×

பாமக தலைமை நிர்வாக குழு அவசரமாக கூடியது: ராமதாசின் இறுதி முடிவு என்ன?

 

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்து விட்ட நிலையில் கூட்டணியை அறிவிக்காமல் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தனது கட்சியின் தலைமை நிர்வாக குழுவை இன்று அவசரமாக கூட்டி ஆலோசித்து வருகிறார். இக்கூட்டத்திற்கு பின் அவர் எந்த மாதிரியான முடிவெடுக்க போகிறார்? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் துவங்கவுள்ள நிலையில், ராமதாஸ் உடனடியாக முடிவு எடுக்க வலியுறுத்தி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் ராமதாஸ் தலைமையில் பாமக தலைமை நிர்வாக குழு கூட்டம் அவசரமாக இன்று தைலாபுரத்தில் கூடியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்ட நிலையில் 2 மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. தொகுதி பங்கீட்டை முடித்து வேட்புமனு தாக்கலுக்கு ஒவ்வொரு கட்சியும் தயாராகி விட்டன. ஆனால் ராமதாஸ் தலைமையிலான பாமக அணியோ, இதுவரை கூட்டணியை அறிவிக்காத நிலையில் தொண்டர்கள் சோர்வடைந்தனர். அக்கட்சியிலுள்ள 2ம் மட்ட நிர்வாகிகள் கட்சி தாவும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் பரவின. இதையடுத்து கூட்டணி தொடர்பாக விரைந்து முடிவு எடுக்க வலியுறுத்தி நிர்வாகிகள், ராமதாசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் அக்கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று அவசரமாக கூடியுள்ளது.

இதில் செயல் தலைவர் காந்தி, கௌரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்குபின் ராமதாஸ் கூட்டணி குறித்து அறிவிப்பார? இல்லை தேர்தலை புறக்கணிப்பாரா அல்லது வெளியில் இருந்து ஏதேனும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என்பது தெரியவரும். முன்னதாக ஜி.கே.மணி கூறுகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி தொடர்பாகவும், வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த நிர்வாக குழு கூடியுள்ளது. கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்’ எ்னறார்.

பாமக சின்னம், கட்சி தொடர்பான வழக்கு விசாரணை மே 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்ட நிலையில் அதற்குள்ளாக பொதுத்தேர்தல் ரிசல்டே வந்துவிடும் நிலை உள்ளது. இதன் காரணமாக நீதிமன்றத்தை வைத்து அன்புமணியை முடக்கும் கடைசிகட்ட வாய்ப்பும் பறிபோயுள்ளதால் ராமதாஸ் என்ன மாதிரியான முடிவு எடுக்க போகிறார், என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Tags : PMK Executive Committee ,Ramadoss' ,Puducherry ,Tamil Nadu ,PMK ,Ramadoss ,Executive Committee ,
× RELATED தேர்தல் ஆணையம் வழங்கும் பூத்...