஏ.ஐ.டி.யு.சி) பொதுசெயலாளர் சின்னசாமி ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சூளை, மாணிக்கம்பாளையம், சித்தோடு, சூரம்பட்டி, லக்காபுரம் போன்ற பகுதிகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ரயான் துணிகள், மஹராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.

கடந்த சில மாதங்களாக ரயான் நூலின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தீபாவளியின்போது, ஒரு கிலோ ரயான் நூல் ரூ.150ஆக இருந்தது. அந்த நூலின் விலை தற்போது ரூ.230ஆக உயர்ந்துள்ளது. ஆனால், ரயான் துணி விலை உயரவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அரசின் கவனத்துக்கு பல கடிதம் அனுப்பியும், நடவடிக்கை இல்லை. இதனால் கடந்த 11ம் தேதி முதல் வரும் 21ம் தேதி வரை 11 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தி உள்ளனர். தினமும், ரூ.7.5 கோடி மதிப்பில், 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதித்துள்ளது. நேரடியாக மறைமுகமாக 60ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து ரயான் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, சீரான விலையில் தொடரவும், விசைத்தறியாளர்கள் மீண்டும் உற்பத்தியை தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Ryan ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...