கோவை காளப்பட்டி பகுதியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: பெட்ரோல் வாங்கி மக்கள் வீட்டில் வைப்பது ரிஸ்க். இரண்டு மூன்று நாட்கள் இருந்த காஸ் பிரச்னை சரி செய்யப்பட்டதால், ஓட்டல்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டன. தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எதற்காக நடத்தினார்கள், அங்கு என்ன பேசினார்கள் என அவர்களை தான் கேட்க வேண்டும். விஜய் பற்றிய எனது கருத்தை நான் மாற்றிக் கொள்ளவில்லை. அதிமுக உடன் கூட்டணி அமைக்கலாம் என பேசியது குறித்து அந்த கட்சியினரிடம் தான் கேட்க வேண்டும். விஜய் பற்றிய எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. யாரையும் எதிர்பார்த்து நாங்கள் இல்லை. எதிர்க்கட்சியாக உள்ள எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. நாங்கள் எங்கள் டைம் லைனில் சரியாக சென்று கொண்டிருக்கிறோம்.
சிபிஐ வழக்கு இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? சிபிஐ வழக்கு வேண்டும் என கேட்டது தவெக. அதற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். ஜனநாயகன் படத்தை பொறுத்தவரை விஜய்யே கருத்து சொல்லவில்லை. விஜய் எங்காவது ஜனநாயகன் விவகாரத்தில் என்ன பிரச்னை என சொல்லட்டும் நான் பேசுகிறேன். இந்த பிரச்சனையில் பாஜ மீது யாரும் குற்றம் சுமத்தவில்லை. டீ, காபி ஒன்றாக கலக்க முடியாது என்ற உவமை குறித்த எனது கருத்தில் மாற்றம் இல்லை. தவெக கொள்கை வேறு, எங்கள் கொள்கை வேறு. எங்கள் கூட்டணியிலும் கொள்கைக்கு முரணான கட்சிகள் இருக்கின்றன. பொது எதிரியை வீழ்த்த ஒரே அணியில் இருக்கிறார்கள். அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியை வெற்றி பெற பாடுபடுகிறோம். எங்கள் கூட்டணி பலமாக, வலுவாக உள்ளது. அதிமுக தொண்டர்கள் வெற்றியை சுவைக்க வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார்கள். அதேவெறி பாஜ தொண்டர்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* ‘சீட் கேட்க மாட்டேன்’
‘என்னை யாரும் வேட்பாளராக நிற்க வேண்டும் என சொல்லவில்லை. கட்சி கொடுத்த வேலையை செய்கிறேன். கட்சி போட்டியிட சொன்னால் செய்வேன். நான் சீட் கொடுக்கும் இடத்திலும் இல்லை. வாங்கும் இடத்திலும் இல்லை. அது குறித்து கட்சி முடிவு எடுக்கட்டும். சீட் தாருங்கள் என நான் கேட்டது இல்லை. கட்சி சொன்னதால் அரவக்குறிச்சி, கோவை தொகுதியில் போட்டியிட்டேன். நானாக எனக்கு இதை கொடுங்கள் என கேட்க மாட்டேன்’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.
* கட்சிய வளர்க்கத்தான் அதிமுகவை விமர்சித்தேன்
அண்ணாமலை கூறுகையில், நான் பாஜவின் உண்மையான தொண்டன். 2024 நாடாளுமன்றத்தில் தனியாக பாஜ போட்டியிட்ட போது, எங்கள் கட்சியை வளர்க்க அதிமுகவை விமர்சித்தேன். எடப்பாடியும் என் மீது சில விமர்சனங்களை வைத்துள்ளார். இப்போது கூட்டணியில் இருப்பதால், எங்கள் தலைவர்கள் சொல்வது போல நான் நடந்து கொள்கிறேன். முன்பு பேசியதை திரும்பி பார்த்து சொன்னால், யாரும் அரசியல் செய்ய முடியாது. முதலமைச்சராக ஸ்டாலினை எங்கும் விட்டு தந்தது இல்லை. நேரில் பார்த்தால் அவருக்கு தர வேண்டிய மரியாதையை தருவேன் என்றார்.
* கோவை இல்லைனா சென்னை: வானதி கெஞ்சல்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் வடக்கு தொகுதியை குறி வைத்துள்ளார். தெற்கு தொகுதியில் மீண்டும் வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் வடக்கு தொகுதியில் பணிகளை செய்து வருகிறார். மேலும், தனது படம் அச்சிட்ட காலண்டரை கடந்த ஜனவரி மாதம் மக்களுக்கு விநியோகம் செய்தார். இதனை அறிந்த அவரது கட்சினரே அவரை தடுத்தனர். ஆனாலும், அதை கண்டு கொள்ளாமல் அவர் பணிகளை செய்கிறார். இந்த நிலையில் அதிமுகவில் வடவள்ளி சந்திரசேகருக்கு வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் தருவதாக கூறி அவரை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது அதிமுக தலைமை. இந்த தகவல் வானதிக்கு தெரியவந்ததும், வடக்கு தொகுதி தனக்கு கிடைக்காது என உறுதி செய்து கொண்டார். இதனால் வடக்கு தொகுதியில் இருந்த ஆர்வத்தை கைவிட்டார். அவர் கோவையில் சீட் தராவிட்டாலும் பிரச்னை இல்லை, தனக்கு சென்னையிலாவது சீட் தரவேண்டும் என பாஜ மேலிடத்தில் அடம்பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
* கொள்கை எதிரில்லாம் எங்களுக்கு இல்லைங்க… அன்புமணி திடீர் அழைப்பு
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு, பாமக தலைவர் அன்புமணி குடும்பத்துடன் நேற்று வருகை தந்தார். அவருக்கு, கோயில் நிர்வாகம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கும், சவுமியா அன்புமணி, மகள் சஞ்சித்ரா ஆகியோருக்கும் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கினர். பின்னர் அன்புமணி அளித்த பேட்டி: கூட்டணிக்கு கொள்கை பேசிக்கொண்டு இருக்க முடியாது. ஒருமித்த கட்சி யாராக இருந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். இதில் கொள்கை எதிரி என்று யாரும் இல்லை. யார் வந்தாலும் சரிதான். கூட்டணியில் எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்று இன்னும் முடிவாகவில்லை. அதை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். திருப்போரூர் தொகுதியில் சவுமியா நிற்கிறாரா என்று கேட்டதற்கு, ஏன் இப்படியெல்லாம் கிளப்பி விடுறீங்க என்று கூறி வேகமாக சென்றார்.
