×

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை: இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவிற்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே தூணில், கார்த்திகை தீபம் ஏற்றுமாறு உத்தரவிடக் கோரி ராம.ரவிக்குமார் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார்.

ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இதை எதிர்த்து கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் அறநிலையத்துறை உள்ளிட்டோர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன், டி.ரவீந்திரன், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி, ‘‘நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படும் 5 பேரை தீபத்தூணில் பூஜை செய்ய அனுமதிப்பது குறித்து முடிவு செய்து தெரிவிக்க தனி நீதிபதி கூறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதிதாக சிலரை சேர்த்துள்ளார். இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இரு நீதிபதிகள் அமர்வு வரும் கார்த்திகை தீபத்தின் போது தான் தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். இடைப்பட்ட காலங்களில் அந்த வழக்கை விசாரிக்க வேண்டியதில்லை’’ என்றனர்.

அப்போது நீதிபதிகள், ‘‘அவ்வாறு அனுமதிப்பதில் என்ன சிக்கல்’’ என்றனர். இதற்கு அரசு தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2 விதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வழக்கிற்கான அதிகாரத்தைக் கடந்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. ராமரவிக்குமார் உள்ளிட்டோர் தரப்பில், ‘அரசு எவ்வித சரியான காரணமுமின்றி, உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்பதால் தான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்றனர். இதற்கு நீதிபதிகள், என்ன உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? உத்தரவு விபரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். 5 பேரை பரிந்துரைப்பதில் பிரச்னை எனில், கோயில் நிர்வாகமே பூஜை செய்யலாமே? சிறிய விஷயம்.

அதைச் செய்து பிற பிரச்னைகளை தவிர்க்கலாமே? என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது எனக் கூறி விசாரணையை ஏப்.8க்கு தள்ளி வைத்தனர். இதற்கிடையே தனி நீதிபதியான ஜி.ஆர்.சுவாமிநாதன், ஐந்து பேர் சென்று ஐந்து நிமிடம் பூஜைகள் செய்வதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும். இது குறித்து இன்று நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கில் உரிய பதிலளிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவிற்கு, இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : G.R. Swaminathan ,Thiruparankundram ,Madurai ,Thiruparankundram… ,
× RELATED தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில்...