பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நார்தன் பிராங்க் சாலையை சேர்ந்தவர் பாலாஜி (34). இவர், எருக்கஞ்சேரி ஜிஎன்டி சாலையில் கடந்த ஒரு வருடமாக செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, ஒரு தம்பதி குழந்தையுடன் பாலாஜி கடைக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான ஒரு குறிப்பிட்ட எலியின் பெயரை கூறி அதை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அப்போது அவர் முதல் தளத்திலிருந்து 2வது தளத்திற்கு சென்று வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட அந்த எலியை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது, தம்பதி மற்றும் குழந்தை அங்கு இல்லை.
அதன் பிறகு பாலாஜி, கடையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, கூண்டில் வைக்கப்பட்டிருந்த 8 பறக்கும் அணில்களை, அந்த தம்பதி திருடி சென்றது தெரிய வந்தது. ஒவ்வொரு அணிலும் ரூ.15 ஆயிரம் மதிப்பு இருக்கும் எனவும், மொத்தம் ரூ.120 லட்சம் மதிப்புள்ள 8 அணில்கள் திருடு போயிருப்பதாக பாலாஜி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
