×

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

 

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் பதாகைகள், சுவரொட்டிகள், விளம்பர வாகனங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தும் விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது. அதேபோல், சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் அரசியல் பிரசாரங்கள், ஆன்லைன் விளம்பரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான தகவல் பரவல் உள்ளிட்டவை கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து கட்சி பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட உள்ளது. மேலும், தேர்தல் செலவுக் கணக்குகள் பராமரிப்பு, வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுகள் வழங்குவது, பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்வது போன்ற சட்டவிரோத செயல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது.

தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்படாத வகையில் அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர். அதே நேரத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Arsana Budnayak ,Chennai Chief Secretariat ,
× RELATED Dravidian Model 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண்...