இந்த தொகுப்பில், தொடர்ந்து மூன்று மகான்களை தரிசிக்கவிருக்கிறோம். முதலாவதாக, நாம் ஏற்கனவே ஸ்ரீ பாதராஜர் மடம் வழிவந்த, ஸ்ரீ பத்மநாபதீர்த்தரை பற்றி பார்த்துள்ளோம். தற்போது, அவரின் சீடரான “ஸ்ரீ லக்ஷ்மிதர தீர்த்தரை’’ (Shri Lakshmidhara Teerthar) பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
பத்தாண்டுகள் சேவை
மகான் ஸ்ரீ பத்மநாபதீர்த்தர், தனக்கு பின் ஸ்ரீ லக்ஷ்மிதர தீர்த்தரை நியமித்து, மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்படி உத்தரவிட்டார். மேலும், தான் பூஜை செய்து வந்த ஸ்ரீ பிரசன்ன ராமரையும், சாலிகிராம ரூபியான ஸ்ரீ கோபிநாதரையும் லக்ஷ்மிதர தீர்த்தருக்கு கொடுத்து, பூஜை செய்ய ஆணையிட்டார். அதன்படி, தினமும் ஸ்ரீ பிரசன்ன ராமரையும், சாலிகிராம ரூபியான ஸ்ரீ கோபிநாதரையும் பூஜை செய்து வந்தார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மடத்தில் தங்கியிருந்து சேவைகளை செய்துவந்தார், ஸ்ரீ லட்சுமிதர தீர்த்தர். அதன் பின், மத்வரின் கொள்கைகளை பரப்பவேண்டும் என்கின்ற எண்ணத்தில், மடத்தைவிட்டு வெளியேறி, வட இந்தியா முழுவதிலும் பயணம் செய்தார். லட்சுமிதர தீர்த்தர், செல்லும் இடமெல்லாம் மத்வரின் போதனைகளை, தனது பாணியில், உபன்யாசம் மூலமாக மக்களிடத்தில் அறியப்பட்டார்.
மன்னரை வழிநடத்தியது
மிக முக்கியமாக, அவர் காலத்து மன்னர்களை வழிநடத்தியிருக்கிறார். அவர்களின் ராஜ்ஜியங்களில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் பேருதவியாற்றியுள்ளார். 1334-ஆம் ஆண்டு காலகட்டத்தில், தன் சீடன் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு “ஸ்ரீ சங்கர்ஷண தீர்த்தர்’’ என்னும் பெயரிட்டு, ஸ்ரீ பாதராஜ மடத்தின் அடுத்த பீடாதிபதியாக்கினார். ஸ்ரீ லக்ஷ்மிதர தீர்த்தர், 1324-ஆம் ஆண்டு முதல் 1334-ஆம் ஆண்டு வரை மத்வ பீடத்திற்கு சேவை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1334-ஆம் ஆண்டு, மார்கசிர்ஷ மாதத்தில், சுக்ல பட்சத்தின் போது பிருந்தாவனமானார். ஆனால், சரியாக இவரின் மூலபிருந்தாவனம் எங்கு உள்ளது என்பது இன்னும் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது.
மகா ஞானி சமத்மேஷ தீர்த்தர் (25)
அடுத்ததாக நாம் தரிசிக்க இருக்கும் மகான், “ஸ்ரீ சமத்மேஷ தீர்த்தர்’’ (Sri Samatmesha Teerthar) இவர் பலிமார் மடத்தின் இரண்டாவது மடாதிபதியாவார். பாரம்பரிய மடமான பலிமார் மடத்தை ஒளிரச் செய்தவர் என்றும் மஹாஞானி என்றும் சமத்மேஷ தீர்த்தரை புகழ்கிறது, பலிமார் மடம். ஸ்ரீ மத்வாச்சாரியாரின் அன்பு சீடரான ஸ்ரீ ஹிருஷிகேச தீர்த்தரிடம், புனித தீட்சை பெற்று, அவரின் திருக்கரங்களினாலே ஸ்ரீசமத்மேஷ தீர்த்தர் என்னும் பெயர் பெரும் பாக்கியம், சமத்மேஷ தீர்த்தருக்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல!
கிருஷ்ணா நதிக்கரை
“சமத்மேஷ தீர்த்தர்” என்ற பெயரைப் பிரித்து பொருள் பார்த்தால், அதன் ஆன்மிக அர்த்தம் தெளிவாக தெரியும்.
சமத்மேஷ (Samadmeesha)
சமத் (Samath / Sama) – சமம், சமநிலை, சாந்தம், சமச்சீர் மனநிலை.
ஈஷ / மேஷ (esha / Mesha) – இறைவன், ஆண்டவன், தலைவர்.
ஆக, சமநிலையை ஆண்டவன் அதாவது சமச்சீர் ஞானத்தில் நிலைபெற்ற இறைபக்தன் என்று பொருள் கொள்ளலாம். இன்னும் தெளிவாக கூறவேண்டுமானால், மன அமைதி, சமச்சீர், தன்னடக்கம் கொண்ட உயர்ந்த ஆன்மிக நிலை. சுருக்கமாக, “சமத்மேஷ தீர்த்தர்” என்றால் “சமச்சீர் ஞானத்தில் நிலைபெற்ற புனித சந்நியாசி” என்று சொல்லலாம். பெயரிலேயே இத்தகைய ஆன்மிக அர்த்தங்களை உள்ளடக்கிய சமத்மேஷ தீர்த்தர், தன் குருவை போலவே இவரும் முழுமையாக இறைவனை தியானித்து, துறவு வாழ்க்கையை நடத்தி வந்தார். பராபவ சம்வத்ஸரத்தில், ஷ்ரவண சுக்ல பிடிகேயில், கிருஷ்ணா நதிக்கரையில், ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களை அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இவரின் மூலபிருந்தாவனம்கூட எங்குள்ளது என்பது தெரியவில்லை.
வாதத்தில் வெல்ல முடியாதவர் வேதவியாசதீர்த்தர் (26)
சோதே மடத்தின் எட்டாவது மடாதிபதியான, “ஸ்ரீ வேதவியாசதீர்த்தர்’’ பற்றிய சிறு குறிப்புகளை பார்க்கலாம். இவர் ஒப்பற்ற அறிஞராக இருந்ததால், சிறந்த விவாதக்காரர் ஆனார். சாஸ்திரங்களிலும், வேத – புராணங்களிலும் விவாதம் செய்வதில், வேதவியாசதீர்த்தர் எப்போதும் முன்னிலை வகித்தார். வாதத்தில் இருக்கும் எதிர் தரப்பினர் எழுதிய நூல்களையே மேற்கோள் காட்டி, அவர்களை திணறடிப்பதில் வல்லவர்.
நல்ல தேர்ச்சி
சங்கரபாஷ்யம் போன்ற பிற சம்ரதாய படைப்புகளிலும், வேதவியாசதீர்த்தருக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. சுமார் எட்டு ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார் என்று கூறப்படுகிறது. இவரின் குரு ஸ்ரீ வாசுதேவ தீர்த்தர் ஆவார். தன் சிறந்த மாணவனை தேர்வு செய்து, சில பரிசோதனைகளை செய்த பின்னர் தன் அடுத்த பீடாதிபதியாக “ஸ்ரீ வராஹ தீர்த்தரை’’ தேர்வு செய்தார். அதன் பின்னர், கி.பி. 1377 – ஆண்டு காலகட்டத்தில் ஆஷ்விஜா, சுக்ல, சதுர்த்தி அன்று பிருந்தாவனப் பிரவேசம் ஆனதாக கூறப்படுகிறது. மூலபிருந்தாவனம் எங்கு இருக்கிறது என்பது பற்றிய குறிப்புகள் இல்லை.
(மத்வ மகானின் பயணம் தொடரும்…)
ரா.ரெங்கராஜன்
