×

சிபிஐ விசாரணையில் முகத்திரை கிழியும்: கரூரில் 41 பேர் பலியின் சகுனியே ஆதவ்தான்: லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு

 

லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கும், அவரது மைத்துனர் ஆதவ் அர்ஜூனாவுக்கும் தொடக்கத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். சமீபத்தில் புதுக்கட்சி தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அளித்த ஒரு பேட்டியில், ‘‘ஆதவ் அர்ஜூனா என்னையும், என் தந்தையையும் பிரிக்க பார்த்தார். அவர் ஒரு அமாவாசை. அவர் எங்கு சென்றாலும் அதிகாரத்தை கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது மைத்துனரும், தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது முதல், உங்கள் நலன் விரும்பியாக நான் ஒரு உண்மையை உரக்க சொல்லிக்கொண்டே இருக்கிறேன். தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முடியாமல் முட்டுக்கட்டை போடுவது ஆதவ் அர்ஜூனாதான்.

இதற்கு பின்னால் அவருடைய சுயநலமும், அதிகார பசியும் மட்டுமே இருக்கிறது. கரூரில் 41 அப்பாவி உயிர்கள் பறிபோன அந்த கோர சம்பவத்துக்கு பின்னணியில் சகுனியாக இருந்து காய் நகர்த்தியவர் இவர் தான். சிபிஐ விசாரணையில், இவரது முகத்திரை கிழியும் என்பது உறுதி. செல்லும் இடமெல்லாம் தன்னைத்தானே தலைவனாக கட்டமைக்க முயல்வது இவரது வழக்கம்.

இதையுணர்ந்தே திருமாவளவன், இவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தினார். என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எங்கள் குடும்பத்தைப் பிரிக்க முயன்றது போல, உங்கள் குடும்பத்தையும் அரசியலையும் சிதைக்க அவர் தயங்கமாட்டார். நான் ஒரு நலம் விரும்பியாகச் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்.

உங்கள் பாதை தெளிவாக இருக்கலாம். ஆனால் பயணிக்க வேண்டிய தடம் வழுக்கலாக இருக்கிறது. கூடவே இருந்து குழிபறிக்கும் துரோக சக்திகளை அடையாளம் காண தவறினால், உங்கள் வெற்றி பாதியிலேயே முடங்கிப்போகும் அபாயம் உண்டு. காலத்தோடு எடுக்கும் துணிச்சலான முடிவே, தவெகவின் எதிர்காலத்தை காக்கும். விழிப்புடன் இருங்கள், வெற்றிக்கான பாதையை சீர் செய்யுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CBI ,Adhav ,Karur ,Martin ,Jose Charles Martin ,Adhav Arjuna ,
× RELATED உலகில் 9 கோள்கள் இருந்தாலும்...