விழுப்புரம், மார்ச் 14: விழுப்புரம் அருகே திருமணம் நடந்த ஒன்றரை மாதத்தில் காதல்மனைவி தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டிஎஸ்பி விசாரணை நடத்திய நிலையில் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே சென்னகுணம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்வரன். கூலித்தொழிலாளி. சோழாம்பூண்டியை சேர்ந்தவர் தீபவள்ளி(19). இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 28ம்தேதி திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 12ம்தேதி மகேஷ்வரன் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபித்துகொண்ட தீபவள்ளி பேனில் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உடனே வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு இருசக்கர வாகனம் மூலம் முகையூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு தீபவள்ளியின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் காணை காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து செஞ்சி உட்கோட்ட டிஎஸ்பி ரமேஷ்ராஜ் நேரில் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே திருமணமான உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
உயிரிழந்த தீபவள்ளியின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு திரண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீபவள்ளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சாவுக்கு நீதி கேட்டு சென்னை – திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை முடிவடைந்து அறிக்கை வந்தவுடன் இறப்பிற்கான காரணம் தெரிய வரும். தற்போது சந்தேக மரணம் என்றுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து டிஎஸ்பி, கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு மற்றொரு பக்கம் விசாரணை நடைபெற்று வருகின்றன. விசாரணை முடிவில் தான் காரணம் தெரிய வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார். இதனை ஏற்று அவர்கள் உடலை வாங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே காணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் மனைவி தனது கணவர் குடிபோதையில் வந்ததால் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற சென்ற கணவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட மேலும் ஒரு பெண் கணவர் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றரை மாதத்தில் காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
