×

பாஜவை வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள்: கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேட்டி

சென்னை: காரல் மார்க்ஸின் 143வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூர் கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் அளித்த பேட்டி: திமுகவுடன் பேச்சுவார்த்தை அதே நிலையில் தான் உள்ளது. கட்சி கமிட்டி முடிவை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவிப்போம். கடந்த முறை ஆறு இடங்களில் போட்டியிட்டோம். இந்த தடவை கூடுதல் இடங்களை கேட்டோம். அதிக கட்சிகள் சேர்ந்திருப்பதால் ஒரு தொகுதியை குறைத்து கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். நாங்கள் பேசி முடிவை எட்டுவோம். பாஜவை வீழ்த்துவது தான் எங்களுடைய ஒரே குறி. திமுக தலைமையிலான கூட்டணியில் நீடித்து பாஜ அங்கம் வகிக்கும் கூட்டணியை தோற்கடிப்போம்.

தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கொடுத்துள்ள போர் காரணமாக உலகின் பல நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் பல்வேறு விதமான பாதிப்பை சந்தித்து வருவதாகவும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டு நெருக்கடியை ஒன்றிய அரசு மூடி மறைக்கிறதே தவிர, அதை போக்க எந்த ஒரு வழி வகையும் செய்யவில்லை. போரை உடனடியாக நிறுத்த இந்தியா தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும். நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக பங்கேற்கும்.

இன்றைய தினம் (நேற்று) பேச்சுவார்த்தை என்றுதான் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளைய (இன்று) தினம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான தயாரிப்பில் திமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் என எல்லோரும் அந்த பணிகளை மேற்கொள்ள இருப்பதால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பம். அந்த விருப்பத்தைத் தான் திமுகவிடம் சொல்லியிருக்கிறோம்.

புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினால் நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு தொகுதிகள் தருவது கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதே சிரமத்திற்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சியினருக்கு கூடுதல் தொகுதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலைவிட அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய முடிவு. இதை பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம். அவர்கள் தங்களது தலைவரிடம் கலந்து பேசி தெரிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : BJP ,Communist ,Chennai ,Karl Marx ,Connemara Public Library ,Egmore, Chennai ,State ,Secretary of India ,Veerapandian ,
× RELATED மின் மானியம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா பாராட்டு