×

யுஏஇயின் புஜைரா முனையத்திலிருந்து நான்காவது இந்திய கப்பல் பாதுகாப்பாக புறப்பட்டது: 80,800 டன் கச்சா எண்ணெயுடன் வருகிறது

புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜைரா எண்ணெய் முனையத்தில், இந்திய கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக புறப்பட்டது. ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கிய எண்ணெய் சேமிப்பகமான புஜைரா முனையத்தின் மீது ஈரான் நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டாலும் அதிலிருந்து சிதறிய துண்டுகள் முனையத்தில் விழுந்து தீப்பிடித்தது. ஆனாலும் எண்ணெய் ஏற்றுமதி பணிகள் பாதிக்கப்படவில்லை என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு நடுவே புஜைரா முனையத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்திய கப்பல் பாதுகாப்பாக புறப்பட்டிருப்பதாக இந்திய அரசு கூறி உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட தகவல் குறிப்பில், ‘சுமார் 80,800 டன் முர்பான் வகை கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஜக் லாட்கி எனும் இந்திய கப்பல், இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு புஜைராவிலிருந்து இந்தியா நோக்கி பாதுகாப்பாக புறப்பட்டுள்ளது.

கப்பலில் உள்ள அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். போர்ப் பகுதியிலிருந்து எவ்வித சேதமும் இன்றி வெளியேறிய 4வது இந்திய கப்பல் இது’ என கூறப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய பிறகு அங்கு மேற்கு பகுதியில் 24 இந்திய கப்பல்களும் கிழக்கு பகுதியில் 4 கப்பல்களும் சிக்கியிருந்தன.

இவற்றில் கிழக்கு பகுதியிலிருந்து ஜக் பிரகாஷ் கப்பல் வெளியேறி ஆப்ரிக்காவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்கிறது. மேற்கு பகுதியில் இருந்து சிவாலிக், நந்தா தேவி ஆகிய 2 இந்திய கப்பல்கள் 92,712 டன் எல்பிஜி எரிவாயுவுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி வருகின்றன. இதில் சிவாலிக் கப்பல் இன்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தையும் நந்தா தேவி நாளை காண்ட்லா துறைமுகத்தையும் வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : UAE ,Fujairah terminal ,New Delhi ,United Arab Emirates' ,Fujairah ,US ,Iran ,Kerch island ,
× RELATED கேரள சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல்