×

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்குவங்கத்தில் 44 லட்சம் பேர் வாக்களிக்க முடியுமா?.. சுப்ரீம் கோர்ட், தீர்ப்பாய முடிவுக்காக காத்திருப்பு

 

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பதில் கடும் சிக்கல் நீடிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, சுமார் 60,06,675 வாக்காளர்களின் பெயர்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டன. இவர்களின் குடியுரிமை மற்றும் ஆவணங்கள் தொடர்பாக சட்ட ரீதியான ஆய்வுகள் தேவைப்பட்டதால், ஒட்டுமொத்த பட்டியலும் நிறுத்தி வைக்கப்பட்டது. இவர்களின் 16,50,000 கோப்புகள் மட்டுமே இதுவரை தேர்தல் ஆணையத்தால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆவணங்கள் சரியாக இருந்த 60 சதவீத பெயர்கள் துணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 40 சதவீத நபர்களின் ஆவணங்கள் முறையாக இல்லாததால் அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள சூழலில், விடுபட்டவர்களின் நிலையை முடிவு செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் சிறப்பு தீர்ப்பாயங்களை அமைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு இந்த தீர்ப்பாயங்கள் செயல்படும். வரும் ஏப்ரல் 6 மற்றும் 9ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் நிலுவையில் உள்ள 44 லட்சம் பேரின் மனுக்களை குறுகிய காலத்தில் பரிசீலிப்பது தேர்தல் ஆணையத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகள் இடையே கடும் விவாதம் எழுந்துள்ளது. இக்கட்டான இந்த நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வரும் 25ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் வரை தகுதியுள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கலாம் என்ற விதி இருந்தாலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மனுக்களை ஆய்வு செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் குறித்து தீர்ப்பாயம் இறுதி முடிவெடுக்கும். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் பணிகள் நடக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : West ,Supreme Court ,Kolkata ,West Bengal Assembly ,West Bengal ,
× RELATED ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சாம்பியன்...