×

மேற்கு வங்கத்துக்கு புதிய தலைமைச் செயலாளரை நியமித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு புதிய தலைமைச் செயலாளரை நியமித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கு வங்க மாநில தலைமை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துஷ்யந்த் நரியலாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேற்கு வங்க மாநில உள்துறை முதன்மைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கமித்ரா கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியான நிர்வாக மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருந்த நந்தினி சக்ரவர்த்தி உடனடியாக அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக 1993-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான துஷ்யந்த் நரியலா புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனேயே மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றம், வரவிருக்கும் தேர்தலை எவ்வித அரசியல் குறுக்கீடும் இன்றி நடத்த ஆணையம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள துஷ்யந்த் நரியலா, ஹரியானாவில் 1967-ஆம் ஆண்டு பிறந்தவர். அறிவியல் மற்றும் சட்டத்துறையில் (B.Sc, LL.B) பட்டம் பெற்ற இவர், சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் என்பதால் நிர்வாகச் சிக்கல்களைத் திறம்படக் கையாள்வதில் வல்லவர் என்று பெயரெடுத்தவர். முசோரியில் உள்ள புகழ்பெற்ற லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் துணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அங்கு வருங்கால ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிப்பதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

அவரது நீண்டகாலப் பணியில் கிழக்கு மற்றும் மேற்கு மேதினிபூர் போன்ற சவாலான மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியதுடன், பேரிடர் மேலாண்மை, பள்ளிக்கல்வி மற்றும் சுயஉதவிக் குழுக்கள் போன்ற பல்வேறு துறைகளில் முதன்மைச் செயலாளராக முத்திரை பதித்துள்ளார். இந்தப் புதிய பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, அவர் வடவங்க வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நேரத்தில் மாநில நிர்வாகத்தின் நடுநிலைமையைக் காப்பதிலும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதிலும் இவரது அனுபவம் மிகவும் நம்பகமானது என்று ஆணையம் கருதுகிறது. திங்கட்கிழமை முதல் மாநிலத்தின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நாரிவாலா, 2026-ஆம் ஆண்டின் இந்த உயர் அழுத்தமான தேர்தலை எவ்வாறு கையாளப் போகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Election Commission ,West Bengal ,Kolkata ,Chief Secretary ,West ,Bengal ,Chief Secretary of State ,Officer ,Tushyand Nariala ,INTERIOR ,THE STATE OF ,I. A. S. ,
× RELATED எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம்...