×

பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் பயங்கரம்; ஆப்கன் மருத்துவமனை குண்டு வீசி தகர்ப்பு; 400 நோயாளிகள் உடல் சிதறி பலி: மேலும் 250 பேர் படுகாயம்

 

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் நோயாளிகள் 400 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 250 பேர் படுகாயமடைந்தனர். எல்லை பிரச்னை மற்றும் எல்லைத் தாண்டிய தீவிரவாதம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து இரு நாடுகளும் நேரடியாக ஒன்றன் மீது மற்றொன்று மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த சில வாரங்களாக எல்லையில் நடந்த தீவிர மோதல்களால் இரு நாடுகளை சேர்ந்த 1,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு, இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் கபூலின் ஹூட்கைல் பகுதியில் அமைந்துள்ள 2,000 படுக்கைகள் கொண்ட ‘ஓமிட் போதை ஒழிப்பு சிகிச்சை’ மருத்துவமனை மீது, நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதலை நடத்தின. பாகிஸ்தான் விமானப்படை விமானங்களின் குண்டுமழையில் அந்த மருத்துவமனை கட்டிடம் தரைமட்டமானது. இந்த கோர சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 400க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் செய்தி தொடர்பாளர் மொஷாரப் ஜைதி கூறுகையில், ”இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. காபூலில் எந்த மருத்துவமனையும் குறிவைக்கப்படவில்லை. தீவிரவாதிகளின் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை மட்டுமே துல்லியமாக தாக்கியதாகவும், பொதுமக்களையோ அல்லது மருத்துவமனைகளையோ இலக்கு வைக்கவில்லை” என கூறியுள்ளார்.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ‘இந்த தாக்குதல் மனிதநேயத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம். தூதரக ரீதியிலான பொறுமை எல்லையை எட்டிவிட்டது. இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பழிவாங்குவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

* பாக். தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினத்தை யொட்டி நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறுகையில், ”பாகிஸ்தானில் அகமதியர்கள் மீது நடத்தப்படும் கொடூரமான ஒடுக்குமுறையையோ அல்லது உதவியற்ற ஆப்கானியர்களை பெருமளவில் திருப்பி அனுப்புவது அல்லது புனித ரமலான் மாதத்தில் நடத்தப்படும் வான்வழி தாக்குதல்களையோ எப்படி குறிப்பிடுவது என்று வியப்பாக இருக்கிறது. இவை கண்டனத்துக்குரியது” என்றார்.

ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ”மனித குலத்திற்கு எதிரான இத்தகைய செயல்களை நாங்கள் மிகக் கடுமையாக கண்டிக்கிறோம். இத்தகைய மிருகத்தனம் உலகளவில் கடுயைமாக நிராகரிக்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் சகோதர சகோதரிகளுக்கும் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்றார்.

Tags : Kabul ,Pakistan ,Afghanistan ,
× RELATED இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் சிக்கி லெபனானில் 912 பேர் பலி!