×

காரைக்கால் அம்மையாருக்கு முக்தியளித்த தலம்!

(சென்ற இதழ் தொடர்ச்சி…)
நாட்டியம் ஆடிய முதல் தலம்
*முதல்சபை – ரத்தினசபை – ஊர்த்துவதாண்டவம் (சிவபெருமாளின் பாதம் தலைக்கு மேலே இருக்கும்) – திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்.
*இரண்டாவது – கனகசபை – ஆனந்த தாண்டவம் – சிதம்பரம் நடராஜர் கோயில்.
*மூன்றாவது – வெள்ளிசபை – சுவாமி வலது காலை தூக்கி ஆடுகிறார் – மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.
*நான்காவது – தாமிரசபை – திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்.
* ஐந்தாவது – சித்திரைசபை – குற்றாலம் குற்றாலநாதர் கோயில்.
– என்று சிவபெருமான் தாண்டவம் புரிந்த தலத்தை வரிசைப்படுத்துகிறது புராணம்.

இதில், முதல் சபை என்று திருவாலங்காட்டை குறிப்பிடுகிறது. மேலும், அதனை ரத்தினசபை என்றும் புகழ்கிறது. முன்னொரு காலத்தில், நடராஜப் பெருமாள் ரத்தினத்தாலே காட்சியளித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. பிற்காலத்தில், அவைகள் கொள்ளை போய்விட்டது. தற்போது பஞ்சலோகத்தில்தான் நடராஜர் சுவாமி காட்சியளிக்கிறார். உலகில் இந்த ரத்தின சபையில்தான், நடராஜப் பெருமாள் ஊர்த்துவதாண்டவம் கோலத்தில் அருள்கிறார். அதனை இன்றும் காணலாம். அதே போல், சிவபெருமாள் நாட்டியம் ஆடிய முதல் ஸ்தலமும் இதுவே!

பேயுரு கொண்ட காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி. இவரின் கணவர், இவரைவிட்டு விலகி, வேறொரு பெண்ணோடு இல்லறம் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதற்கு புனிதவதி என்றே பெயர் வைத்து வளர்க்கிறார்கள். இந்த செய்தி புனிதவதியின் (காரைக்கால் அம்மையார்) காதிற்கு செல்ல.. புனிதவதி தன் கணவனைநோக்கி செல்கிறாள். இதை அறிந்த கணவன், தன் இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு, ஊர் எல்லைப் பகுதிக்கு சென்று புனிதவதியின் (காரைக்கால் அம்மையார்) காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அவளும் மன்னித்து விடுகிறாள்.

கணவனே தம்மை வேண்டாம் என்று சொன்னபோது, இந்த உடலில் உள்ள என் சதைகள் இருந்து என்ன பயன்? என்று புனிதவதி (காரைக்கால் அம்மையார்) நினைத்த நொடியில் பேயுரு கொள்கிறாள். அதன் பின், புனிதவதி கைலாயம் செல்கிறாள். அங்கு பார்வதிதேவி, புனிதவதியை பார்க்கிறார்.

“சுவாமி… யார் அது, எலும்புக் கூடாக செல்கிறது?’’ என்று பார்வதி சிவனிடம் கேட்க,
“வரும் இவள்தான், `நம்மைப் பேணும் அம்மை காண்’ நம்மையெல்லாம் காப்பாற்றும் அம்மா.. என்று சிவபெருமானே புனிதவதியை அம்மா என்று கூறியதால் புனிதவதி, காரைக்கால் அம்மையார் என்று பெயர் பெறுகிறாள். (இனி காரைக்கால் அம்மையார் என்றே பார்ப்போம்)
“உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’’ என்று காரைக்கால் அம்மையாரைப் பார்த்து சிவபெருமான்
கேட்கிறார்.

“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ்இருக்க என்றார்’’
(பெரியபுராணம் – 60)

அதாவது, “ஆடாத தாண்டவம் நீ ஆடவேண்டும். அதைப் பார்த்து நான் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்’’ என்று வரம் கேட்கிறாள். அப்போது சிவபெருமான் கூறுகிறார்;
“நான் திருவாலங்காட்டில் முதல் தாண்டவம் ஆடுகிறேன். அதனை கண்டு நீ முக்தி பெறுவாய்’’ என்று கைலாயத்தில் இருந்த அம்மையாரை மீண்டும் பூலோகத்திற்கு அனுப்புகிறார். அப்போது, பழையனூரின் எல்லைப்பகுதிக்கு காரைக்கால் அம்மையார் வந்துவிடுகிறாள்.

கூழாங்கற்களில் லிங்கம்

“அப்பனே.. உன் எல்லைப் பகுதிக்கு வந்துவிட்டேன். நீ எங்கே இருக்கிறாய்?’’ என்று காரைக்கால் அம்மையார் கூறும்போது; கூழாங்கற்களின் மூலமாக, லிங்கமாக தோன்றி சுவாமி, வழியமைத்துக் கொடுக்கிறார். (முன்னொரு காலத்தில் இவ்விடம் கூழாங்கற்கள் நிறைந்த பகுதிகளாகும்).

லிங்கத்தின்மீது எப்படி நடப்பது? என்று யோசித்த அம்மையார், தலைகீழாக, தலையை வைத்து நடந்தே இக்கோயிலுக்கு வந்து முக்தி அடைந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இன்றும், ஊர்தவதாண்டவம் ஆடும் நடராஜர் சந்நதிக்கு பின்புறத்தில், காரைக்கால் அம்மையார் ஜீவ சமாதி அடைந்ததாக ஓதுவார் மூர்த்திகளால் கூறப்படுகிறது. மேலும், உள்ளிருந்து எப்போதும் சிவபெருமானை நினைத்து பாடிக் கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரம் ரகசியம் போல், இங்கு அம்மையார் ரகசியம்!

திருவாலங்காடுசெப்பேடு

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் என மூவரும் தேவாரம் பாடலை பாடிய தலம் ஆகும். மேலும், காரைக்கால் அம்மையார்தான் “மூத்த பதிகம்’’ அதாவது தேவாரத்தை முதலாவதாக பாடியது அம்மையார்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரம் தோன்றியதே காரைக்கால் அம்மையாராலதான் என்பது சிறப்பு! அது மட்டுமல்லாது, திருத்தணிக்கு செல்லும் வழியில், அருணகிரிநாதர் இக்கோயிலில் நான்கு திருப்புகழை பாடியுள்ளார். ஆகையால், இக்கோயிலில் திருப்புகளும் உண்டு. அதே போல், இந்தத் தலத்தில் முருகப் பெருமானே நேரில் தோன்றி காட்சியளித்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இத்தகைய திருவாலங்காடு கோயிலின் அதிசயங்களை உறுதிப்படுத்த, எழும்பூர் மியூசியத்தில், “திருவாலங்காடு செப்பேடு’’ என்று கேட்டால், இன்றும் அதனை கண்டுகளிக்கலாம். திருவாலங்காடு கோயிலை பற்றி சான்றுகள் உள்ளன என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

சனியின் மகன்

சனிபகவானுக்கு, மாந்தி-குளிகை என இருமகன்கள். இதில், மாந்திக்கு தனி சந்நதி இக்கோயிலில் உண்டு. “மாந்தீஸ்வரர்’’ என்னும் பெயரில் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சிவபெருமானை, மாந்தீஸ்வரர் வழிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர் தடைகளை சந்தித்து வருபவர்கள், மாந்தீஸ்வரரை வழிபட்டால் தடைகள் நிவர்த்தியாகும்.

பிரசாதம்

திருப்பள்ளியெழுச்சியின் போது, சுவாமிக்கு வெண்பொங்கல் நிவேதிக்கப்படும். இரண்டு காலத்திற்கும் சுத்தான்னம் (வெறும் சாதம்), பள்ளியறையின்போது சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நிவேதிக்கப்படும். மேலும், விசேஷ நாட்களில் புளியோதரை, தயிர் சாதம் என உபயதாரர்கள் விரும்பும் சாதத்தை செய்து, அதனையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

விழாக்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் வரக்கூடிய ஆருத்ரா இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா, மார்கழி மாதத்தில் வரும். அன்று இரவு முழுவதும் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடைபெறும். பங்குனி உத்திரம் அன்று, பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும். அதே போல், சிவராத்திரி மற்றும் நவராத்திரி விசேஷம். பிரதோஷம், சஷ்டி ஆகியவையும் இங்கு சிறப்பாக நடைபெறும்.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6:00 மணியில் இருந்து இடைவிடாமல், இரவு 8:00 வரை தொடர்ந்து திறந்திருக்கும்.

எப்படி செல்வது: இக்கோயிலுக்கு ரயில் மார்க்கமாக செல்வது சிறப்பு. சென்னையில் இருந்து அரக்கோணம் ரயிலில் ஏறி, திருவாலங்காடு ரயில் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 5 கி.மீ., தூரம் பயணித்தால், இக்கோயிலை அடையலாம். திருவாலங்காடு ரயில் நிறுத்தத்தில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் இக்கோயிலுக்கு செல்கிறது. கோயில் தொடர்புக்கு: கு.அருளானந்தம், திருக்கோயில் ஓதுவார் மூர்த்தி – 9944491326.

Tags : Karaikal Ammaiyar ,Rattinasabai ,Urthuvathandavam ,Lord Shiva ,Thiruvalankadu Vadaranyeswarar Temple ,Kanakasabai ,Anandathandavam ,Chidambaram ,Nataraja… ,
× RELATED மன்னனுக்கு துணை நின்ற மகான்!