×

பூட்டுக்கு நடக்கும் மல்லுக்கட்டு முக்கோண நட்புக்கு சீட்டு: முன்னாள் அமைச்சருக்கு கல்தாவால் வாரிசுக்கு கேட்டு புது சபதம்

திண்டுக்கல் மாநகராட்சி முதல் மேயராக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்தவர் மருதராஜ். தற்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளராகவும் உள்ளார். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். இதயக்கனி எம்ஜிஆரை போலவே முன்பகுதியில் சுருள் முடி வைத்து பிரபலமானவர். 2001-06 காலக்கட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் தொழில்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக நயினார் நாகேந்திரன் இருந்தபோது, மருதராஜ் உப்பு வாரியத்தின் தலைவராகவும், எடப்பாடி பழனிசாமி சிமென்ட் வாரிய தலைவராகவும் இருந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் இருந்தே நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியுடன் மருதராஜ்க்கு நெருங்கிய நட்பு இருந்துள்ளது.

இந்த முக்கோண நட்பின் மூலம் பூட்டு மாவட்டமான திண்டுக்கல் தொகுதியில் எப்படியும் சீட் வாங்கி விட வேண்டுமென ரொம்பவே வேகம் காட்டி வருகிறார் மருதராஜ். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தான் சார்ந்த சமூகத்தின் வாக்கு கணிசமாக உள்ளது என்பதை குறிப்பிட்டு தலைமையை மட்டுமின்றி, தனது நெருங்கிய நண்பர் நயினார் நாகேந்திரன் மூலமும் காய் நகர்த்தி வருகிறார். தனக்கு சீட் வேண்டும் இல்லாவிட்டால் தனது மகன் பிரேம்குமாருக்கு சீட் வேண்டுமென்பதில் ரொம்பவே உறுதியாக பணியாற்றி வருகிறார். தனக்கு ஆதரவாக சமூக வலைதளங்களை பயன்படுத்துமாறு சமூக அமைப்பினருக்கு ரகசிய வேண்டுகோள் விடுத்து ஆதரவு திரட்டி வருகிறார்.

தனக்கு போட்டியாக தன்னுடன் இருந்தவரே கோதாவிற்கு தயாராகிறார் என்ற தகவல் சிட்டிங் எம்எல்ஏவான திண்டுக்கல் சீனிவாசனின் காதுக்கு போக வானத்திற்கும், பூமிக்கும் இடையே குதியாய், குதித்துள்ளார். என்னுடனே இருந்து என்னையே காலி செய்ய திட்டமிட்டுள்ளாரா என டென்ஷனின் உச்சிக்கே சென்றுள்ளார். இதேபோல் கட்சி மேலிடத்து பேச்சிலும் மாற்றம் தெரிகிறதாம். தனக்கு எதிராக மருதராஜ் காய் நகர்த்தி வருவதும், இதில் ஓரளவுக்கு அவருக்கு முன்னேற்றமும் கிடைத்துள்ளது என்பதை திண்டுக்கல் சீனிவாசனும் உணர்ந்து டிராக்கை மாற்றியுள்ளார்.

எனக்கு சீட் கொடுக்கக்கூடாது என்பதற்காக என்ன காரணத்தை கூறப் போகிறார்களோ தெரியவில்லை. எனக்கு தராத பட்சத்தில் எனது மகன் ராஜ்மோகனுக்கு கண்டிப்பாக சீட் தரவேண்டுமென தலைமையிடம் கூறி வருகிறார். திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை தர வேண்டுமென எடப்பாடி பழனிசாமியிடம் டிமாண்ட் வைத்துள்ளாராம். தன்னை மீறி, வேறு யாருக்காவது திண்டுக்கல்லில் போட்டியிடும் வாய்ப்பை கட்சி தலைமை கொடுத்தால், அவர்களுக்கு தோல்வி நிச்சயம், தலைமைக்கு தக்க பாடம் புகட்டுவேன் என தனது ஆதரவாளர்களிடம் வீரவசனம் பேசும் அளவிற்கு வந்துவிட்டாராம் திண்டுக்கல் சீனிவாசன். இதன் வெளிப்பாடாக தற்போது திண்டுக்கல் அதிமுக தொடர்பான நிகழ்ச்சிகளில் மருதராஜ் பெயரும், படமும் மிஸ்சிங் ஆகிறது. இதனால் இரு தரப்பிலும் வார்த்தைப் போர் உச்சத்தை தொட்டுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு சீட் கிடைத்தாலும், எதிர் தரப்பு உள்ளடி வேலை பார்த்தாவது, தோற்க வைக்க கங்கணம் கட்டி திரிகின்றனராம்… இதனால் திண்டுக்கல் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு அதிகரித்துள்ளது.

* சிபிஐ விசாரணை மூலம் விஜய்யை கூட்டணியில் சேர்க்க அழுத்தமா? பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ
1. தேர்தல் வந்தால் மட்டும் மோடி தமிழகத்துக்கு தொடர்ச்சியாக வருகிறார். தேர்தல் முடிந்த பின்பு எட்டிக்கூட பார்ப்பதில்லை. தமிழகத்துக்காக எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், நிதியும் ஒதுக்காமல் தொடர்ந்து புறக்கணித்துவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாடகம் போடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்களே? இதற்கு சிறந்த உதாரணம் எய்ம்ஸ் என்றும் கூறுகிறார்களே?
அப்படி ஒன்றும் இல்லை. பிரதமர் தேர்தல் அல்லாத நேரங்களில் தமிழகம் வந்திருக்கிறார். பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். பிரதமர் வரும் விழாக்களுக்கு தமிழக முதல்வர் ஏன் வருவதில்லை. தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதியில் பிரதமர் பங்கேற்றுள்ளார். ஆனால், தேர்தல் நேரத்தில் தான் வருகிறார் மோடி என சொல்லுறீங்க.

2. தமிழ்நாட்டில் பாஜ தொடர்ந்து வளர்ச்சி அடைகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், தேர்தல் முடிவுகளில் அது பெரிய அளவில் மாறவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்ன?
தமிழ்நாட்டில் பாஜ தொடர்ந்து வளர்ச்சியில் தான் இருக்கிறது. நாங்கள் கண்டிப்பாக ஜெயிப்போம். இதை நீங்கள் விரைவில் பார்க்க போகிறீர்கள்.

3. தவெகவை கூட்டணிக்குள் இழுக்க சிபிஐ மூலம் விஜய்க்கு பாஜ அழுத்தம் தருகிறதா? தவெகவை கூட்டணிக்குள் சேர்க்க எடப்பாடி எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறதே?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சிபிஐ என்கொயரி வேண்டும் என யார் கேட்டது. நாங்களா கேட்டோம். தவெக தான் கேட்டார்கள். அவர்கள் கேட்டபடி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. சிபிஐ விசாரணையை வைத்து கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை நாங்கள் செய்யவில்லை. எந்த அழுத்தமும் நாங்கள் தரவில்லை. நாங்கள் எல்லாம் அப்படி கூட்டணி வைக்க ஆசைப்படவில்லை. சோசியல் மீடியாக்களில் வருவது போல் கூட்டணி முயற்சி எதுவும் நடக்கவில்லை. நாங்கள் வலிமையான கூட்டணியாக தான் இருக்கிறோம்.

4. தோல்வி பயத்தில் கோவை தெற்கு தொகுதியில் இருந்து கோவை வடக்குக்கு நீங்க மாற உள்ளதாக கூறப்படுகிறதே? ஆனால் உங்களுக்கும், அண்ணாமலைக்கும் சீட் தரக்கூடாது என்று கோவை அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே?
எனக்கும், அண்ணாமலைக்கும் சீட் தராமல் வேறு யாருக்கு சீட் தர வேண்டும் என நினைக்கிறார்கள். யாருக்கு எந்த தொகுதி அளிக்கப்படும் என எங்களுக்கு தெரியாது.

Tags : Marutharaj ,Mayor ,Dindigul Corporation ,AIADMK ,MGR ,Idhayakanee ,Jayalalithaa ,
× RELATED சொல்லிட்டாங்க…