- புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
- முதல் அமைச்சர்
- துணை பேச்சாளர்
- கலசபாக்கம்
- செங்கம்
- புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்
- மு.கே ஸ்டாலின்
- கே.பிச்சண்டி
- கலசப்பாக்கம்…
செங்கம், மார்ச் 11: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
கலசபாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து புதுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராமபிரதீபன், திட்ட இயக்குனர் இரா.மணி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் தணிக்கை மணிவாசகம், மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாமலை, பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் சவுந்தரராஜன், குமார், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் சி.சுந்தரபாண்டியன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூ.5.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது: புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதற்கு பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு அமைச்சர் எ.வ.வேலு கலைஞர் நூற்றாண்டு நிறைவு நுழைவு வாயில் திறந்து வைக்க வருகை தந்த போது, சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பணிகள் துவங்கப்பட்டு கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இக்கட்டிடம் புதுமையான மாடலில் கட்டப்பட்டது. லிப்ட் வசதி உள்ளதால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் செல்லலாம். அதேபோல் ஊராட்சி ஒன்றியத்திற்கு தேவையான அனைத்து அலுவலக கட்டிடங்களும் இக்கட்டிடத்தில் உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக தினந்தோறும் எண்ணற்ற புதிய புதிய திட்டங்களை செய்து வருகிறார். தமிழக முதலமைச்சர் அறிவிக்கும் அத்தனை திட்டங்களும் அமைச்சர் எ.வ.வேலு கலசப்பாக்கம் தொகுதிக்கு பெற்று தருகிறார். கலசபாக்கம் தொகுதியில் திரும்பும் திசை எல்லாம் புதிய சாலைகளும், மேம்பாலங்களும் அரசு கட்டிடங்களும் உள்ளது. இவை அனைத்தும் திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பொன்னி சுந்தரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நவீன்குமார் நன்றி கூறினார்.
