புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்வாக உள்ளதால் அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தொடர்ந்து நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் 6 பேர் உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் பீகார், ஒடிசா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் கூடுதல் இடத்தைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கும் நிலையில், ‘பாஜகவினர் எங்களுடைய கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்கின்றனர்’ என்று முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். குதிரை பேரத்தைத் தவிர்க்க காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைத்தது. பீகாரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான போட்டி நிலவி வருவதால், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிகள் தங்கள் கட்சி எம்எல்ஏக்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
அரியானாவில் 2 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுவதால், கட்சி மாறி ஓட்டளிப்பதைத் தடுக்க அரசியல் கட்சிகள் கொறடா உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 5 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முதல்வராக கடந்த 2005ம் ஆண்டு முதல் சுமார் 10 முறை பதவி வகித்து சாதனை படைத்த ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ் குமார், சட்டப்பேரவை, மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார். தனது நீண்டகால அரசியல் பயணத்தில் நாடாளுமன்ற மேலவையான ராஜ்யசபாவுக்கு செல்ல வேண்டும் என்பது தனது விருப்பம் என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 5ம் தேதி அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், பீகாரில் காலியாக உள்ள 5 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இன்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பீகாரில் சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த நிதிஷ் குமார் யுகம் முடிவுக்கு வந்து, அம்மாநில அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
நிதிஷ் குமாரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பீகாரில் முதல்முறையாக பாஜக சார்பில் முதல்வர் பதவியேற்க வாய்ப்புள்ளது.
தற்போது துணை முதல்வராக இருக்கும் சாம்ராட் சவுத்ரி அடுத்த முதல்வராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு பிரசார பயணத்தின் போது நிதிஷ் குமார் பேசுகையில், ‘பொதுமக்கள் அனைவரும் சவுத்ரிக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்; உங்களது வளர்ச்சித் தேவைகளை அவரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்’ என்று கூறி தனது ஆதரவை வெளிப்படுத்தினார். மேலும், இந்த புதிய அமைச்சரவையில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் நித்யானந்த் ராய் பெயரும் பரிசீலனையில் உள்ளது. பீகாரின் நீண்டகால திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்த அதிகாரப் பகிர்வு மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
