×

இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தகவல் ஈரான் பாதுகாப்பு தலைவர் கொல்லப்பட்டார்: பசிஜ் படைப்பிரிவின் தலைவரும் பலி

துபாய்: இஸ்ரேல் நடத்திய துல்லிய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானியும், புரட்சிகர காவல் படையின் பசிஜ் தன்னார்வ குழுவின் தலைவர் ஜெனரல் குலாம் ரெசா சுலைமானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறி உள்ளார். இத்தகவலை ஈரான் உறுதிப்படுத்தவில்லை. ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேலிய ராணுவம் கடந்த 28ம் தேதி தொடங்கிய போரின் முதல் நாளில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஈரானின் ராணுவ நிலைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களை தாக்கி வரும் இஸ்ரேல் ராணுவம், ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து கொன்று வருகிறது. அந்த வகையில், கொல்லப்பட்ட அயதுல்லா கமேனிக்கு மிக நெருக்கமானவரும் ஈரானின் மூத்த தலைவருமான அலி லாரிஜானி கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஈரான் தலைவர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு தலைவரான லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர காவல் படையின் பசிஜ் தன்னார்வ குழுவின் தலைவர் ஜெனரல் குலாம் ரெசா சுலைமானியும் கொல்லப்பட்டிருப்பதாக காட்ஸ் கூறி உள்ளார். ஆனால் இந்த தகவலை ஈரான் உறுதி செய்யவில்லை. விரைவில் லாரிஜானி அறிக்கை வெளியிடுவார் என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், கடந்த 4ம் தேதி இலங்கை அருகே ஈரான் கப்பல் ஐரிஸ் டெனா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து லாரிஜானி கைப்பட எழுதிய அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது.

லாரிஜானி, சுலைமான் பலியானது ஈரானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனி காயமடைந்து ரகசிய இடத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அயதுல்லா கமேனி கொல்லப்பட்ட பிறகு ஈரானில் கிட்டத்தட்ட 2ம் கட்ட தலைவராக லாரிஜானி இருந்தார். இடைக்கால கவுன்சிலுடன் இணைந்து போரை வழிநடத்திய அவர் நாட்டின் நிர்வாகத்திலும் முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் அதிபர் மசூத் பெசெஷ்கியனால் தேச பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும், உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் கவுன்சில் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டவர். 12 ஆண்டுகள் ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவராகவும் இருந்த லாரிஜானி, ஈரானின் முதன்மை அணுசக்தி பேச்சுவார்த்தையாகவும் இருந்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்துடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் மறைந்த கமேனிக்கு வியூகம் குறித்து ஆலோசனை வழங்கவும் லாரிஜானி நியமிக்கப்பட்டார்.

இதே போல, ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர காவல் படையின் தன்னார்வ குழு பசிஜ். ஈரானில் தாய்நாட்டிற்கு சேவை செய்ய ஏராளமான இளைஞர்கள் தன்னார்வத்துடன் பசிஜ் படையில் சேர்வது வழக்கம். ஈரானில் சமீபத்தில் நடந்த உள்நாட்டு போராட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையாக அடக்கியது சுலைமானி தலைமையிலான பசிஜ் படைகள்தான். கடுமையான வன்முறை, பரவலான கைதுகள் என படைபலத்தை பசிஜ் பயன்படுத்தியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. தற்போது சுலைமானியின் இழப்பால் பசிஜ் படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாடு மேலும் சீர்குலையும். இதற்கிடையே, 18வது நாளாக ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கு இடையேயான போர் நேற்றும் நீடித்தது.

* போர் நிறுத்தத்திற்கான நேரம் இதுவல்ல: மொஜ்தபா
ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று வெளியிட்ட தகவலில், ‘‘போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்திற்கு சில பரிந்துரைகள் அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதனை உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மறுத்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் மண்டியிட வைக்கப்பட்டு தோல்வியை ஏற்றுக் கொண்டு இழப்பீடுகளை செலுத்தும் வரை அமைதிக்கான சரியான நேரம் இதுவல்ல என மொஜ்தபா கூறி உள்ளார்’’ என தெரிவித்துள்ளார். ஆனால் மொஜ்தபா உயிருடன் இருப்பதே சந்தேகம் என இஸ்ரேல் கூறி உள்ளது.

* வளைகுடா நாடுகள் மீது தொடர் தாக்குதல்
ஈரான் நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை, டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரான் டிரோன்களை இடைமறித்து அழித்ததால் ஐக்கிய அரபு எமிரேட்சில் சிறிது நேரம் வான்வெளி மூடப்பட்டது. மேலும் அங்குள்ள முக்கிய எண்ணெய் முனையமான புஜைரா எண்ணெய் நிலையத்தை குறிவைத்து ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இடைமறிக்கப்பட்ட ஏவுகணை பாகங்கள் வெடித்து சிதறியதில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் பலியானார். இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில் போரால் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.

Tags : Israeli ,Defense Minister ,Iran ,Basij Brigade ,Dubai ,Ali Larijani ,General ,Gholam Reza Soleimani ,Revolutionary Guard ,Basij Volunteer Force ,Israel ,Israeli Defense Minister ,Israel Katz ,
× RELATED அமெரிக்க தீவிரவாத எதிர்ப்பு மைய...