புதுச்சேரி, மார்ச் 17: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்கும் என்று ஆரம்பத்தில் பேச்சு இருந்தது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் விஜய்க்கும் இடையே நல்லுறவு இருந்தபோதிலும், ரங்கசாமி பாஜக-வுடனான கூட்டணியை முறிக்க விரும்பவில்லை. பாஜக-வை தனது ‘கொள்கை எதிரி’ என்று அறிவித்துள்ள விஜய், பாஜக இருக்கும் கூட்டணியில் இடம்பெற விரும்பாததால் தனித்துப் போட்டி என்ற அதிரடி முடிவை எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களைக் களம் இறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று (மார்ச் 16) முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், தவெக சார்பில் விருப்ப மனுக்களை வாங்க முக்கிய நிர்வாகிகள், பனையூர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் காலத்திலிருந்தே வலுவாக கட்டமைப்பு உள்ளதாக தவெகவினர் தரப்பினர் கருதுகின்றனர்.
இதையடுத்து முக்கிய நிர்வாகிகள், பனையூர் சென்று விருப்ப மனு வாங்கி வந்துள்ளனர். மேலும் சிலர் இன்று(17ம் தேதி) சென்று விருப்ப மனு வாங்க இன்று சென்னை செல்கின்றனர். இதையடுத்து புதுவையில் 30 தொகுதிகளில் தவெக தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து புதுச்சேரி மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சாமிநாதன் கூறுகையில், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடவுள்ளதாக, அதன்படி முதல்கட்டமாக லாஸ்பேட்டை, உழவர்கரை, ராஜ்பவன், நெட்டப்பாக்கம், உப்பளம், மணவெளி, காரைக்கால் தெற்கு, ஏனாம் ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிட ஏதுவாக விருப்ப மனுக்களை பெற்றுள்ளோம். இன்னும் சிலர் இன்று பனையூர் சென்று விரும்ப மனுவினை பெறவுள்ளனர். புதுச்சேரியில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மிக வலுவாக இருக்கிறோம். இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுபான்மையினர், பொதுமக்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனவேதான் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம், போட்டியிடுவோர் பட்டியல் விரைவில் தயராகிவிடும், என்றார்.
