×

ஜாதக பலனை உறுதிப்படுத்தும் வழிகளில் ஒன்று

ஒரு பாவகமானது (BHAVAM-இடத்தின் தன்மை மற்றும் குணம்) வேறு பாவகங்களோடு எப்படிப்பட்ட தொடர்பில் உள்ளது என்பதை வைத்துக்கொண்டுதான் பலன் சொல்ல வேண்டியிருக்கிறது. நான்காம் பாவகம் சம்பந்தப்பட்ட தசையோ புத்தியோ நடந்துவருகின்ற பொழுது, முக்கியமாக, ஜாதகரின் தந்தை ஆயுள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு வழி உண்டு. காரணம் ஒன்பதாம் பாவகத்தின் (தந்தை) எட்டாம் பாவமாக நான்காம் பாவகம் அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.

இரண்டாம் இடம் என்பது ஆரம்பக் கல்வியையும், நான்காம் இடம் என்பது உயர்நிலைக் கல்வியையும், ஐந்தாம் பாவகம் என்பது அதைவிட உயர்நிலைக் கல்வியையும் குறிப்பதாக ஒரு கணக்கு உண்டு. சில பேருக்கு இரண்டாம் பாவகம் கெட்டு நான்காம் பாவகம் வலிமையாக இருந்தால், ஆரம்பக் கல்வி அவர்களுக்குச் சரியாக இல்லாமல் இருக்கும். ஆனால் உயர்நிலைக் கல்வியில் இருந்து பிடித்துக் கொள்வார்கள். அதைப்போலவே சிலருக்கு நான்காம் பாவகம் சரியில்லாமல் இருக்கும். இரண்டாம் பாவகமும் ஐந்தாம் பாவகமும் வலிமையோடு இருக்கும். ஆரம்பக் கல்வியை நன்றாகப் படிப்பார்கள். பிறகு உயர்நிலைக் கல்வி படிக்கும் பொழுது படிப்பில் கவனம் இருக்காது. எப்படியோ கஷ்டப்பட்டு முடிப்பார்கள். ஆனால், அதற்குப் பிறகு மறுபடியும் ஆர்வம் வந்து, மேல்நிலைக் கல்வியை மிக அற்புதமாகப் படித்து தங்க மெடல் வாங்குவார்கள்.

எனவே ஒரு பாவகம் கெட்டுவிட்டால் அந்த பாவகம் முழுமையும் சரியில்லாமல் போய்விடும் என்று முடிவுக்கு வந்து விடக்கூடாது. நான்காம் பாவகம் தாயைப் பற்றிச் சொல்லும். நான்காம் பாவகம் கெட்டுவிட்டால் ஜாதகருக்கு தாயோடு உள்ள உறவு கெட்டு, தாயின் பிரிவு என்று நினைக்க வேண்டாம். சந்திரன், நன்றாக அமைந்துவிட்டால், பாவக காரகம் மறைமுகமாக வலுப்பெற்று விடும். பாவகம் வலுவிழந்தாலும் காரகம் தனக்குரிய பலனைக் கொடுத்துவிடும். நான்காம் பாவகத்தில் பல்வேறு விஷயங்கள் கொட்டிக் கிடப்பதால் அது அதற்குரிய காரகங்களையும் இணைத்துத்தான் எந்தக் காரகம் பலன் தரும், எது பலன் தராது என்ற முடிவுக்கு வரவேண்டும். என் நண்பர் ஒருவருக்கு நான்காம் பாவாதிபதி லக்கினத்திற்கு 12-ல் மறைந்தார். நன்கு சம்பாதித்தார். ஆனால், அவர் பெயரில் எந்தச் சொத்தும் இல்லை. மனைவி பெயரில் சொத்து பதிவு செய்தார்.

நான் ஒருமுறை அவரிடம் வேடிக்கையாகக் கேட்டேன். ‘‘உங்கள் ஜாதகப்படி நான்காம் பாவகம் விரய பாவகத்தோடு தொடர் புள்ளதாக இருக்கிறது. ஜாதகப்படி உங்கள் பெயரில் ஒரு சொத்தும் இருக்க முடியாதே’’ அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். ‘‘நீங்கள் சொல்வது உண்மைதான். அது என்னமோ தெரியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே சொத்துக்களை என் மனைவி பெயரில் வாங்கினேன். என்னை யாரும் மனைவி பெயரில் சொத்து வாங்கச் சொல்லவில்லை. ஆனாலும் என்னமோ ஒரு மன உந்துதலில் வாங்கி விட்டேன்’’ என்றார். அதைப்போலவே நான்காம் பாவகம் வாகனத்தைக் குறிக்கிறது அல்லவா. ஒரே ஒரு வாகனத்தை மட்டும் அவர் பெயரில் வாங்கினார். பிறகு வாங்கிய எல்லா வாகனங்களும் அவருடைய பிள்ளைகள் பெயரில்தான் பதிவாகி இருக்கின்றன. காரணம் நான்காம் பாவகம் 12 ஆம் பாவகத்தோடு உள்ள தொடர்பு.

ஒரு ஜாதகத்தில் நான்காம் அதிபதி வக்ரம், அஸ்தமனம் என பலவீனம் அடைந்தாலும், 8, 12 ஆம் அதிபதி சேர்க்கைப் பெற்றாலும் வீடு அமைவதில் சிக்கல் இருக்கும். வாகனம் அமைவதில் சிக்கல் இருக்கும். அதிலும் நான்காம் பாவக அதிபதி எட்டாம் பாவக சம்பந்தப்பட்டு விட்டால் வண்டி வாங்கினாலும் பிரச்னைகள் இருக்கும். அவ்வப்பொழுது சிறு விபத்துக்கள் ஏற்படும். ஒரு ஜாதகம். மிதுன லக்னம். நான்காம் இடமாகிய கன்னியில் செவ்வாய் சுக்கிரன். அமர ஏழில் லக்னாதிபதி அமர்ந்தார். 1,4க்குரிய புதன் ஏழில் அமர்ந்தார். உபய லக்னம் என்பதால் ஏழாம் இடம் பாதக ஸ்தானமாக மாறுகிறது. 4 என்பது படிப்பு. சுகங்களைக் குறிக்கும். 4க் குரியவர் ஏழில் அமர்ந்து அதாவது பாதகத்தில் அமர்ந்ததால் படிப்பில் விருப்பம் இல்லை. ஆனாலும் எப்படியோ கஷ்டப்பட்டு படித்து முடித்தார். வேலை வேலை என்று அலைந்தார். சரியான வேலை அமையவில்லை.

நான்காம் பாவகமாகிய சுக ஸ்தானத்தில் ஆறுக்குரிய செவ்வாய் வந்து அமர்ந்ததால், அதுவும் மிதுனத்துக்கு 12க்குரிய சுக்கிரனோடு அமர்ந்ததால், தாயாரிடம் நல்ல பெயர் இல்லை. எப்பொழுது பார்த்தாலும் தாயாரோடு கருத்து விரோதம் இருந்து கொண்டே இருந்தது. 6, 4ம் பாவகத் தொடர்பு கொண்டதால் எப்பொழுது பார்த்தாலும் விரோதத் தன்மையும் கோபமும் பகை உணர்ச்சியும் இருக்கும். நான்கு என்பது இரட்டைப்படை பாவம். எப்பொழுதும் இவர்கள் அன்பை விட பொருட்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். 6ம் பாவகம் 4ம் பாவகத் தொடர்பு கொண்டதால் வேலை வேலை என்று அலைந்து கொண்டே இருப்பார்கள். உறவுகளை பெரிய அளவுக்கு கவனிக்க மாட்டார்கள். சுயநலம் சற்று தூக்கலாக இருக்கும். இன்னொரு ஜாதகம். இதுவும் ஒரு நண்பரின் ஜாதகம். 66 வருடங்களாக உள்ளூரில் இருக்கிறார். பெரிய அளவுக்கு வெளியூருக்குப் போய் தங்கியது கிடையாது.

மீன லக்னம். 4க்குரிய புதன் லக்கினத்தில். கூடவே சுக்கிரன். புதன் நீச பங்கம் பெற்றார். நான்காம் பாவகம் வலிமை பெற்றது. அதனால் அவர் எங்கே போனாலும் ராத்திரி கூட தங்காமல் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுவார். லக்னத்தில் இருந்து பாவகத்தைப் பார்ப்பதை விட, அந்த பாவகத்தையே லக்னமாக வைத்துக்கொண்டு சில விஷயங்களை நாம் ஆராய முடியும். உதாரணமாக தாயைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான்காம் பாவகம் பார்க்க வேண்டும். நான்காம் பாவகத்தையே லக்னமாகக் கொண்டால் கிட்டத்தட்ட தாயின் ஜாதகம் வந்துவிடும். அதை வைத்துக்கொண்டு தாயாருக்கு உரிய பல்வேறு விஷயங்களைச் சொல்லலாம். ஆனால் அது துல்லியமானது அல்ல. சரி பார்ப்பதற்கு தாயாரின் அசல் ஜாதகமும் இருக்க வேண்டும். காரணம் பல பிள்ளைகள் இருந்தால் ஒவ்வொரு பிள்ளையின் நான்காம் பாவகமும் சற்று மாறுபடலாம்.

என்னதான் இருந்தாலும், இவைகளெல்லாம் சங்கிலித் தொடர்புகள். ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் தாயாரின் உடல்நிலையைக் கவனித்த பொழுது, அவருடைய ஐந்து பிள்ளைகளின் நான்காம் பாவகமும் தாயாரின் உடல்நிலையை ஒரே மாதிரி சுட்டிக்காட்டின. சற்று முன்பின் இருந்தாலும், தாயாருக்கு ஆயுள் தோஷம் இருப்பதை நான்கு ஜாதகங்களில் தசா புத்திகளும் கிரக அமைப்புகளும் வலிமையாகக் காட்டின. இதற்கு என்ன பொருள் என்று சொன்னால், எல்லா ஜாதகங்களும் சரியாக எழுதப்பட்டிருக்கிறது. ஜாதகத்தின் நம்பகத் தன்மையை அறிய, அது சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள இப்படியும் சில ஜோதிடர்கள் பார்ப்பார்கள். அதனால்தான் கிராமங்களில், குடும்ப உறுப்பினர்கள் அவ்வளவு பேரின் ஜாதகங்களும் எழுதப்பட்ட நோட்டை ஜோதிடரிடம் கொடுப்பார்கள்.அவர் முக்கியமான விஷயங்கள் எல்லாம் மற்ற ஜாதகங்களிலும் இருக்கிறதா என்பதைப் பார்த்து, சொல்ல வேண்டிய பலனை உறுதிப்படுத்துவார்.

Tags :
× RELATED காரைக்கால் அம்மையாருக்கு முக்தியளித்த தலம்!