- திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம்
- திருவண்ணாமலை
- சிகாமணி
- சேரன் தங்கல் கிராமம்
- தண்டராம்பட்டு தாலுகா
- திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை, மார்ச் 13: கள்ளக்காதலை தொடர மறுத்ததால், பெட்ரோல் ஊற்றி பெண்ணை எரித்து கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட் தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா, சேரன் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிகாமணியின் இரண்டாவது மனைவி பரமேஸ்வரி(40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பரந்தாமன்(50) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. தொடர்ந்து சில ஆண்டுகளாக இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். ஆனால், தனது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் கள்ளக்காதலை தொடர் விரும்பாத பரமேஸ்வரி பரந்தாமனிடம் இனிமேல் என்னுடைய வீட்டுக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத பரந்தாமன் தொடர்ந்து பரமேஸ்வரிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 14.2.2015 அன்று தனது வீட்டுக்கு வந்த பரந்தாமனை பரமேஸ்வரி கண்டித்துள்ளார்.
அதனால், ஆத்திரமடைந்த பரந்தாமன், பாட்டிலில் மறைத்துக் கொண்டு வந்த பெட்ரோலை பரமேஸ்வரியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அதில், பரமேஸ்வரி உடல்கருகி அலறினார். தடுத்த அவரது மகள் மீதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து, பரமேஸ்வரியையும் அவரது மகளையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரமேஸ்வரி அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பரமேஸ்வரி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டராம்பட்டு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பரந்தாமனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு குற்ற பொது வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதில், பரமேஸ்வரியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த பரந்தாமனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பரந்தாமனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
