×

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் பறக்கும் படை சோதனையில் ரூ.23.28 கோடி பறிமுதல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

 

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டி : ஒரு வேட்பாளர் சட்டசபை தேர்தலின்போது அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காக செலவினம் மேற்கொள்ள இயலும். தேர்தல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்திட 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் மட்டுமில்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்பு குழுக்களும் இடம் பெற்றுள்ளன.

இதில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகளும் அடங்கும். தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். நேற்று வரை இக்கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும், அனைத்து தரப்பினராலும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் ரொக்கம் எடுத்து செல்லும்பொழுது அவை எப்படி பெறப்பட்டது, எதற்காக எடுத்து செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் அல்லது அதற்கான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்தால், அத்தொகை உடனடியாக உரியவரிடம் திரும்ப வழங்கப்படும், பறிமுதல் செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.

* மருத்துவ செலவிற்கான பணம் பறிமுதல் செய்யக்கூடாது

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மருத்துவ செலவிற்காக பெண் ஒருவர் பணம் எடுத்து சென்றார். இதை பறக்கும் படையினர் பிடித்தனர். அதைதொடர்ந்து அந்த பெண் அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு அழுதார். ஆனாலும் அந்த பணத்தை திருப்பி ஒப்படைக்க அதிகாரிகள் மறுத்தனர். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி கூறும் போது, ‘நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிப்பதாகவும், பொதுமக்கள் தங்களின் மருத்துவ செலவிற்காக கொண்டு செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்யக்கூடாது’ என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CRORE ,ARCHANA PATNAIK ,Chennai ,Chief Election Officer ,Chennai Chief Secretariat ,
× RELATED உடல் அடையாளங்கள் மீது இன்னும் எத்தனை...