×

வீடு புகுந்து கத்திமுனையில் நகை பறித்தவர் கைது: 27 சவரன் மீட்பு

சென்னை: அரும்பாக்கம், என்.எஸ்.கே நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் ருக்மணி (54). இவரது கணவர் ரவிச்சந்திரன் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், ருக்மணி தனது மகள் ஹேமலதா மற்றும் பேரக்குழந்தையுடன் வசித்து வருகிறார். ரவிச்சந்திரன் பணி முடிந்து இரவு தாமதமாக வருவதால், வீட்டின் சாவியை ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு உறங்குவதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில், ஜன்னல் ஓரம் இருந்த சாவியை எடுத்து மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த ருக்மணியை எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த 27 சவரன் நகை மற்றும் 8,500 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினார். புகாரின் பேரில், அமைந்தகரை போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம், முகப்பேரில் உள்ள தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த சுப்ரமணி (28) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 27 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் முழுமையாக மீட்கப்பட்டது. துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்து, நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

Tags : Chennai ,Rukmani ,4th Street, NSK Nagar, Arumbakkam ,Ravichandran ,State Transport Corporation ,Hemalatha ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இல்லாத ரூ.20 லட்சம் பறிமுதல்