×

லிப்ட் கேட்டவரை பணம் பறித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் சிறை

சென்னை: கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். கொத்தனார் வேலை செய்து வந்த இவர், கடந்த 2021 ஏப்ரல் 4ம் தேதி அதிகாலை 2 மணிக்கு ரெட்டேரி சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த நபரிடம், தன்னை பாலாஜி நகரில் இறக்கி விடுமாறு சங்கர் கேட்டுள்ளார். அவரை ஏற்றிச்சென்ற வாலிபர், சிறிது தூரம் சென்றதும், மறைவான இடத்தில் பைக்கை நிறுத்தி, சங்கரை மிரட்டி, பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், மூக்கு உள்ளிட்ட இடங்களில் பலமாக தாக்கி அவரிடம் இருந்த 1,000 ரூபாயை பறித்துவிட்டு தப்பியுள்ளார்.

பலத்த காயமடைந்த சங்கர், சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய கொளத்தூர் போலீசார், சங்கரை பணத்துக்காக கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த சசிகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.கீதாராணி முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சி.பாலாஜி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் பிற சான்றுகள் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்தான் இந்த குற்றத்தை செய்துள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சசிகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Tags : Chennai ,Shankar ,Kolathur ,Retteri junction ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இல்லாத ரூ.20 லட்சம் பறிமுதல்