புதுடெல்லி: மக்களவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் கமலேஷ் பஸ்வான் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘மார்ச் 11 நிலவரப்படி, 2025-26ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.81,502.62 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், ஊதியத்திற்காக ரூ.65,875.13 கோடியும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவுகளுக்காக ரூ.15,627.48 கோடியும் அடங்கும். தற்போது நிலுவையில் உள்ள தொகை ரூ.18,862 கோடியாகும். இதில் ஊதியத்திற்கு ரூ.8,688.29 கோடியும், பொருட்களுக்காக ரூ.9,692.28 கோடியும், நிர்வாக செலவுகளுக்காக ரூ.502.42 கோடியும் வழங்க வேண்டி உள்ளது.
இத்திட்டத்தில் 2024-25 நிதியாண்டு வரையிலான செலுத்தப்பட வேண்டிய அனைத்து நிதியும் வழங்கப்பட்டு விட்டது. மேற்கு வங்கத்தை தவிர மற்ற மாநிலங்களில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன’’ என்றார். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்தால் மார்ச் 9, 2022 முதல் மேற்கு வங்க மாநிலத்திற்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நிதி விடுவிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. 2022 நிலவரப்படி இத்திட்டத்திற்காக வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.3,082.52 கோடி என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு மொத்தம் ரூ.51,700 கோடி நிலுவை இருப்பதாக கூறி உள்ளது.
